தாரீக் மஸூத் மாதிர் மொய்னா: மதமும் மானிட விடுதலையும்...
உலக மயமாதலை ஒட்டி அடையாளங்கள் தொலைந்து வரும் சூழலில், மொழி ஒன்றே ஒரு நாட்டின்
விடுதலைக்கான குரலாக விளங்குவதற்கான சாட்சியமே பங்களாதேஷ். இந்தியப் பிரிவினையை ஒட்டி பாகிஸ்தான், கிழக்குப் பாகிஸ்தான் எனப் பிளவுண்ட நாடுகளுள் கிழக்குப் பாகிஸ்தான் 1971இல் பங்களாதேஷ் என்னும் தனிநாடாக விடுதலை பெற்றதன் வரலாற்றைப் பேசுவதற்கான திரைப்படங்கள் பலவுண்டு. அவற்றுள் தாரீக் மஸூத்தின் (Tareque Masud) “மாதிர் மொய்னா’ (Matir Moina, 2002) என்னும் திரைப்படம் ஒரு வரலாற்று ஆவணம் மட்டுமல்ல. சிறந்த கலைப்படமும்கூட.
2002இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்றது இத்திரைப்படம். உலகெங்கிலும் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாக்களிலும் பல விருதுகள் பெற்றுள்ளது.
இன்று தாரீக் மஸ÷த் நம்மிடையே இல்லை. தனது படத்திற்கான வெளிப்புறக் காட்சிகளுக்காக இடங்களைத் தேர்வு செய்து விட்டு டாக்கா திரும்பும் வழியில் சாலை விபத்தில் 2011ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதியன்று காலமான செய்தி உலகத் திரைப்படக் கலைஞர்களை, ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இன்று திரைப்பட வரலாற்றில் தாரீக் மஸூத்தின் பெயரைச் சொல்வதற்கு “மாதிர் மொய்னா ஒன்றே போதும்.
மனித ஜீவன்கள் எல்லாம் வானில் சுதந்திரமாக பறக்கத் துடித்தாலும் அவை என்றும் மத, இனம், மொழி என்னும் அடையாளங்களால் பிணைக்கப் பட்டவையே. விடுதலை, அமைதி எல்லாம் வெறும் கரைகளே அல்லது ஏக்கங்களே. விடுதலை வேண்டி நிற்கும் சபிக்கப் பெற்ற மனித வாழ்வின் குறியீடே மண் பறவை என்னும் பொருள்படும் ‘மாதிர் மொய்னா’ என்னும் இத்திரைப்படம்.
இப்படத்தில் காட்சிபெறும் ‘மதரஸா’ கல்விக்கூடம் என்ற அளவில் இளங் சிறார்களின் மனத்தை
மதத்தின் வழிக் கட்டமைக்கும் ஒரு நிறுவனமாகச் சுட்டப் பட்டுள்ளது. ஒரு பக்கம் மதராஸôவின் கெடுபிடிகள், இறைக் கல்வி என்பதன் பேரில் இளங்சிறார்களின் மீது கட்டவிழ்த்து விடப்பெற்ற உடல் மற்றும் மனரீதியான வன்முறைகள் இவற்றுக்கிடையே மனித நேயம் கொண்ட ஆசிரியர்கள் இருந்தும் அந்நிறுவனம் என்றும் ஒடுக்கு முறையின் சின்னமாக உள்ளது என்பதை சுட்டுகின்றன படத்தின் காட்சியமைப்பு.
