டெல்லி நினைவுப் பாதையில் ஒரு பயணம்
கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, தில்லியில் கால் பதித்தது 21 டிசம்பர் 1950. அப்போது எனக்கு
வயது 15 அல்லது 16 இருக்கும்.
ஏறத்தாழ நான்குநாள் பயணம் சென்னையில் இருந்து! மூன்றாம் வகுப்பு என்கிற பிரிவு இந்திய ரயில்வே சேவையில் அப்போது உண்டு. மரப்பலகையில் தான் ஆசனம் / படுக்கை / லக்கேஜ் எல்லாம்! கட்டணம் கொள்ளை மலிவு. சென்னை சென்ட்ரல் - பழைய தில்லி ஜங்ஷனுக்கு நான் செலுத்திய பயணச்சீட்டுக்கான கட்டணம் 35 ரூபாய் தான்! இப்போது 650/þ என்கிறார்கள்!
தில்லிப் பயணம் முழுவதும், நிலக்கரி எஞ்ஜினில் தூசி படிந்து, கள்ளழகனாக உருமாறி, ஆளே அடையாளம் தெரியாத அழுக்கு மூட்டையாக தலைநகரில் காலடி வைத்த நாட்களை மறக்க முடியுமா? தில்லி ஸ்டேஷனில் இருந்து சிவில் லைன் குடியிருப்புப் பகுதிக்கு டோங்காவில் சவாரி. பேரம் பேசத் தேவையில்லை. கறாராக, நாலணா கொடுத்தால் போதும், திமார்பூர் வரை தில்லிப் பல்கலைக் கழக சாலைகளின் வழியே பயணிக்கலாம்! பசுமை போர்த்தியப் பகுதியாக, அப்போதே, இந்த பல்கலைக் கழகச் சாலைகள் பிரசித்தி பெற்றிருந்தன.
தில்லியின் அனைத்துத் திக்குகளிலும், இடங்களிலும் தமிழர்களும் / மலையாளிகளும், சொற்ப எண்ணிக்கையில் மைசூர்காரர்களும் வசித்து வந்த காலகட்டம் அது. சில ஆண்டுகள் கழித்து, சிவில் லைனில் வசித்து வந்த கே.வி.சேஷாத்ரி என்கிற இளைய உயர் அரசு அதிகாரி வீட்டிலிருந்து கரோல்பாக் ராமானுஜம் மெஸ்ஸிற்கு வந்து சேர்ந்தேன். உரிமையாளர் ராமானுஜம் தேவகோட்டைகாரர். மகா உத்தமர், உபகாரி என்கிற பெயரெடுத்தவர். மாதச் சாப்பாடு முப்பது ரூபாய்க்கு, அவரது மெஸ்ஸில் தினமும், விருந்தே படைக்கும் குணவான்! கநாசு, க்ருத்திகா, ஆதவன் தூன். முத்துசாமி, தி.ஜானகிராமன், கோமளாவரதன், வாஸந்தி, பூர்ணம் விஸ்வநாதன், ‘சுந்தா’ என, டஜன் கணக்கில் தமிழ் எழுத்தாளர்களும், கி.கஸ்தூரி ரங்கன், ‘துக்ளக் கே.ஸ்ரீனிவாசன், சுஜாதா என்கிற ஸ்ரீரங்கம் எஸ்.ரங்கராஜனும் அவரவர் பாணியில் இலக்கியம் பயின்று / வளர்த்துக் கொண்டிருந்தார்கள். “அம்பை’ என்கிற சி.எஸ்.லக்ஷ்மியும், பிரபலமாகிக் கொண்டிருந்தார். இவர்கள் எல்லோருக்குமே, தில்லியின் மீது வற்றாத காதல். நல்ல நேரம் கனிந்து வந்தபோது, இவர்களிடம், தனித்தனியாக இதற்கான காரணம் கேட்டபோது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
தில்லியில் ஜனத்தொகை குறைவு. இயற்கை எழில்கள், இடவசதிகள் அதிகம். பஞ்சபாண்டவர் காலத்திலிருந்து ஜவஹர்லால் நேருவின் ஆட்சி காலம் வரையில், பாரதப் பண்பாட்டை, அப்படியே, அச்சு அசலாகக் கடைப்பிடித்து வந்த, பாரம்பரியச் செறிவும் / செருக்கும் மிக்க மக்களை, அவர்களின் கலாசாரப் பேணலைக் காணும்போது, மனம் சிலிர்க்கும்; குதூகலம் பொங்கும்! என்றெல்லாம் அவரவர் ரசனையைச் சொன்னார்கள்!
