புனைவின் நிஜம்
கிழக்கு பதிப்பகம்
177/103, First Floor
Ambal’s Building Lloyds Road Royapettah, Chennai-600 014.
Ph: 044-4200-9603
Pages: 440 Rs.250/-
தமிழில் காமத்தை வெளிப்படியாகப் பேசும் எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத் தக்கவரான சாரு
நிவேதிதாவின் புதிய படைப்பு “எக்ûஸல்’ நாவல். கவர்ச்சியான முகப்புடன் அட்டைப்படத்துடன் நல்ல வடிவமைப்பில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந் நாவல் வெளிவருவதற்கு முன்பே இணைய தளங்களில் சாரு நிவேதிதாவாலும் அவரது வாசகர்களாலும் ஒரு நட்சத்திர நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்குரிய பரபரப்பைக் கிளப்பியது. யூடியூபில் அதன் ட்ரைலர் வேறு வந்து வாசகர்களின் இதயத் துடிப்பை அதிகரித்தது.
தமிழில் முதன் முறையாக ‘ஆட்டோ பிக்ஷன்’ என்ற புது வகை எழுத்து முறையில் வந்திருப்பதாக வேறு அறிவிப்பு அமர்க்களப்பட்டது. புதுமையை எப்போதும் விரும்பி வரவேற்கும் நவீன இலக்கிய வாசகர்கள் இடையில் ஒருவகையான பரவச உணர்வு தோன்றிப் பரவியது. ட்ரெயிலரிலும் அவ்வகை எழுத்தில் இயங்கி வரும் மிகக் குறைந்த எழுத்தாளர்களில் உலகில் தான் இரண்டாவது எழுத்தாளர் என்ற பெருமிதமற்ற முகபாவனையுடன் கூடிய சாரு நிவேதிதாவின் அறிவிப்பும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
பலவகையான பரபரப்பான, ஆடம்பரமான விளம்பரங்களுக்கு இடையில், வாசகன் தான் அறிந்த சாரு நிவேதிதாவை மனதில் வைத்துக்கொண்டே தான் நாவலை அணுகுகிறான். உதயா என்ற எழுத்தாளன், அவனது பாலியல் தோழி (கடைசியில் அப்படித் தான் முடிகிறது) மூன்று குழந்தைகளின் தாயான அஞ்சலி, இடையிடையில் வந்து தன் கருத்துகளை வெளிப்படியாகப் பேசும் கொக்கரக்கோ என்று மூன்று பிரதானப் பாத்திரங்களுடன் தடங்கல் இல்லாத மொழி நடையில் பயணிக்கிறது.
உதயாவின் உலக வாழ்க்கை செக்ஸ் என்ற ஒரே வார்த்தையோடு முடிந்து விடுவதால் அவனது சமூகப் பார்வை, அதன் மீதான தன் விமர்சனம் எல்லாமே பாலியல் சார்ந்தே அமைந்து விடுகிறது. எப்படி என்றால் ரத்தம் வழிய அடிபட்டு நிற்கும் நாயைக் கண்ட உதயாவுக்கு உணவுக்கும் உறைவிடத்துக்குமான அதன் தேவை பற்றிய எண்ணத்தை மீறி அதன் கலவி வாழ்க்கைப் பிரச்னை மீதான விரிவான பத்தி எழுதும் அளவுக்கு யாரை அல்லது எதைக் கண்டாலும் அவற்றின் கலவி வாழ்க்கை குறித்தான எண்ணங்கள் உதயாவிடம் நிரம்பித் ததும்புகின்றன.