ஃபெலினியின் அமர்கார்டு திரைப்படத்தில் இதனையொத்த, கிறித்துவ இறையாண்மைக் கல்விக்கூடத்தைக் காணலாம். மதரஸôவில் உண்மையான முஸல்மான் தினமும் ஐந்து தடவை தொழுகை நடத்த வேண்டும் என்பது பற்றியும் ஆபிரகாம் தன் உயிருக்கு இனிய மகனை இறைவனுக்காகப் பலியிடும் காட்சி பற்றியுமான தொன்மங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆபிரகாம் தன் மகனை இறைவனுக்காக, பலியிடுதல் இன்னும் இவை போன்ற மதம் சார்ந்த தொன்மங்களின் வழி உலகின் எல்லா மதங்களுமே இறைவனின் பெயரால் என்றும் அடிபணியும் பக்தர்களாக, தீவிர மதவாதிகளாக மனிதர்களை உருமாற்றம் செய்கின்றன. இச்செய்தியே எந்தவிதமான நிலைபாடுகளும் இன்றி மதத்தின் வழி மனிதனின் தேடலின் குறியீடாகச் சொல்லப்பட்டுள்ளது.
கிராமத்துத் திருவிழாக்களின் போது நிகழும் நாட்டார் நிகழ்கலை வடிவங்களில் பங்கு கொள்ளும் முஸ்லீம் - இந்து மத மக்களின் பரஸ்பர அன்பும் நெருக்கமும் நடப்பட்ட நெடிய மரம் ஒன்றின் வழிச் சொல்லப்பட்டுள்ளன. நட்டு வைக்கப் பெற்ற உயர்ந்த மரத்தில் கயிற்றால் பிணைக்கப்பட்டுள்ள தேவ - அசுரப் பாத்திரங்கள் ஏற்ற மனிதர்களை விண்ணில் வலம் வரும் வகையில் அவர்களைப் பிணைத்துள்ள கயிறுகளை இயக்குவதன் மூலம் பார்க்கும் மக்களின் மனத்தைப் பிரமிப்பில் ஆழ்த்தும் கலைநிகழ்வு இப்படத்தில் இடம் பெறுகிறது. ஆகாயத்தில் அசுரனைத் திரிசூலத்தோடு விரட்டிக் கொல்ல விழையும் தேவனாக இடம்பெறும் இக்காட்சிவழி என்றுமே முடிவுறா தேவாசுரப் போராட்டம், நல்லது கெட்டது - இவற்றுக்கிடையே நடைபெறும் போராட்டத்தின் குறியீடாக இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாகச் சுபிகளின் பாடல்களைப் பாடிக் கிராமத்து மக்களை மகிழ்விக்கும் கதாகாலட்சேபப் பாணி நிகழ்வுகள் இரண்டு இப்படத்தில் இடம் பெறுகின்றன. சிறிய சதுர மேடை, எக்தாரா வீணை வாசிப்பவன், மத்தளம் வாசிப்பவன், ஒரு பெண் பாடகி இடம் பெறும் ஒரு பாடல் நிகழ்வு ஒன்று இரவில் கிராமத்தில் நடைபெறுகிறது.
இன்னொரு காட்சியில் ஒரு பெண் பாடகிக்கும் பாடகன் ஒருவனுக்குமான உரையாடல் பாணியில் கச்சேரி நிகழ்கிறது. பெண்ணே இன உற்பத்தி பண்ணுபவளாகவும் மகிழ்வூட்டுபவளாகவும் (Procreation and Creation) விளங்குகிறாள் எனவும் பெண்ணே எங்கும் முதன்மை பெறவேண்டும் எனவும் கூறும் சுபிப்பாடலின் செய்தி இப்படத்தின் வழியே முன்வைக்கப்படுகிறது. கேரளாவில் நடைபெறும் படகு போட்டி போன்று புல்பூர் கிராமத்து நதியில் நடைபெறும் படகுப் போட்டியும் அப்போட்டியின் போது அதில் பங்கு கொள்கிற இந்து முஸ்லீம் மக்கள் நெருக்கமும் பாசப்பிணைவும் நம் மனத்தை நெகிழச் செய்வன. ‘பருத்தி வீரன்’ போன்ற தமிழ்ப் படத்தில் இடம்பெறும் கிராமத்துக் கலைநிகழ்வுகள் கொச்சைப்படுத்தப் படுவதோடு கதையோட்டத்திற்கு தொடர்பு ஏதும் இல்லாத வகையில் இடம்பெறுவதையும் பார்த்துச் சலித்துப்போன நமக்கு இப்படத்தின் கிராமத்துக் கலைநிகழ்வுகள் ஒரு மனநிறைவைக் கொடுக்கின்றன.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இன்று எல்லாமே அரசியலாகி விட்டது எனப் படகோட்டி கரீம், மிலனிடம் சொல்வதை இங்குச் சுட்டவேண்டும்.