இப்போது உள்ளது போல், வீதிக்கு வீதி, நகரமெங்கும் Mega Maall, அப்போது இல்லை. ஃபட் - ஃபட்டி’’என்று அழைக்கப்படும் விசாலமான ஆறேழுபேர் அமர்ந்து செல்லும் அப்போதைய ஆட்டோக்களும், இப்போது இல்லை! ஒருமாதச் செலவுக்கு, ஒரு நபருக்கு நூறு ரூபாய் இருந்தால் போதும், அமோகமாக வாழ முடியும்! என்கிற தில்லி அது! பிரதமர் நேருஜி, சாலைகளில் பயணப்படும்போது, அவரது கார் மட்டுமே செல்லும், பந்தா / பாதுகாப்பு / வாகனங்களே கிடையாது! தற்போது, தில்லியின் உள்கட்டமைப்புகள் விரிவடைந்துள்ளன. அருகில் துணை நகரங்கள் பலவும் உருவாகியுள்ளன. வாணிபச் செழிப்பும் - பொருளாதார வளர்ச்சியும் வரலாறு படைத்து வருவதாகவும் கூறப்படுகின்றன! ஆனால், எல்லோருக்கும் நிம்மதி குறைந்து, தொலைந்து, காலம் போய்க் கொண்டிருப்பதையும் தெளிவாக உணர முடிகிறது.
ஆத்மார்த்தமான சந்தோஷங்களைத் தந்து கொண்டிருந்த, பல சமாசாரங்கள் இப்போது, தில்லியில் சாத்யமற்றுப் போய்விட்டன.
உதாரணமாக, 1970 வரையில், குதுப் மினாரின் உச்சிக்கு எவர் வேண்டுமானாலும் ஏறிப்போகலாம்; கீழே தள்ளி சுக்கு நூறாக்கி விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தும் பேய்க் காற்று, நமது உற்சாகத்திற்கு டானிக்காக அமையும் சுகானுபவத்தையும் உணர முடியும். குதுப் மினாரின் உச்சியில், நமது பெயரைப் பொறித்து விட்டும் வரலாம்! நான், அங்கு என்பெயரைப் பதிவு செய்து விட்டுத்தான், கீழே இறங்கினேன். கல்லெழுத்தில் என் பெயர் காலாகாலத்திற்கும் / யுகக்கணக்கில் / அங்கு நிலைத்திருக்கும் என்பதை நினைத்தாலே, இப்போதும் என் உடல் எடையில், உடனடியாக, ஒரு கிலோ அதிகரிக்கும், அதிசயம் நடக்கும்! வாழ்க்கையில் விரக்தி மேலிட்டவர்கள், தற்கொலைக்கு குதுப்மினாரை நாடுவது அதிகமாகவே, 1970க்குப் பிறகு, அங்கு கீழே இருந்து தான் குதுப்மினாரை, அண்ணாந்து பார்த்து, ஆனந்தப்பட்டுக் கொள்ள வேண்டும் என்பது, அரசாங்க சட்டமானது.
இதேபோல், பிர்லா மந்திரின் வண்ணப் பூங்காத் தோட்டங்களில் நாள்தோறும், மாலை வேளைகளில் திருமணத்திற்கு, மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்கும் படலம் நிகழும்! தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பட்டியலில் பிர்லா மந்திரும் சேர்ந்ததால், பூங்காக்களில் எவருமே அமரவோ நடைபயிலவோ கூடாது. கண்ணால் மட்டுமே கண்டு களித்தபடி, நகரலாம் என்கிற நிலைமையும், அதிகார பூர்வமானது! ஆகப் பொதுவில், இவ்வாறு, பலமாற்றங்கள்.