பொதுவாக இணையத்தில் ஆசிரியரின் எழுத்துகளைப் படித்தவர்களுக்கு நாவலிலில் எந்தப் புதுமையும் கண்டறிய முடியாது. புதிதாகப் படிக்கும் வாசகர்களை ஆசிரியர் நேரடியாக சென்றடைந்து விடுவார். இது போன்ற வகை எழுத்துகளில் இருக்கும் சவுகரியம் அப்படி. உதாரணத்துக்கு சாரு தனக்கான மரியாதையை உலக இலக்கியம் தரவில்லை என்ற புலம்பல் அவருடைய இணையதளத்தில் எப்போதும் வெளிப்படும். நாவலிலிலும் உதயா அடிக்கொரு தடவை இப்படிப் புலம்பிக் கொண்டே இருக்கிறான். எப்போதும் வெளிநாட்டு எழுத்தாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவர்களுக்கு அங்கு கிடைக்கும் மரியாதையும் உதயாவின் மனதில் பெரும் சஞ்சலத்தையும் ஆற்றாமையையும் தான் வாழும் சமூகத்தின் மீதான அசூசையையும் ஏற்படுத்துகிறது. நாற்பதாண்டுகளாக எழுதியும் ஆட்டோவில் தான் பயணிக்க வேண்டி இருக்கிறது. அதுவும் இல்லையென்றால் தன் ஏழை மகன் கார்ப்பரேட் கம்பெனியில் ஈட்டி வாங்கிய சொகுசுக்காரில் தான் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது என்று புலம்பும் போது இன்றைய வாசகனுக்கு உதயா மேல் அளவிட முடியாத பரிதாபம் தோன்றுகிறது.
ஏனென்றால் கடைசி வரை எழுத்துக்காகவே வாழ்ந்து வெறும் அவலை உணவாக உண்டு எத்தனை தொலை வேன்றாலும் நடந்தே சென்று மறைந்து போன மாபெரும் எழுத்தாளர்களை அறிந்தவன் இல்லை வாசகன். இது உதயாவுக்குப் பெரும் சவுகரியமாகப் போய் விடுகிறது.
என்றாலும் அவனைச் சுற்றி இருக்கும் நெருங்கிய வாசகர்கள், ஆத்மார்த்தமான நண்பர்கள் எல்லோருடனுமான நேரடி நட்பினால் உயர் ரக மதுவகைகள், ஆடம்பர வாழ்க்கை என்று கிடைத்தாலும் அவன் மனது அதைத் தாண்டிய வசதி வாய்ப்புகளுக்கு ஏங்குவது அப்பட்டமாகத் தெரிகிறது.
சுந்தரராமசாமியின் ஜே.ஜே யை சேங்கான் என குறிப்பிடும் சாரு தன் பாத்திரமான உதயாவை மிகவும் சாதாரணமான சேங்கானாகப் படைத்திருப்பது ஒரு நகை முரண். உதாரணத்துக்கு ஆடம்பர வாழ்க்கை, கார்பரேட் பாணி நடைமுறைகள், சுற்றிலும் பக்திகளின் நடமாட்டம், அடிமைத்தனமான சீடர்கள் என்று இருக்கும் ஆன்மீக குரு குஷால் தாஸ் (நாவல் ஆட்டோ பிக்ஷன் என்பதால் நிஜ வாழ்வில் யார் அந்த குரு என்பதை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்) பற்றி ஒரே ஒரு சாமான்யப் பார்வையில் அறிந்து கொண்டிருக்க வேண்டிய விஷயங்களை சுத்தமாக அறிந்து கொள்ளாத அப்பாவியாக, “ஞானம்’ வேண்டி செல்லும் பக்தனாக சென்று மாட்டிக் கொள்கிறார்.
இது போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் வசமாக எதிலும் சிக்கிக் கொள்ளாத வரை அவர்களின் பெயரில் பத்திரிக்கைகளில் வெளிவந்த ஆன்மீக மறுமலர்ச்சி தொடர்களின் பேய் எழுத்தாளர்களாக (ஞ்ட்ர்ள்ற் ஜ்ழ்ண்ற்ங்ழ்ள்) இருக்கும் எழுத்தாளர்கள் அந்த சாமியார்கள் பெண்களும் சரசமுமாக மாட்டிக் கொண்டு பிரச்னை என்று வந்த பின் புலனாய்வுப் பத்திரிக்கைகளில் பரபரப்பான வெளிவராத திடுக்கிடும் உண்மைகளை எழுதுவார்கள் என்ற நாவல் வழக்கத்தின் பேரில் உதயாவும் செயóது அதற்கான “விலையை’ பெறுகிறான். திடீர் பல்டி அடித்து இவன் வேறு திசையில் பயணித்ததால் அவனுக்கு சாமியார் தினமும் முகச்சவரம் செய்வது போல் பொழுதொரு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறான். சாமியாருடன் தொலைக் காட்சியில் தோன்றி மக்களை மகிழ்வித்த முன்னாள் நடிகையும் உதயாவின் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை என்று மிரட்டுவதால் தினமும் பயந்து நடுங்குகிறான் உதயா. இது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. பாவம் அந்த ஏழை எழுத்தாளன் இல்லையா?