மகளின் இழப்புக்கு பிறகு ஹோமியோபதி மருத்துவம் செய்வதை விட்டுவிட்டாலும் பாகிஸ்தான் ராணுவத்தால் தீயிடப்பட்டுச் சிதிலமடைந்து போயிருந்தாலும் அவ்வீட்டின் தலைவன் என்னும் ஆதிக்கவுணர்வால் ஆயிஷா அழைத்தும் வீட்டில் தங்கிவிடும் அவள் கணவன் ஆணாதிக்கச் சமுகத்தின் பிரதிநிதியாக, மதத்தின்மீது தீவிர வெறிகொண்டவனாகப் படைக்கப்பட்டிருந்தாலும், அவனுள்ளும் மகளின் பிரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது கவிதை போல இத்திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு எதிரிணையாக ஆயிஷாவின் பாத்திரப்படைப்பு. கணவனே எல்லாமே என்று இருந்தவள், கணவனைவிட்டு மகளோடு வீட்டைவிட்டு வெளியேறத் துணியும் ஆயிஷாவின் உறுதிப்பாடு உரையாடலின்றி மௌன மொழியால் இப்படத்தில் கவிதையுருக் கொண்டுள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவு நாம் வியந்து பாராட்டப் படவேண்டிய ஒன்று. ஒவ்வொரு காட்சியின் போதும் இயல்பான ஒளியமைப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக பாத்திரங்களுக்கு இடையேயுள்ள மௌனங்கள் இடைவெளிகள் இவற்றினை ஓவியங்களாகப் பதிவு செய்துள்ளார் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மீசுக்முனியேர். தாரீக் மஸூத்தோடு கார் விபத்தில் இறந்துபோன இக்கலைஞனுக்கு நாம் அஞ்சலி செலுத்த வேண்டும்.
விபத்திற்குப் பின்னர், இன்று உடல் தேறிவரும் தாரீக் மஸூத்தின் மனைவி காதரீன் மஸூத் இப்படத்தின் படத்தொகுப்பாளர் ஆவார்.
சிறப்பான படத்தொகுப்பிற்காக இவரைப் பாராட்ட வேண்டும். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இவர் இன்று பங்களாதேஷில் தாரீக் மஸ÷த் இயக்கிய படங்களை வெளியிடுவதற்கான ஒரு வெளியீட்டகம் ஒன்றினை நடத்தி வருகிறார். இப்படத்தின் இசை அதன் தேவையை ஒட்டியது. அதன் இனிமை படம் பார்க்கும் அனைவரையும் ஈர்க்கவல்லது. இன்று இப்படத்தினைப் பங்களாதேஷில் உள்ள திரையரங்குகளில் திரையிடத் தடைவிதித்துள்ளது பங்களாதேஷ் அரசாங்கம். நல்லவேளையாக இப்படத்தில் குறுந்தகடுகளின் விற்பனையைத் தடை செய்யவில்லை.
புதுவைப் பல்கலைக்கழக ஆசிய ஆய்வு மையத்தில் படித்து வரும் பங்களாதேஷ் மாணவியான நடாவாவுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் அவர் மூலம் கிடைக்கப் பெற்ற இப்படத்தின் குறுந்தகடு வழியாக இப்படத்தினை மாணவர்களோடு காணவும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது.
இப்படத்தின் கதை மிகவும் நேர்க்கோட்டில் செல்வது. அனு எனப்படும் அன்வர் என்னும் சிறுவனின் பார்வையில் இத்திரைப்படம் உருக்கொண்டுள்ளது. படத்தின் தொடக்கம் அனுவின் ஊரான புல்பூர் என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ள நகருக்கு வெளியேயுள்ள ‘மதரஸூ’ என்னும் இஸ்லாமிய மதப் பள்ளிக்கூடத்துக்கு வயல்வெளியின் ஊடாகச் செல்வதாகக் காட்சி கொள்கிறது.
