நவம்பர் 2008 இதழ் மடல்வாசல் பகுதியில் நாகப்பட்டினம் கணேச குமாரன் அவர்கள் குறிப்பிட்டிருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவர், "வடக்குவாசல் 5ஆம் வருட கொண்டாட்டத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்'' எனக் குறிப்பிட்டிருந்தார். எவ்வளவு நம்பிக்கையோடு ஓர் ஆண்டுக்கு முன்னதாகவே வாழ்த்தியிருக்கிறார்!
இப்போது ஐந்தாம் ஆண்டில் வடக்குவாசல்.
இதற்கு முக்கியக் காரணம் வாசகர்களே! அவர்களே வடக்குவாசலை வளர்த்தார்கள். வடக்கு வாசலின் வளர்ச்சியினைக் கண்டு பெருமிதம் கொள்பவர்களும் அவர்களே! நவம்பர் 2008 இதழ் மடல்வாசல் பகுதியில் செஞ்சி கா.இர.குப்புதாசு அவர்கள், "வாழும் தமிழுக்கு வளம் சேர்க்கும் வடக்கு வாசலின் தமிழ்ப் பணி வற்றாத ஜுவநதியின் பிரவாகம். ஒரு வாசகன் என்ற நிலையில் பூரிப்படைகிறேன்'' என்று எழுதியிருந்தார். வாசகர்களால் வளர்க்கப்பட்ட வடக்கு வாசலை மதிப்பிடும் இந்தக் கட்டுரையை முழுவதுமாகவே அதன் வாசகர்கள் பார்வையிலேயே மதிப்பிட்டு எழுத முயன்றுள்ளேன். அதுவே, நான் வடக்கு வாசலுக்கும் அதன் வாசகர்களுக்கும் செய்யும் மரியாதை எனக் கருதுகிறேன்.
வடக்கு வாசல் கடந்து வந்த நான்காண்டு காலத்தையும் இனிக் கடக்க உள்ள ஐந்தாமாண்டு காலத்தையும் வடக்கு வாசலின் பொருண்மை மற்றும் உருவ - உள்ளடக்க வளர்ச்சி சார்ந்து
1. தள்ளாடிய காலம்
2. தனிப்பாதை அமைத்த காலம்
3. தலைநிமிர்ந்த காலம்
4. தடம்பதித்த காலம்
5. தலைமை ஏற்கும் காலம்
என வகைப்படுத்தலாம்.
தள்ளாடிய காலம்:
செப்டம்பர் 2005 முதல் ஆகஸ்ட் 2006 வரை வடக்குவாசலுக்கு முதலாண்டு காலம். இக் காலப் பகுதியில் வடக்குவாசல் மிதமிஞ்சிய இலக்கிய போதையில தள்ளாடியது. பெரிய எழுத்தாளர்கள் தங்களின் பங்களிப்பினைத் தொடர்ந்து நல்காமை, விளம்பரங்கள் எதிர்பார்த்த அளவில் கிடைக்காமை, இதழ் விநியோகத்தில் சிக்கல்கள், இதழ் வடிவத்தில் ஓர்மையைப் பின்பற்ற இயலாமை
(1,2,4,5 ஆகிய இதழ்கள் மட்டும் வடிவ அளவில் பெரியவை), இதழ் தோறும் எழுத்துருவில் - அச்சுத்தாளில் - அட்டையின் கடினத் தன்மையில் - பக்க வடிவமைப்பில் என எந்தவித ஒருங்கமைவையும் பின்பற்ற இயலாமை, இதழ்களுக்கு எண்ணிடுவதில் ஏற்பட்ட சட்டச் சிக்கல்; (ஜுலை மற்றும் ஆகஸ்ட் 2006), இதழ் வெளிவருவதில் தாமதம் (டிசம்பர் 2005 - பக்கம்: 2), முடிவு செய்யப்பட்ட தலைப்புகளில் அவற்றிற்கு ஏற்ற செய்திகள் இருந்தும் பக்கமின்மை காரணமாக அடுத்த இதழுக்குத் தள்ளி வைக்கப்படும் "திட்டமில்லாத் தன்மை' (ஏப்ரல் 2006 - பக்கம்: 48) என இத்தனைத் தள்ளாட்டங்களுக்கு இடையேயும் மார்ச் 2006 இல் மூன்று நாட்கள் "இளவேனில் இசைவிழா''வையும், ஜுலை 2006 இல் மூன்று நாட்கள் "மாரி இசைவிழா'' வையும் வடக்குவாசல் இதழ் முன்னின்று நடத்தியமை பாராட்டுக்குரியவையே.
