சனிமூலை
தமிழ் இதழ்கள் மற்றும் ஆங்கில நாளேடுகளுக்கு சுப்புடுவின் கட்டுரைகள் வாங்கி அனுப்பியதில் எதிர்
கொள்ள நேர்ந்த அனுபவங்கள் பற்றி எழுதி வந்தேன். குமுதம் ஜங்ஷன் இதழுக்காக அவர் எழுதிய முதல் கட்டுரை பற்றியும் எழுதியிருந்தேன்.
பொதுவாக எப்போது அவருடைய கட்டுரை அல்லது கடிதம் ஏதேனும் அனுப்பினாலும் அது பிரசுரம் கொள்வது பற்றிய தீவிரம் காட்டுவார் சுப்புடு. பல சமயங்களில் குழந்தை போல நடந்து கொள்வார். கட்டுரை வெளிவந்ததும் காலை அவரிடமிருந்து தொலைபேசி வரும். முழு கட்டுரையினை வாசித்துக் காண்பிக்கச் சொல்வார். எடிட்டிங்கில் விட்டுப் போன வரியைப் பிடித்துக் கொள்வார். “என்ன இப்படி மென்னியைப் பிடிச்சு நெறிச்சுட்டானே’’ என்று அங்கலாய்த்துக் கொள்வார்.
சுப்புடு அவர்கள் மறைந்த போது நான் எழுதிய இரங்கல் கட்டுரை நின்றுபோன தொலைபேசி அழைப்பு’. இந்தக் கட்டுரையை தில்லித் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த இரங்கல் கூட்டத்தில் வாசித்தேன். அவற்றில் இருந்து சில வரிகளை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.
நவீன இலக்கியம் குறித்தும் கவிதைகள் குறித்தும் அவரும் நானும் கருத்துலகில் வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருந்தோம். இருந்தும், ஏதோ ஒன்று எங்கள் இருவரையும் இணைக்கும் ஒரு அற்புதமான மாயத்தைப் புரிந்து வந்தது. எதையும் அவருடன் பேசமுடியும், விவாதிக்க முடியும் என்னும் அற்புதமான சுதந்திரத்தை அனுமதித்து இருந்தார். பல நேரங்களில் ஒரு கடுமையான கருத்து வேற்றுமைக்குப் பிறகும் காலையில் எட்டு மணிக்குத் தவறாமல் ஒலிக்கும் அவருடைய தொலைபேசி அழைப்பு-. அது ஒலிக்கவில்லை என்றால் மனது நிலைகொள்ளாமல் தவிக்கும். இந்தத் தவிப்பும் நிலைகொள்ளாமையும் பல நேரங்களில் என் மனைவியும், மகள்களும் எங்களைப் பரிகசித்து வந்த ஒரு விஷயமாக என் வீட்டில் தொடர்ந்து வந்தது.
சில ஆண்டுகளுக்கு அனுதினமும் காலை எட்டு மணிக்கு என் வீட்டில் ஒலித்த அவருடைய தொலைபேசி அழைப்புக்கள் எப்போதும் ஒரு தகப்பனின் ஆதுரத்தை சுமந்து வரும். ஒரு தோழனின் அன்பினைச் சுமந்து வரும். ஒரு சக யாத்ரியின் பரிவை சுமந்து வரும்.
அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட பிறகு மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் வற்புறுத்தலின் பேரில் அவருடைய தொலைபேசி அழைப்புக்கள் நின்று போயின.
நின்று போன அந்தத் தொலைபேசி இல்லாமல் என் காலை நேரங்களை சகஜமாக்கிக் கொள்ளப் பலகாலம் பிடித்தது எனக்கு.
நேரில் சந்திக்கப் போனாலும் நிறையப் பேசினார். வேண்டினாலும் நிறுத்த மாட்டார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சந்தித்து விட்டுத் திரும்பியதும் மீண்டும் கடுமையான வயிற்று வலியில் அவதிப்படுவார் என்று அவருடைய புதல்வர் மேஜர் ஸ்ரீராம் அவர்களின் துணைவியார் ஜெயஸ்ரீ மிகவும் வேதனைப் படுவார். எனவே சிறிது சிறிதாக பெரியவரை சந்திப்பதும் நின்று போனது.
தன் அந்திம காலத்தில் அவரால் தாங்க இயலாத இழப்புக்கள் அவரை நிலை குலைய வைத்தன என்று சொல்ல வேண்டும். அவர் மிகவும் நேசித்த ஒரு (மகள் வயிற்றுப்) பேரன், இசையிலும் கலையிலும் பெரும் ஆர்வம் கொண்டு நுண்ணிய கூருணர்வும், எல்லா விஷயங்களிலும் நிறைமதியும் கொண்டு துலங்கி பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வந்த அந்தப் பேரனை ஒரு சாலை விபத்து குரூரமாகப் பறித்துக் கொண்டது. வெளியில் அதிகம் காட்டிக் கொள்ள வில்லை என்றாலும் அப்போது உள்ளுக்குள் அவர் சுக்குநூறாக சிதறிப் போயிருந்தார்.