மதராஸôவின் தலைமை ஆசிரியரின் கெடுபிடிகள், அங்கு பணிபுரியம் இப்ராஹிம் ஆசிரியரின் ஆதரவு, ரோகேன் என்னும் சகமாணவனின் நட்பு - இவற்றை ஒட்டி எல்லாம் இயல்பான தளத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு இணையாகப் புல்பூர் கிராமத்தில் அனுவின் வீட்டில் அவன் அப்பா, அம்மா, தங்கை இவர்களைச் சுற்றி அவ்வூர் மனிதர்களின் வாழ்நிலை, அதனோடு பிணைந்துள்ள பண்பாட்டுச் சூழல், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனிநாடாக உருக்கொள்வதற்கான அரசியல் பின்னணி சொல்லப்பட்டுள்ளது.
1960இல் ஜெனரல் அயூப்கான் பதவிக்காலத்தில் கிழக்குப் பாகிஸ்தானில் அவாமி லீக் தனித்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கொள்ளும் தருணத்தில், அவரைப் பதவியிலிருந்து ஓரங்கட்டி விட்டு ஜெனரல் யாஹியாகான் தேர்தல் முடிவுகளை நிராகரித்து விட்டுக் கிழக்குப் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியைப் பிரகடனப்படுத்துகிறார். இதற்கான எதிர்ப்பின் குரலாக விடுதலையின் வேட்கை காரணமாக இளைஞர்கள் போராட்டத்தில் இறங்குகின்றனர். அனுவின் சித்தப்பா மிலனும் அவர்களுள் ஒருவர்.
அனுவின் அப்பா காஸிம், ஒரு ஹோமியோபதி வைத்தியர் மட்டுமல்ல, தீவிர மதவாதியும்கூட. அனுவின் தங்கை காய்ச்சலால் உடல்நலமில்லாமல் போய்விட ஹோமியோபதி மருத்துவம் ஒன்றின் மூலம் குணப்படுத்திவிட முடியும் எனத் தம் மனைவியிடம் கடுமையாக வாதிடுகிறார். முடிவில் அவரின் சிகிச்சையினால் எந்தவிதமான பலனின்றி அனுவின் தங்கை இறந்து விடுகிறாள். அனுவின் சித்தப்பா மதராஸூ சென்று அனுவை அழைத்துக் கொண்டு புல்பூர் கிராமத்துக்கு வருகின்றார்.
வரும் வழியில் படகுப் பயணத்தில் படகோட்டி கரீம் மூலம் அனுவின் தங்கை இறந்த செய்தி கேட்டு சித்தப்பாவை கட்டிப்பிடித்துக் கலங்குகிறான். அனுவின் அம்மா ஆயிஷா அவள் அப்பாவைத் திருமணம் செய்து புல்பூர் வரும்பொழுது அனுவின் சித்தப்பாவுக்கும் அவன் அம்மாவுக்கும் ஒரே வயது. அவள் அப்பா கொஞ்சம் வயதானவர். ஆரம்பத்தில் அனுவின் அம்மாவும் சித்தப்பாவும் ஒரே வயதாகையால் அவர்களிடையே ஒரு நெருக்கம், அன்னோன்னியம் இருந்தது. முதலில் மேல்நாட்டு மோகத்தில் உடையணிந்து முழுக்க வெள்ளைக்காரராகக் காட்சியளித்த காஸிம்பாய் ஏதோ ஒரு சூழலில் தீவிர முஸ்லிமாக மாறிவிட்டார். அன்றிலிலிருந்து அவ்வீட்டுச் சூழல் எல்லாம் மாறிவிட்டது. அனுவின் அம்மா வீடே தன் புகலிடம் எனத் தஞ்சம் அடைந்து விட்டாள் எனப் படகோட்டி படகை ஓட்டிக்கொண்டே பேசிக்கொண்டு வருகிறான்.