தனிப்பாதை அமைத்த காலம்:
செப்டம்பர் 2006 முதல் ஆகஸ்ட் 2007 வரை வடக்கு வாசலுக்கு இரண்டாமாண்டு காலம். இக் காலப் பகுதியில் வடக்கு வாசல் தனக்கென ஒரு தனிப்பாதையை அமைத்துக் கொள்ளத் தொடங்கியது.
இதுகுறித்து, நவம்பர் 2006 இதழ் மடல் வாசல் பகுதியில் சென்னை உதயம் ராம் அவர்கள், "வடக்கு வாசல் இலக்கிய வாசலாகப்
பரந்து வரிந்திருக்கிறது. நேர்முகம், புத்தக விமர்சனம், தரமான சிறுகதைகள், கருத்துக்கள் பொதிந்த கட்டுரைகள், கவிதைகள், அவற்றிற்கு ஏற்ற நவீன ஓவியங்கள், செய்திகள், சிற்றிதழ் அறிமுகம் என இலக்கியத்தின் அத்தனை அம்சங்களையும் அளவோடு, அழகான அச்சில் வழவழப்பான தாளில் தாங்கி வந்திருக்கும் வடக்குவாசல்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இலக்கியத்தின் அத்தனை அம்சங்களையும் அளவோடு, அழகான அச்சில் வழவழப்பான தாளில் தரும் தனிப் பாணியை வடக்குவாசல் கைக்கொண்டது இக்காலப் பகுதியில்தான்.
ஐனவரி 2007 இதழ் மடல்வாசல் பகுதியில் வேலூர் சி.எஸ்.ப்ரியதாஷினி அவர்கள், "சினிமா இல்லை, அசிங்கமான அரசியல் விமர்சனம் இல்லை, நகைச்சுவை என்ற பெயரில் ஆபாசம் இல்லை, தானே கேள்வி கேட்டுத் தானே பதிலையும் தருகிற மனப்பான்மையும் இல்லை, இவ்வளவு இல்லைகளை வைத்துக் கொண்ட ஒரு பத்திரிகை அதுவும் தமிழில் வருகிறது என்றால் அது வித்தியாசமானது தானே'' எனச் சுட்டிக் காட்டியுள்ளார். தற்காலத் தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் தரமான சிற்றிதழாக வெளிவருவது வித்தியாசமானதுதான்.
தன் சமகால சிற்றிதழ்களை விடத் தனித்து வடக்குவாசல் திகழ இத்தகைய அம்சங்களே முக்கியக் காரணமாக அமைந்தன. வடக்கு வாசல் தனக்கான தனிப்பாதையைத் தனது தரத்தின் அடிப்படையில் தானாகவே வகுத்துக் கொண்டது. இக்காலப் பகுதியில்தான் வடக்கு வாசல் ஒரு பதிப்பகமாக மலர்ந்து, தனக்கெனத் தனிப் பாதையை உறுதிபட உருவாக்கிக் கொண்டது. சங்கர நாராயணன் தொகுத்த சங்கீதத்தோடு தொடர்புடைய 28 தமிழ்ச் சிறுகதைகளை ஜøகல்பந்தி என்ற தலைப்பில் 378 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலாக வடக்கு வாசல் பதிப்பித்தது. மும்பை பி.பி.வெங்கட் மற்றும் குழுவினரின் "நினைத்தாலே இனிக்கும்'' மெல்லிசை நிகழ்ச்சியையும் நடத்தியது.