நாவலின் ஒரு முக்கியமான கட்டத்தில் உதயாவின் மனைவி பெருந்தேவி தொலைநோக்குப் பார்வை மற்றும் திடீர் ஞான திருஷ்டி இவற்றின் கலவையாக சொல்லும் வாக்கியம் இந்த நாவலில் முக்கியத்துவம் பெறுகிறது. “குஷால் தாஸ் சாமியார் சரியில்லை. அவன் பெரிய பிரச்னையில் மாட்டிக் கொள்ளப் போகிறான்’ என்று அவள் சொன்ன மூன்றாம் நாள் தொலைக்காட்சிகளில் குஷாலும் நடிகையும் செய்யும் அந்தரங்க ஆன்மீக பூஜைகள் வெளிவந்து உண்மை வெட்டவெளிச்சமாகிறது. கடைசி மூன்றாம் நாள் வரை குஷாலின் நடவடிக்கையில் உதயாவும் அவன் மனைவியும் கொண்டிருக்கும் தகர்க்க முடியாத நம்பிக்கை எப்பேர்ப்பட்ட சேங்கான் தனம் என்பது வாசகனுக்கு மிகவும் எளிதாகப் புலப்படுகிறது.
தவிரவும் இந்த நாவலில், முகநூலில் (Facebook) வழியாக ஒரு முகமறியாப் பெண்ணுடன் அந்தரங்க சாட் செய்து ஒரு முறை வகையாக மாட்டிக் கொள்கிறான் உதயா. நாற்பது வயதைக் கடந்து விட்டால் அதை வெட்டி எறிந்துவிட வேண்டுமா என்ற தார்மீக கோபத்துடன் பெண்களை பார்த்த கணத்தில் இருந்தே காமத்தில் வீழ்ந்து அவர்களுடன் பாலியல் மொழி பேசும் உதயா அந்த முகமறியாப் பெண்ணுடன் அந்தரங்கமாக காதல் மொழிப் பேச அந்த உரையாடலின் தொகுப்பு ஒரு நாள் அம்பலமாகி விடுகிறது. (Facebook இல் Friend Request அனுப்பினால் அதை எப்படி accept செய்ய வேண்டும் என்று அறிந்திராத அப்பாவி எழுத்தாளரான உதயா இது போன்ற இணைய அபாயங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்). உடனே அதை கையில் எடுத்துக் கொள்ளும் பெண்கள் அமைப்பினர் நாள் தோறும் அவன் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் நடத்தி வருவதால் மனக் கிலேசம் கொள்ளும் உதயா அந்தப் பெண் அனுமதிக்காமல் நான் அப்படி பேசி இருப்பேனா என்று பரிதாபத்துடன் கேட்கும்பொழுது மனதைப் பிசைகிறது. உதயா மீது அளவற்ற அன்பு கொண்ட கொக்கரக்கோ அந்தப் பெண்ணின் ஐ.டி.யை நோண்டி அவளது அந்தரங்க வாழ்க்கையின் ரகசியங்களைக் கண்டுபிடித்து அந்தப் பெண்ணும் பெரிய உத்தமி இல்லை என்ற பேருண்மையை சொல்வதால் இந்த உண்மை தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கும் உதயா மீது மீண்டும் வாசகனுக்கு அளவற்ற இரக்கம் தோன்றுகிறது. ஒரு வகையில் மனதைத் தேற்றிக் கொண்டு ஆறுதல் அடைகிறார்கள்.