அப்போதெல்லாம், நாம் குடியிருக்கும் வீட்டை மாற்ற நினைத்து, காலி செய்ய முனைந்தால், வீட்டு
உரிமைளார்கள், வாய்விட்டு அழுதே விடுவார்கள்! போக வேண்டும் என்றால் விடமாட்டார்கள். தேவைப்படும் வசதிகளைச் செய்து தருவதாகவும் சத்தியம் செய்து, காலி செய்யாமல் இருப்பதற்காக கணிசமான தொகையும் தந்து, நம்மை ஒருவழி பண்ணிவிடுவார்கள்! இப்போது, இந்த நிலைமை, தலைகீழ்! காலி செய்யச் சொல்லிக் காசு தரும் காலகட்டமிது. வீட்டு உரிமையாளர்களிடம் இவ்வாறு கணிசமான லட்சங்களை பெற்று, காலபோக்கில் ஜனக்புரி, லாரன்ஸ் ரோடு போன்ற பகுதிகளில், சொந்தமாக பிளாட் வாங்கி குடியேறிய தமிழர்களின் எண்ணிக்கையும் டெல்லியில் மிக அதிகம்! இதில் பல பிரபலங்களும் அடக்கம். என்னைப் பொறுத்த வரையில், இன்றையத் தில்லியில், மனிதமனங்கள், விலைவாசிகள், இருப்பிட இடவசதிகள் ஆகியவை தவிர எதுவுமே, மாற்றங்களுக்கு உள்ளாகவே இல்லை, என்பேன்!
நிர்வாக செளகரியத்திற்காக, அரசு, சில பல கோளாறானத் திட்டங்களைச் செயல்படுத்தி, மக்களைப் பிரமாண்டமான அளவிற்கு அச்சப்படுத்தியிருக்கும் இன்றைய தில்லியை, பூலோக சொர்க்கமாக, மனிதகுலம் முழுவதும் நேசித்த அந்த நாளைய தில்லிக்கும் இடையேயான வித்தியாசங்களை ஒப்பிடும் போக்கே தவறு, தகாது என்பேன்!
தில்லி ‘மெட்ரோ’ ரயில், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிசயமே இல்லை! காலங்காலமாக, மின்சார ரயில் ஓடிக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த மெட்ரோ கூடுதல் ஜாலி! அவ்வளவு தான்! ஆனால், கரோல்பாக்கில், இப்போது மிகப்பிரபலமான சைவ உணவகமான ஓம் சரவண பவ அமைந்திருக்கும் இடத்தில் தான், பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் வீடு இருந்தது. அந்த வீட்டில் குடியிருந்த விஞ்ஞானி ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.தான் பின்னாளில், திரு கி.கஸ்தூரி ரங்கனின் கணையாழியின் உபயத்தில் சுஜாதா வாக மாறி இலக்கிய உலகில் அடையாளப்படுத்தப் பட்டு, புகழ் மணக்கும் இலக்கியவாதியாகவும் வரலாறுமாக ஆனார்! என்பது போன்ற தகவல்கள், அந்நாளையத் தில்லிக்கும் / தற்போதையத் தில்லிக்கும் இடையேயான, சுவாரஸ்யமான வித்தியாசமாக இருக்கும் என்பேன், நான்!
தில்லியில் சைகிள்வாலாக்கள் / டோங்கா வாலாக்கள் / ஃபட்-ஃபட் வாலாக்களின் ஆதிக்கம் அதிகமாயிருந்த காலகட்டம் அது. எல்லோருக்கும் சொந்தமாக வீட்டில் சைக்கிள் இருந்தது. வாகன நெரிசலுக்குகான வழியோ - வாய்ப்போ இல்லை. பிரதம மந்திரி செல்லும் காருக்கு முன்பும் / பின்பும் பொதுமக்களின் வாகனங்கள் செல்லலாம். பாதுகாப்பு பந்தா எதுவும் இல்லை. சர்வ சாதாரணமாக, பிரதமர், அம்பாசிடர் காரில், பார்லிமெண்டிலிருந்து தனது தீன்மூர்த்தி இல்லத்துக்குத் திரும்புவதை, நானே, பலமுறை நேரில் கண்டு, வியந்திருக்கிறேன்.