தலைநிமிர்ந்த காலம்:
செப்டம்பர் 2007 முதல் ஆகஸ்ட் 2008 வரை வடக்கு வாசலுக்கு மூன்றாமாண்டு காலம். இக் காலப் பகுதியில்தான் வடக்குவாசல் வேள்வித் தீபோல தலைநிமிர்ந்தது. "தலைநிமிர்ந்தது' என்று கூறாமல் "தலைநிமிர்த்தப்பட்டது' எனக் கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
தலை நிமிர்த்தப்பட்டமை பற்றி, "பல திசைகளிலிருந்தும் வரும் படைப்புக்கள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு இலக்கியம், தடம் பதிப்பவர்களின் நேர்காணல்கள் என எல்லா வகையிலும் தரமானவற்றையே தந்து வாசக மனங்களில் கலை நேயத்தினை வளர்க்கும் வேள்வியில் ஈடுபட்டு வருகிறது வடக்கு வாசல்'' என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இக்காலப் பகுதியில்தான் ய.சு. ராஜன் மற்றும் சி.டி.சனத்குமார் ஆகியோர் சிந்திக்கத் தூண்டும் கட்டுரைத் தொடர்களை எழுதத் தொடங்கினர். 29-12-2007 நாளிட்ட "தமிழோசை' நாளிதழில் வலம்புரி லேனா "வாசிக்கச் சில சிற்றிதழ்கள்' என்ற தலைப்பில் வடக்கு வாசல் இதழ் பற்றி ஒரு பெருங்குறிப்பு எழுதியுள்ளார். அக்குறிப்பில் வடக்கு வாசல் பற்றிய தம் கருத்தினைத் திரட்டி ஒட்டு மொத்தமாக, "பனி சூழ்ந்த நகரங்கள் அமைந்த திசை வடக்கு. ஆனால், வடக்கு வாசல் தெளிவான சிந்தனைகளோடு திகழ்கிறது'' என ஒரே வரியில் குறிப்பிட்டிருந்தார்;.
வடக்கு வாசல் "ஆசிரியர் பகுதியில்', "வடக்கு வாசல் இதழுக்கு நாளுக்கு நாள் வாசகர்கள் பெருகிய வண்ணம் உள்ளனர் என்பது மிகவும் உவகை அளிக்கும் விஷயமாக உள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் வடக்கு வாசல் இதழ் கேட்டுக் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்போதைக்குச் சிங்கப்பூரிலும் இலங்கையிலும் இதழ்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்'' என்று யதார்த்தா பென்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.
இக் காலப் பகுதியில்தான் வடக்கு வாசல் "மடல் வாசல்' பகுதியில் அதிக எண்ணிக்கையில் (சரியாக 108 கடிதங்கள்) வாசகர் கடிதங்கள் பிரசுரமாகியுள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். வாசகர் கடிதப் பெருக்கத்தைக் குறித்தும் ஒரு வாசகர் கடிதம் வந்துள்ளது. ஐனவரி 2008 இதழ் மடல் வாசல் பகுதியில் புதுதில்லி துவாரகா கி
.வேங்கடராமன் அவர்கள், "மடல் வாசல் பகுதியில் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் குவிந்து கொண்டிருக்கும் கடிதங்கள் வடக்கு வாசல் வாசகர்களால் விரும்பிப் போற்றப்படும் பிரபலமான மாதாந்தரி என்ற கருத்தினைப் பறை சாற்றுகிறது. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய முக்கியமான செய்தி ஆகும்'' என்று குறிப்பிட்டுள்ளார். வாடக்கு வாசலில் மடல் வாசல் பகுதியில் தத்தமது கருத்துக்களை அதிக எண்ணிக்கையில் பதிவு செய்தவர்கள் கோயம்புத்தூர் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், செஞ்சி கா.இர.குப்புதாசு, சென்னை தங்க. சங்கரபாண்டியன் ஆகிய மூவர் ஆவர். இம் மூவருக்கும் வடக்கு வாசல் கடமைப்பட்டுள்ளது.
ஐனவரி 2008 இதழ் மடல் வாசல் பகுதியில் மதுரை முனைவர் சு.முத்துலட்சுமி அவர்கள், "தமிழிலக்கிய வரலாற்றில் இலக்கிய இதழ்கள் வரிசையில் வடக்கு வாசலுக்குத் தனித்ததோர் இடமுண்டு என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது'' என்று உறுதிப் படுத்தியிருந்தார். விழுப்புரம் விழி.பா. இதயவேந்தன் அவர்கள், "தமிழ் இலக்கிய உலகில் சுபமங்களா, கணையாழி போல் கம்பீரமாக தொடர்வது வடக்கு வாசல்'' என முன்மொழிந்துள்ளார். இதுபோலப் பலதரப்பட்ட வாசகர்களின் பலவிதமான பாராட்டு மழையில் நனைந்தபடியே வடக்கு வாசல் தலைநிமிர்ந்தது.