முரணாக வேறு யாருக்கும் இல்லாத துணிச்சலுடன் இந்தியாவின் பெரிய ஊழலில் சிக்கி சிறையில் இறக்கும் ஒரு அரசியல் வாதியின் செயலாளராக இருந்து தற்கொலை செய்து கொண்ட பக்கிரிசாமியின் ஆவி சொல்லும் திடுக்கிடும் உண்மைக் கதைகள் நாவலின் சீரியசான பக்கங்கள். ஆட்டோ பிக்ஷன் என்பதால் அது யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் பிறப்பது இயல்பு தான். ஆனால் வழமையாக தமிழ் அரசியல் குற்ற புலனாய்வுப் பத்திரிக்கைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு அது பெரிய ரகசியமாகத் தெரிய வாய்ப்பில்லை. பக்கிரிசாமியும் உதயாவின் பெருமைகளை எடுத்துரைப்பதில் தவறவில்லை. உதயா குடிப்பதில் கூட புதுமை விரும்பி, நுங்கு நீரை வோட்காவில் கலந்து குடிப்பதைக் கண்டுபிடித்த விஞ்ஞானி, ஆண்டவனே இந்த உதயா முன் தோன்றி வரம் என்ன வேண்டும் எனக் கேட்டாலும் “தன் பத்திரிக்கைக்கு விளம்பரம் தான் கேட்பான் என்று தன்னால் முடிந்தவரை புகழ்கிறான். என்ன தான் ஆட்டோ பிக்ஷன் என்றாலும் ஏன் தன்னை புகழ்ந்து பேசுபவர்களின் குரலை மட்டும் உதயா எடிட் செய்வதில்லை என்ற எண்ணம் நமக்குத் தலைதூக்குகிறது.
நாவலின் ஒரு இடத்தில் உதயா பேரிளம் பெண்களின் பாலுறவு வேட்கையை அந்தரங்க சாட் மூலம் தீர்த்து வைப்பதாகவும் அப்படி செய்திராவிட்டால் அப்பெண்கள் வேறு முடிவுகளுக்கு சென்றிருக்கக் கூடும் என்பதால் அது போன்ற பாலியல் மொழி சாட்டிங்குகள் பெண்களின் அந்தரங்க ஆசைகளுக்கு ஒரு வடிகால் என்ற உண்மையை போட்டு உடைப்பதின் மூலம் பெண்களின் உள்ளார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு தரும் மேன்மையான எழுத்தாளனாக உதயா அறியப்படுகிறான்.
அஞ்சலியின் பாத்திரம் பேசப்பேச அவளுக்குள் உறைந்திருந்த இருட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருவது நாவலின் முக்கியமான தளம் என்றாலும் அதில் இருக்கும் நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகவும் நாவலை தொடர தொடர ஆசிரியர் மேலும் மேலும் அஞ்சலி மீது பரிதாபத்தை ஏற்படுத்த முயல்கிறார் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அஞ்சலியின் இளமைப் பருவத்தில் அவளது குடும்பத்தில் நுழையும் திவாகர் நாய் (அப்படித் தான் அஞ்சலி அழைக்கிறாள்) அவளது கல்லூரிக் காலம் வரையிலும் அவளைப் பாலிலியல் ரீதியாக துன்புறுத்துவதைத் தமிழ் நெடுந்தொடர்களில் வரும் காட்சியமைப்புகளுக்கு எந்த விதத்திலும் குன்றாத குரூரத்துடன் நம் முன் வைக்கிறார் ஆசிரியர். ஆன்மீக பித்துக்கொண்ட அஞ்சலியின் அம்மாவையும் அப்பாவையும் திவாகர் ஆன்மீகம் என்ற போர்வையில் பில்லி சூன்யம் (black magic) செய்து வசியம் செய்து விட்டதால் அவர்கள் இவள் மீதான திவாகரின் பாலியல் தொந்தரவுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் என்று ஆசிரியர் சொல்லிவிடுவதால் தைரியம் கொள்ளும் திவாகர் இன்னும் வித விதமாக அவளை சித்ரவதை செய்யத் துவங்குகிறானோ என்று கூட தோன்றுகிறது.