வீட்டிற்கு வந்த அனு தங்கையைப் பறிகொடுத்த அம்மாவின் துயரத்தில் பங்கு கொள்கிறான். தங்கையின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இடையே புல்பூர் கிராமத்தை நோக்கிப் பாகிஸ்தான் ராணுவம் வருகிறது. ஊர்மக்கள் தப்பிப்பதற்காகப் பக்கத்து காட்டிற்குள் தஞ்சம் புகுகின்றனர். அனுவின் அம்மா தன் கணவனை வீட்டை விட்டுப் பாதுகாப்பிடம் செல்ல வேண்டுகிறாள்.
காஸிம் மனைவியின் கெஞ்சுதலையும் பொருட்படுத்தாது வீட்டில் தங்கி விடுகிறார். மகனோடு ஆயிஷா
பக்கத்துக் காட்டில் புல்பூர் கிராமத்து மக்களோடு தங்கியிருக்கிறாள். துப்பாக்கிக் குண்டு வெடிச்சத்தமும், மனித அலறல்களும் கேட்டுக் கொண்டிருக்க, பயத்தால் உறைந்துபோன கிராமத்து மக்களோடு அன்றைய இரவைக் கழிக்கிறாள் ஆயிஷா. மறுநாள் அனுவோடு வீடு திரும்புகிறாள். தீயினால், குண்டுவீச்சினால் சிதிலமடைந்துள்ள வீட்டின் இடிபாடுகளுக்கிடையே கணவனைக் காண்கிறாள் ஆயிஷா. தன் நூல்கள் எல்லாம் எரிந்து சாம்பலானதைச் சொல்லித் துக்கம் கொள்கிறார். கணவனின் நிலைகண்டு உறைந்து நிற்கிறாள் ஆயிஷா.
மீண்டும் துப்பாக்கி வெடிக்கும் சத்தங்கள், மனித அலறல்கள் கேட்கின்றன. கிராமத்து மக்கள் தங்கள் உடைமைகளோடு பதறியடித்துக் கொண்டு ஓடுகின்றனர். அப்பொழுது ஒரு மூதாட்டி ஆயிஷாவிடம் மீண்டும் ராணுவம் கிராமத்துக்குள் நுழைந்து விட்டதாகச் சொல்கிறாள். அம்மூதாட்டியிடம் அக்கிராமத்தின் நுழைவாயிலாக உள்ள பாலத்தைக் காக்கும் இளைஞர்களைப் பற்றிக் கேட்கிறாள். பாலம் அடியோடு தரைமட்டமாக்கப்பட்டதோடு அப்பாலத்தைக் காக்கும் அக்கிராமத்து இளைஞர்கள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டதாகச் சொல்லிக் கொண்டே ஓடுகிறாள்.
மிலன் ராணுவத்தால் கொல்லப்பட்ட செய்தி கேட்டு இடிந்த வீட்டின் வாசலருகே உறைந்து நிற்கிறாள் ஆயிஷா. திரும்பவும் உணர்நிலைக்கு வந்து அனுவை அழைத்துக் கொண்டு அவள் கணவனைப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
வீட்டின் இடிபாடுகளுக்கிடையே கணவன் நிற்க அனுவை அழைத்துக் கொண்டு ராணுவ முற்றுகையிலிருந்து தப்பிக்க புகலிடம் தேடிச் செல்கிறாள் ஆயிஷா. ஆயிஷா தன்மகளோடு வீட்டை விட்டு வெளியேறும் காட்சியே இறுதிக்காட்சியாகப் படிமம் கொள்கிறது. படத்தின் பங்கு பெற்றோர் பெயர்ப் பட்டியல் திரையில் நெஞ்சை உருக்கும் கருவி இசையுடன் படம் நிறைவு பெறுகிறது.

செ.ரவீந்திரன்
| Other articles: |
|---|
|