தலைநிமிர்ந்த வடக்கு வாசல் துளியும் தலைக்கனமின்றி, டிசம்பர் 2007 இல் "இலக்கியமேடை'' என்ற பொருண்மையில் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம் பற்றி வைகோ ஆற்றிய இலக்கிய உரை நிகழ்ச்சியையும் பிப்ரவரி 2008ல் "பக்தி இசைவிழா''வையும் முன்னின்று நடத்தி இலக்கியத்திற்கும் தமிழிசைக்கும் புத்துணர்ச்சி அளித்தமை போற்றுதற்குரியதே.
தடம்பதித்த காலம்:
செப்டம்பர் 2008 முதல் ஆகஸ்ட் 2009 வரை வடக்கு வாசலுக்கு நான்காமாண்டு காலம். இக் காலப் பகுதியில் வடக்கு வாசல் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் பணியில் தனது தடத்தினைப் பதித்தது. "இதுதான் வடக்கு வாசல்'' என்ற தனித் தன்மையினை - தடத்தினைத் தானாகவே வடக்கு வாசல் உருவாக்கிக் கொண்டது. நவம்பர் 2008 இதழ் மடல் வாசல் பகுதியில் இளசை அருணா அவர்கள், "ஓர் உண்மையைச் சொல்லவேண்டும். இலக்கிய வாசல்வழி கடந்து வடக்கே வெளியே வர குறைந்தது வடக்கு வாசல் முடிக்க ஒரு மாதமாவது கால அவகாசம் வேண்டும்'' என்று வடக்கு வாசலின் உள்ளடக்கச் செறிவு குறித்துச் சுட்டிக் காட்டியிருந்தார்.
பிப்ரவரி 2009 இதழ் மடல் வாசல் பகுதியில் வடமாதிமங்கலம் புலவர் இராம.வேதநாயகம் அவர்கள், "வண்ண வாசல், எண்ண வாசல், நல்லோர் வாசல், வல்லோர் வாசல், நேர்மை வாசல், நாணய வாசல், தமிழர் வாசல், இமய வாசல்'' எனப் பலவாறு புகழ்ந்துள்ளார். அதே இதழில் தலையங்கப் பகுதியில் யதார்த்தா பென்னேஸ்வரன் "தமிழகத்தின் சிறுசிறு கிராமங்களில் இருந்தும் கூட சந்தாவும் படைப்புகளும் வந்தவாறு உள்ளன'' என்று வடக்கு வாசலின் வீச்சினை ஒரு வரியில் உணர்த்தியிருந்தார்.
ஏப்ரல் 2009 இதழ் மடல் வாசல் பகுதியில் கோவை க.தேவமணி அவர்கள், "கடந்த இரண்டு ஆண்டுகளாக வடக்கு வாசல் படித்து வருகிறேன். நேர்த்தியான வடிவமைப்பு, உட்பொருள், அச்சு, படம் ஆகியவை சிற்றிதழ் என்ற எல்லையைக் கடந்துவிட்ட வெற்றி முரசு'' என்று வடக்கு வாசலுக்குப் பாராட்டும் தமிழ் இலக்கிய உலகில் தனித் தடம் பதித்ததாகச் சான்றிதழும் வழங்கியுள்ளார்.
ஜுன்-2009 இதழ் மடல் வாசல் பகுதியில் சென்னை லெ.நா.சிவக்குமார் அவர்கள், "தரமான காகிதம், நேர்த்தியான அச்சு, உயர்தர இலக்கிய நயம், நடுநிலை சிந்தனை, படைப்பாளிகளுக்குச் சீரான வாய்ப்பு, அரிய தகவல்கள், அற்புதமான புகைப்படங்கள், விளக்கமான கட்டுரைகள், வித்தியாசமான ஓவியங்கள், கதைகளில் கண்ணியம், கவிதைகளில் கட்டுமானம், கருத்துக்களில் கடமையுணர்வு மொத்தத்தில் வடக்கு வாசல் படிப்பவர்க்கு ஒரு சொர்க்க வாசல்'' என்று வடக்கு வாசலின் முழுமை பற்றி எழுதியிருந்தார்.