சுரேû‘ காதலித்து திருமணம் செய்து மூன்று குழந்தைகளையும் பெற்ற பின்னும் அஞ்சலி போன்ற பெண் உதயாவுடன் கட்டுப்பாடற்ற பாலுறவு கொள்வதற்கு உள்ளீடான காரணம் சிறு வயதில் அவள் மீதான அந்த பாலியல் தாக்குதல்கள் தான் என வாசகர்களை எண்ண வைக்க ஆசிரியர் அளவுக்கு மீறி பிரயத்தனப் படுவதாகத் தோன்றுகிறது. கடைசியில் அவர் கிண்டல் செய்யும் ஜன ரஞ்சக எழுத்தாளரான ரமணி சந்திரனின் குடும்ப உறவுச் சிக்கல் கதை போலாகிறது. ஆனாலும் ரமணிக்கும் சாருவுக்கும் இதில் பெரிய வித்தியாசம் இருக்கத் தான் செய்கிறது. அவர் தைரியமில்லாமல் மார்பகம் என்று சொல்வார்.. சாரு துணிச்சல் காரர் என்பதால் முலை என்று எழுதி விடுவார். இது போன்ற விஷயங்களை உடன் இருந்தே கிண்டல் செய்யும் கொக்கரக்கோ பாத்திரமும் சுவாரஸ்யம். உன்னை காதலிக்கும் பெண்கள் மட்டும் ஏன் கூடை நிறைய சோகக்கதைகளை சுமக்கின்றனர் என்று உதயாவை உரிமையுடன் கிண்டல் செய்கிறான்.
நாவலில் குறிப்பிடத்தக்க விஷயம் நாகூர் பற்றிய குறிப்புகள். ஆசிரியர் தன் ஊரின் தெருக்களைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார். நடிகரும் பேச்சாளருமான சிவகுமார் எப்படி பூக்களின் பெயரை சொல்லிலி முடிக்க மணிக்கணக்கில் ஆகுமோ அது போல தெருக்களின் பெயர் மட்டும் இரண்டு மூன்றுப் பக்கங்களுக்கு ஓடுகிறது. (இது போன்ற பட்டியல்கள் நாவலில் அடிக்கடி தென்படுவது வேறு விஷயம்) என்றாலும் எந்த ஒருவனுக்கும் தன் சொந்த ஊரைப் பற்றிச் சொல்ல சலிக்கவே சலிக்காது என்பதும் உண்மை தானே. கொசத்தெருவில் இருந்து ரயிலடி வரை செல்லும் தூரம் தன் இளம் வயதில் வட துருவத்தில் இருந்து தென் துருவத்துக்கு செல்வது போல் இருக்கும் என்னும் பொழுது இளமையில் அவரவர்க்குள் தத்தம் தெருக்கள் எத்தனை பிரமாண்டமாய் உறைந்து போயிருக்கின்றன என்றும் தோன்றுகிறது. அதே போல் அன்பு ஒன்றை மட்டும் காட்டத் தெரிந்த தன் பெரியம்மா பற்றி உதயாவின் விவரிப்பும் நெகிழ்வு.
ஆனால் தன் பெரியம்மா பிம்பத்தை அஞ்சலியில் கண்டேன் என்று உதயா சொல்வது புருடா. அவன் அவளிடம் கண்டது பெற்றது எதிர்பார்த்தது எல்லாம் உடல் சுகம் மட்டுமே. அத்துடன் நாகூர் கதை முடிந்து விடுவதால் நாவலின் கனம் திரும்பவும் குறைந்து விடுகிறது.
நாவலில் சுய முரண்கள் அடிக்கடி தென்படுகின்றன. குறிப்பாக பாலுறவு சிந்தனையில் முற்போக்கு தீவிரம் கொண்ட உதயா அவ்வப்போது பாலியல் நியாயம் பேசுகிறான். அடுத்தவனின் மனைவியான அஞ்சலி உறவு கொள்ளும்போது அவளது கணவன் சத்தமெழுப்ப அனுமதிப்பதில்லை என்று தெரிந்தவுடன் கொதிக்கிறான் உதயா. “படுக்கையில் கூட ஒருத்திக்கு சுதந்திரம் இல்லையா?’ அதே சமயம் அவள் முத்தமிடப் போகிறாள் என்று நினைக்கையில் அவள் வேறொன்றை அவனுக்கு சுவைக்க தர முயல்கிறாள். அதுவும் பொது இடத்தில். உதயா திடீர் இன மானச் சிந்தனையுடன் தமிழ் பெண்ணா நீ ராஸ்கல் என்று கண்டிக்கிறான். அதற்கு அஞ்சலி தரும் பதில் இன்னும் அட்டகாசம் “என்னை இப்படிக் கெடுத்ததே நீதான்.