அதைத் தொடர்ந்து அவரைப் பலவகைகளிலும் அரணாக நின்று அரவணைத்த அவருடைய துணைவியார் மரணம் அவரை திசையறியாது மலைக்க வைத்துத் திகைப்பு அளித்தது. மாமியிடம் அவர் எப்போதும் ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்வார். ஒரு குழந்தையைப் பார்த்துக் கொள்வது போன்று இவரை மாமி பார்த்துக் கொள்வதை என் கண்ணால் பார்த்து இருக்கிறேன். இதைப் பற்றி ஒரு கட்டுரையில் மிகவும் விரிவாக எழுதியிருக்கிறேன்.
மாமிக்குத் தெரியாமல் இவர் புகையிலை கலந்த சுபாரி பாக்கினை கடத்துவது பற்றியும் ஒரு கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன். கண்சிமிட்டும் நேரத்தில் சுபாரியை வாயில் அடக்கி எப்போதும் வெறுமனே அசைந்து கொண்டிருக்கும் பொக்கை வாயை இறுக்க மூடி ஏதோ ஞானி தபசில் இருப்பதைப் போலக் கண்களை மூடி பாவனைகள் செய்வதை பலமுறை ரசித்து இருக்கிறேன்.
மாமி இவரைக் காபந்து செய்து போஷித்து வந்ததைப் பற்றித் தனியாக ஒரு நூலே எழுதலாம். குழந்தையைக் கடிந்து கொள்வதைப் போல இவரைக் கடிந்து கொள்வார் மாமி. ஏதோ மிகவும் பயந்தது போல பவ்யம் காட்டி, குழைந்து நடித்து அந்த நேர நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்வார் பெரியவர்.
ஏற்கனவே சொன்னது போல அவருக்கும் எனக்கும் நிறைய வாக்குவாதங்களும் மனவேறுபாடுகளும் மிகவும் கடுமையான மோதல்களும் பல சந்தர்ப்பங்களில் நேர்ந்திருக்கின்றன. பதில் அளிக்கவோ எதிர்வினைகள் புரியவோ அவர் இல்லாத நேரத்தில் அவற்றை இங்கு பதிவு செய்வது மிகவும் நேர்மையற்ற செயலாக இருக்கும்.
அவர் இறந்து போனதும் அதற்காகவே காத்து இருந்தது போல அவரைப் பற்றி சிலர் சில தவறான தகவல்களை மிகவும் அழிச்சாட்டியமாக எழுதியபோது மனது மிகவும் வேதனைப்பட்டது. சுப்புடு உயிருடன் இருந்தபோது இவற்றை எங்கும் பதிவு செய்யும் நேர்மையும் தைரியமும் இல்லாதவர்கள் இவர்கள். இவர்களின் மற்ற எழுத்துக்களிலும் பதிவுகளிலும் எத்தனை நேர்மையும் உண்மையும் இருக்கும்? இவர்களுடைய காரியம் என்றாவது ஒருநாள் அவர்களுக்கே வருத்தத்தை அளிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
தன்னுடைய நேர்ப்பேச்சில் பலரைப் பற்றியும் பலவிதமான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார் சுப்புடு. அவற்றை இந்நேரத்தில் வெளியிடுவது எந்தவகையிலும் நேர்மையான காரியமாக இருக்காது. எனவே பலவற்றையும் என் மனப்பெட்டியில் வைத்து பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் சுப்புடுவால் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள் இப்போது வேறுவகையான ரூபங்கள் எடுத்து வருவதையும் பார்த்து ரசிக்க முடிகிறது. அப்படி மேடையிலும் எழுத்து வழியாகவும் பேசும் இந்த ஆட்கள் வீட்டுக்குப் போய் கண்ணாடியில் தங்களைப் பார்த்துக் கொள்ள மாட்டார்களா என்ன? அப்போது அவர்கள் தங்களுக்கே கேவலமாகத் தோன்றமாட்டார்களா என்ன?
என்னுடைய அலட்சியம், சோம்பேறித்தனம் மற்றும் ஆவண சேகரிப்பில் அக்கறையின்மை போன்ற தீய குணங்களால் நானும் சுப்புடுவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று கூட இப்போது என்னிடம் இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் நான் இயக்கிய முறைப்பெண் நாடகத்துக்கு அவர் தலைமை தாங்கினார். அப்போது தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அவருக்குப் பொன்னாடை அணிவித்த போது அருகில் இருந்தேன். அந்தப் புகைப்படம் கூட இப்போது என்னிடம் இல்லை.