இக் காலப் பகுதியில் வடக்கு வாசல் பல சாதனைகளைப் புரிந்தது. வடக்கு வாசல் இணைய தளத்தை முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் தொடக்கி வைத்தார். வடக்கு வாசல், "இலக்கிய மலர்-2008'' என்ற தலைப்பில் 37 படைப்பாளிகளின் படைப்புகளைத் தாங்கிய 124 பக்கங்களைக் கொண்ட நூலினை உருவாக்கியது. அதனை முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் வெளியிட்டார். அந்த நூலை ஆய்வுப் பொருளாகக் கொண்டு, திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் பொ. இராமலிங்கம் என்பவர், "வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008'' ஒரு மதிப்பீடு என்ற தலைப்பில் குறு ஆய்வேடு ஒன்றினைச் சமர்ப்பித்தார்.
நவம்பர் 2008 இதழில் இலக்கிய மலர்-2008 குறித்த தமது பதிவாக புதுதில்லி முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்கள், "வடக்கு வாசல் இதழின் இலக்கிய மலர் எளிமையும் ஆழமும் கொண்டு பொலிகிறது. பக்கத்துக்குப் பக்கம் தங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் தெரிகிறது. நீர்த்துவிடாத இலக்கியத்தை உயர்த்திப் பிடிப்பவர்களைக் காலம் கட்டாயம் கணக்கில் வைக்கத் தவறாது. வாழ்க உங்கள் பணி.'' என்று யதார்த்தா கி.பென்னேஸ்வரனை மனந்திறந்து வாழ்த்தியிருந்தார்.
21 மார்ச் 2009 அன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுடன் டெல்லித் தமிழர்களுக்கு ஒரு நேர்காணல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது வடக்கு வாசல். அருட்செல்வரின் பதிப்புப் பணிகள், தமிழ்ப் பணிகள் சமூகப்பணிகள் குறித்தும் வானவியல் சாஸ்திரத்தில் அவருக்குள்ள ஆழ்ந்த ஈடுபாடுகள் குறித்தும் வடக்கு வாசல் வாசகர்களுடன் ஒரு நேர்முகத்தை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்தது வடக்கு வாசல் இதழ்.
ஜுலை 17,18,19 தேதிகளில் மீண்டும் பக்தி இசை விழாவினை வெற்றிகரமாக நடத்தி, வடக்கு வாசல் ஆண்டு தோறும் பக்தி இசை விழாவினை நடத்தும் என்ற நம்பிக்கைத் தடத்தினை வாசக மனங்களில் பதித்தது.
தலைமை ஏற்கும் காலம்:
எளிமை-தெளிவு-உறுதி என்ற நோக்குடன் பயணத்தைத் தொடக்கிய வடக்கு வாசல் ஐந்தாமாண்டில் தனது ஒட்டு மொத்த செயல் பாடும் எத்தன்மையதாக இருக்க வேண்டும் எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இயங்க வேண்டும். அந்த விழிப்புணர்வை அதன் வாசகர்களே அதற்கு ஊட்டவேண்டும்.
தனது சமகால மற்றும் தனக்குப் பிறகான இலக்கிய இதழ்களுக்குத் தாமே ஒரு தலைமையாய் அமைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு வாசகர் வட்ட விரிவாக்கம் மிகமுக்கியக் காரணியாகும். அது குறித்த பல புதிய திட்டங்களை வடக்கு வாசல் நிர்வாகம் ஏற்படுத்திச் செயல்படுத்த வேண்டும்.
மணிக்கொடி காலம், எழுத்துக் காலம், சரஸ்வதி காலம், சுபமங்களா காலம், கணையாழிக் காலம், காலச்சுவடு காலம் என்று தமிழ் இலக்கிய வளர்ச்சிக் காலகட்டத்தைத் தலைசிறந்த சிற்றிதழ்களை முன்னிறுத்திக் குறிப்பிடுவது போல, 2003þக்குப் பிறகான தமிழ் இலக்கிய வளர்ச்சிக் காலகட்டத்தைக் குறிப்பிடும்போது "வடக்கு வாசல் காலம்'' எனக் குறிப்பிடலாம். அதற்குரிய முழுத் தகுதியும் தரமும் வடக்குவாசலுக்கு உண்டு.
Find your life partner through the biggest matrimonial portal on earth..