அதே போல் ஒழுக்கக் கோட்பாடுகளில் எந்த வித நம்பிக்கையும் இல்லாத பக்கிரிசாமியின் ஆவி ஒரு இடத்தில் ஒரு நடிகையைப் பற்றிப் பேசுகிறது. பக்கிரிசாமி தான் செயலாளராக வேலை பார்க்கும் அரசியல்வாதிகóகு சேவை செய்ய வந்திருக்கும் அவள் முன்பு ஒருமுறை தன் பிறப்புறுப்பு தெரியும் வண்ணம் உள்ளாடை அணியாமல் வந்து மீடியாவில் பரபரப்பை ஏற்றி பின் நிறைய சான்ஸ் பெற்றுக் கொண்டவள் என்பதால் அவள் மீது கடும் கோபத்தில் இருக்கிறான். கோபத்துக்கு அது மட்டும் காரணமில்லை “நீ எதை வேண்டுமானாலும் அணியாமல் இரு. தமிழ் நாட்டுக்கு வந்தவுடன் யோகா, பரதநாட்டியம் என்று பேசாதே என்கிறான்.
அதே போல் மூன்று வயதிலேயே சுய இன்பம் செய்யத் தொடங்கி விட்ட உதயாவுக்கு அதைப் பற்றி கல்லூரிக் காலத்தில் தான் தெரியவே வந்தது என்று மாபெரும் புருடா ஒன்றை விடுகிறான். பல இடங்களில் இது போன்ற சகிக்க முடியாத மஹா அபத்தங்கள்.
இது வரைக்கும் இருந்த நடைமுறையை உடைக்கிறேன் பேர்வழி என்று எழுதுபவர்களுக்கு ஒரு பெருத்த சவுகரியம் உண்டு. யார் யாரிடம் என்ன பேசுகிறார்கள். முற்றுப்புள்ளி, கமா போன்ற வஸ்துகளை தூக்கி ஓரங்கட்டி விட்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.
இந்நாவலில் அப்படி இருக்கும் சமாச்சாரங்கள் நிறைய. சமையல் குறிப்புகள், மதுபான விருந்துக்கு தேவையான பொருட்களின் பட்டியல், நீண்ட நேரம் கலவியில் ஈடுபட தேவையான அறிவுரை, பெண்களின் உள்ளாடை பற்றிய தகவல்கள், உணவு மற்றும் உணவகங்கள் பற்றிய விவரணைகள்... இத்தியாதிகள் நிச்சயம் பக்கங்களை நிரப்புவதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை.
அதே போல் கதைக்கு எந்த வித தொடர்புமில்லாத பிரெஞ்சு வாக்கியங்கள். முதலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைந்த ஆங்கிலமோ என்று தான் நினைக்க வைத்தது. அதிலும் உதயாவும் அஞ்சலியும் பேசிக்கொள்ளும் காதல் கடிதங்களில்’ கண்ணே மணியே...
உன்னைப் பார்க்காமல் எனக்கு தூக்கம் வரவில்லை’ என்ற காவிய வார்த்தைகளே தமிழிலும் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் (!) தென்படுவதால் சுவாரசியம் குறைவு.
லகுவான நடை நாவலின் ஓட்டத்தை தடை செய்யவில்லை என்றாலும் உள்ளீடான கட்டமைப்பு ஆட்டோ பிக்ஷன் என்ற பெயரில் இருந்தாலும் பெரிய அளவில் அர்த்தங்களோ முடிச்சுகளோ இல்லாததால் அரைகுறையாக தொக்கி நிற்பது தெரிகிறது.
இவை போன்ற “முயற்சிகள்’ உண்மையாகவே தாங்கள் எழுதும் வகையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்த்தும் வல்லமை கொண்ட, பொய்மையும் ஆர்ப்பாட்டங்களும், சுய தம்பட்டங்களும் அற்ற நேர்மையான எழுத்தாளர்களால் மேற்கொள்ளப் பட்டால் தமிழில் நிச்சயம் இன்னும் புதிய வகை எழுத்து வளரும்.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

வெ.சந்திரமோகன்
| Other articles: |
|---|
|