எல்லாவகையான விருதுகளுக்கும் தகுதியான அவருக்கு ஒரு பத்ம விருது கூட இல்லாமல் அனுப்பி வைத்து விட்டோம். இந்தப் பாவத்தில் பலரும் பங்கேற்க வேண்டும். சுப்புடுவால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு வெளி உலகுக்குத் தெரிய வந்த இளையவர்கள் கூட தலைநகருக்கு வந்து விருதுகள் பெற்றுச் சென்றபோது அவர்களை கலைஞர்களாக அடையாளம் காட்டிய சுப்புடுவை ஒதுக்கி வைத்த பாவத்தை தமிழ்க் கலையுலகம் தன் வாழ்நாள் முழுதும் சுமந்தாக வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
ஒரு சிறிய மன ஆறுதல் என்னவென்றால் பலருக்கும் பத்ம விருதுகள் அளித்த கரமே சுப்புடுவை வீடுதேடிச் சென்று ரோஜா மலரைப் பரிசாக அளித்து வந்ததுதான். டாக்டர் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது சுப்புடுவின் வீட்டுக்குச் சென்று அவருடைய உடல் நலன் விசாரித்து வந்தார். இது சுப்புடுவுக்குப் பெரும் ஆறுதலும் விகாசமும் அளித்திருக்க வேண்டும்.
கடந்த ஜøலை மாதம் வடக்கு வாசல் ஏற்பாடு செய்திருந்த சுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் வெற்றிப் பயணமாக அமைந்தது. இந்த இசைவிழா ஏற்பாடுகளின் போது பின்னரங்கில் நடந்தேறிய துரோக நாடகங்கள் பற்றியும் சதிவேலைகள் பற்றியும் என் நெருங்கிய நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும். பல துரோகங்களையும் சதிகளையும் மீறி அந்த விழா பெரிய அளவில் வெற்றி விழாவாக வடிவம் கொண்டது.
இதனை முழுக்க முழுக்க சுப்புடு அவர்களின் ஆன்மா எனக்கு மனம் கனிந்து வழங்கிய பெரும் ஆசியாகத்தான் எடுத்துக் கொள்கிறேன்.
தங்களின் அதீத அன்பினால் பல சந்தர்ப்பங்களில் என்னை நெகிழ வைத்தவர்கள் சுப்புடுவும் அவருடைய துணைவியாரும்-. அவர்கள் என் மீது காட்டிய தனிப்பட்ட பாசத்தின் நெகிழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இழந்த என் பெற்றோர்களின் அன்பின் சாயலைப் பல தருணங்களில் மீட்டெடுத்து இருக்கிறேன்.
நான் ஏற்கனவே சொன்ன ஒரு விஷயத்தை மீண்டும் இங்கே சொல்வது தவிர்க்க முடியாமல் போகிறது.
ஒரு சில விஷயங்களில் என் மீது இறைவன் கருணை காட்டத் தயங்குவதை என்னால் உணர முடிகிறது.
என் மீதும் என் செயல்பாடுகளின் மீதும் என் தந்தையார் நம்பிக்கை கொள்ளத் துவங்கிய காலத்தில் அவரை மரணம் தழுவியது.
க.நா.சுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா, கோமல் சுவாமிநாதன், புரிசை கண்ணப்பத் தம்பிரான் போன்ற மாமனிதர்களுடன் எனக்கான மனநெருக்கம் முகிழ்த்தது அவர்களுடைய அந்திம காலங்களில். எங்கள் மனப்பதிவுகளை ஒருவகையான பாசம் கலந்த நெருக்கத்துடன் பகிர்ந்து கொள்ளத் துவங்கிய சில ஆண்டுகளிலேயே அவர்களை நான் பிரிய நேர்ந்தது. அவர்களின் வரிசையில் சுப்புடுவும் இணைந்து கொண்டார்.
இதற்கெல்லாம் உனக்குத் தகுதி இல்லை என்று என்னிடம் வஞ்சம் கொள்வது போலக் காலம் என்னைத் தண்டித்திருக்கிறது-.
கருணையற்ற காலத்தின் விளையாட்டு இது. காலம் என் மீது இழைக்கும் வஞ்சகம் இது.
காலத்தின் இந்தத் தீரா விளையாட்டை மீறி என் நெஞ்சகத்தில் எப்போதும் வாழும் நினைவுகளை மட்டும் சுமந்து நிற்பேன்.
இனி என் காலம் முடியும் வரை.
ராகவன் தம்பி
| Other articles: |
|---|
|





