மடல் வாசல்
டிசம்பர் 2011 வடக்கு வாசலின் முகப்பு அட்டைப் படம் மிக அழகாகவும், அற்புதகமாகவும் இருக்கின்றது.
உருவாக்கிய மங்கை மனோவுக்கும் வெளியிட்ட உங்களுக்கும் எமது பாராட்டுக்கள். ‘மும்பை கோட்டாலாக்கள்’ (மதியழகன் சுப்பையா), ‘நம்ம மெட்ரோ’ (ஐயப்பன் கிருஷ்ணன்), ‘குழிமிகு சென்னை இப்போது எழில் மிகு சென்னை எப்போது?’ (அண்ணா கண்ணன்) ஆகிய கட்டுரைகள் பெருநகரத்து வாழ்க்கைச் சூழலையும் - அதை மக்கள் எதிர் கொள்வதையும், நக்கலும் நையாண்டியுமாக எடுத்துரைக்கின்றன. ராஜாஜி நினைவில்’ (என்.ஆர்.ஜெயச்சந்திரன்) கட்டுரையில், சித்தலந்தூர் - காந்தி ஆசிரமம் குறித்த தகவல்களையும், அது உருவானவிதம், அந்த ஆசிரமத்தில் வந்து தங்கிய மிகப் பிரபலமான தேசத்தலைவர்கள் குறித்த செய்திகள் போன்றவற்றை அறியும் போது, அந்த ஆசிரமத்தின் கீர்த்தியினை உணர முடிந்தது. அரிய புகைப்படங்கள் சிலவற்றையும் இக்கட்டுரையுடன் இணைத்திருந்த விதம் பாராட்டுக்கு உரியது. இன்றைய பள்ளிக் குழந்தைகளை, இது போன்ற வரலாற்றுப் பெருமைமிக்க இடங்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் அழைத்துச் செல்லுதல் வேண்டும். அப்போதுதான் கீர்த்திமிகு தலைவர்கள் குறித்த அறிமுகமும், ஒரு புரிதலும் ஏற்படும்.
டெல்லி - நினைவுப் பாதையில் ஒரு பயணம்’ கட்டுரையில், டெல்லி நகரத்தின் பழைய முகத்தை திரு.வி.மீனாட்சி சுந்தரம் அருமையாக வெளிப்படுத்தியிருந்தார். இது போன்ற செய்திகள், நமது முந்தைய தலைமுறையினரின் சமூகம் - அரசியல் - ஆன்மீகம் குறித்த அக்கறைகளை அறிய உதவும். பாராட்டுக்கள். தித்திக்கிற தப்புக்கள்’ (ஏ.ஏ.ஹெச்.கே.கோரி) சிறுகதை சின்னக்கதை எனினும், வானவில்லில் தோன்றும் வண்ணங்களைப் போல - எண்ணங்களில் ஏற்படும் இளமை ததும்பும் உணர்வுகளின் ஓவியம் அது. நன்றி!
கு.இரவிச்சந்திரன், ஈரோடு
புதுச்சேரி மக்கள் மட்டுமே அறிந்து வைத்திருந்த அப்பா பைத்தியம் சுவாமிகளைப் பற்றி வடக்கு வாசல் வழியே உலகெங்கும் தெரிய வைத்து விட்டார் அண்ணாமலை சுகுமாறன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சான்றோர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி! வெளியான ஒன்பது கவிதைகளும் நவரசங்களாக இருந்து நவரத்தினங்களாக ஜொலித்தன.
வ.பழனி, புதுச்சேரி
| Other articles: |
|---|
|