யமுனைக் கரையில், புகழார்ந்த தேசத் தலைவர்களின் சமாதிகள், கல்லறை ஆக்ரமிப்புகள் எதுவும் அப்போது அமைந்திருக்கவில்லை. எனவே, யமுனை நதியின் அசலான / ஆழ / அகலங்களையும், தெளிவான நீரோட்டத்தையும் ரசிக்க முடிந்தது. ராம் லீலா மைதானம், அப்போது வெறும் பொட்டல்காடு, தொழிலதிபர் முந்த்ரா, உர ஊழல் வழக்கில், வரி ஏய்ப்பு மோசடிகளில் சிக்கிச் சிறை வைக்கப்பட்ட ஜெயில் எது தெரியுமா? அப்போது, “திகார்’ தோன்றவே இல்லை. எனவே, தில்லிலியில் ஜெயில் என்பது, கோட்லா ஜெயில் தான். இப்போது, மெüலானா ஆஜாத் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள இடத்தில் தான் ‘கோட்லா ஜெயில்’ இருந்தது. தரைமட்டத்தில், புறாக் கூண்டுகளாக இருபது சிறை அறைகள் மட்டுமே இருந்த ஜெயில் அது. இங்கு முந்த்ராவுக்கு, அவரது துணைவியார், ராஜஸ்தான் மார்வாடிகளின் சம்பிரதாயப்படி, ஆசாரமான உணவு வகைகளையும், குடிநீரையும், காரில் எடுத்து வந்து, சிறைக் கதவுக்கு முன் நிற்பதையும், அவர் குரல் கேட்டு முந்திரா எழுந்து வந்து உணவுத் தட்டைப் பெற்றுக் கொள்வதையும் நான் சில சமயங்களில் நேரில் கண்டிருக்கிறேன். திருமதி முந்த்ரா வந்ததுமே, சிறைக் கதவைத் திறந்து, முந்திராவுக்கு வீட்டு உணவு வகைகளை அனுமதிக்கும்படி, சிறைவார்டனுக்கு உத்திரவாகியிருந்த விவரம், பின்னர் தெரிய வந்தது. சிறை வாசம், குற்றவாளிகளை அச்சப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதற்கு, இந்த ‘கோட்லா ஜெயில்’ ஒன்றே போதும். அவ்வளவு மோசமான புறத் தோற்றமும் - பராமரிப்பும் - கண்டிப்பும் நிறைந்ததாகப் புகழ் பெற்றிருந்த சிறை அது! அந்நாளைய தில்லி வரலாற்றில் ‘கோட்லா ஜெயில்’ மிக முக்கியமான பகுதியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்!
நேருஜி பிரதமராகயிருந்த காலகட்டத்தில், அவரது மாப்பிள்ளை (இந்திராவின் கணவர்), பிரோஸ்காந்தியும் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகயிருந்தார். தொழிலதிபர் முந்திராவின் ஊழல்களை, நாடாளுமன்றத்தில், காரசாரமாகப் பகிரங்கப்படுத்தி அவரை கோட்லா சிறைக்குள் தள்ளிய புண்ணிய கைங்கர்யத்தைச் செய்த நேர்மையான தேசியக் கடமைகளை நிறைவேற்றிய சூப்பர் ஜென்டில்மென் மற்றும் கறைபடாத கரங்களுக்குப் புகழ் பெற்ற அரசியல்வாதி அவர்! அந்த காலம் திரும்புமா? தேசம் உருப்படுமா? என்கிற ஏக்கம் பரவலாக தெரிகிறது!
டெல்லி தொடர்பான என் நினைவுகளும், அனுபவங்களும் பிரமாண்டமானவை, சுவாரஸ்யமானவை, பல வண்ணங்கள் கொண்டவை. ஒரு தனி நூலுக்கு உரியவை. சுழலும் காலம் ஒத்துழைத்தால் நிச்சயம் எழுதுவேன்.

ஏ.ஆர்.ராஜாமணி
| Other articles: |
|---|
|





