கவிதைகள்
அட்டைப் படத்திலிருந்த
அப்பறவைகள்
யாவரும் உறங்கிய பின்
பறக்கத் துவங்கியிருந்தன.
கவிஞனின் நதிகளின் மேல்
பறக்கத் துவங்கி
கவிதையின் மரங்களில் இளைப்பாறின
அவனின் காதலியை
வழியில் சந்தித்து
அவனுக்காக மன்றாடின
அவனின் மரண சுவாசத்தை
மோப்பம் உணர்ந்த அவை
பதறிப் போய்
அவனுக்காக சில ஆறுதல்களை
தூரதேசத்திலிருந்து அள்ளி வந்திருந்தன
கவிஞனின் உலகிற்குள்
கொந்தளித்த சொற்களை
ஒவ்வொன்றாய் கொத்தி கொத்தி
வெளியேற்றின
தங்களுக்கென விளைந்திருந்த
தானியங்களைத் தின்று பசியாறின
விடியற்காலையில்
மறுபடியும் அதே அட்டைப்படத்தில்
வந்து அமர்ந்து கொண்ட
அப்பறவைகளில் ஒன்றின் அடையாளம்
பின் அட்டையில்
வீற்றிருந்த கவிஞனின் முகமாயிருந்தது!
க.அம்சப்ரியா
முடிவிலி
இருள் கவ்விக்கொள்ள
பரபரத்தப் பொழுதொன்றில்
வெளிச்சம்
விடைப்பெற எத்தனித்தது
அது
பயந்து ஓடுவதாக
இருமாத்துக்கொண்ட இருளும்
வெளிச்சத்தை துரத்திப்போய்
அள்ளித்தின்ற வேகத்தில்
தன்னைத்தானே சுட்டுக் கொண்டது.
பின்
இருளுக்குள் இருந்துகொண்டு
இருளையே
வெளிச்சப்படுத்திக் கொண்டிருந்தது வெளிச்சம்.
வெளிச்சத்தால்
பிரகாசித்த இருளோ
தன்னை இருளென்று சொல்லக்கூசி
வெளிச்சம் என்றே
அறிமுகப்படுத்திக் கொண்டது.
ஹா ஹா ஹா ஹா... என்று
முடிவிலியாய்.
புன்னகைக்க தொடங்கி விட்டது
வெளிச்சம்
மணிவண்ணன்
மர்மம் புரியுமோ
பார்க்கும் திசையெங்கும்
கோடுகளாய்த் தெரிந்தன
இல்லாது எட்டிப் பிடிக்க
தடித்த புத்தகங்களில்
இரவு முழுதும்
தேடிப்பார்த்தாயிற்று
நூற்றாண்டு
உபதேச மொழிகளில்
உற்றுத் தேடியாயிற்றுþ
கோடுகளின் நடமாட்டம்
குறித்து
எந்த செய்திகளுமில்லை
தேவன் வருவானென
ஆகாயம் பார்த்துக்
கொண்டிருப்பதில்
சற்று
கரைவதுபோல்
தோற்றம் கொண்டனþ
இங்கு நோக்கி
வருவதுபோல் சிலநேரம்
பகையேற்றி வருகின்றன.
பகைபோற்றி அப்பால்
போவது போல்
பலநேரம் பேசுகின்றன.
பொருளற்றதெனப்
புறந்தள்ளவும்
இயலவில்லை-
எங்கிருந்தோ
தூண்டிலோடு வந்தவன்
ஒவ்வொன்றாய்ப்
பிடித்துக் கூடைக்குள்
போட்டுக்கொள்கிறான்.
அலட்டிக் கொள்ளாமல்
வடிவமொன்று
பேரழகாய்
வெளிச்சத்தில் சிரிக்கும்
மர்மம் புரிந்ததில்லை.
நா.விச்வநாதன்
இரவுப் பிசாசின் நிலாக்காலம்!
பணிநாட்களின் இரவுப் பொழுதும்
விடுமுறை நாட்களின் பகல் பொழுதும்
பிசாசுடன் கழிகின்றன!
இரண்டு சக்கரத்தில்
தெருவின் குறுக்குச் சந்துகளில்
அங்காடிகளின் நெரிசலில்
பந்தயச் சாலையின் நடைத்தடத்தில்
சிலசமயம் மொட்டைமாடியில்!
கூர்நகங்களுடனும் உறுபசியுடனும்
பிறாண்டிக் கொண்டு
அலையும்!
நகர்ந்து போகாத நடுநிசியில்
சுழித்துக் கொண்டோடும்
பேராற்றில் மூழ்குகிறேன்!
இன்னும் தீர்ந்து போகாமல்
நிரம்பும் இருள்!
புலன்களின் தகிப்பில்
மேனி முழுதும் வெக்கைக் கட்டிகள்!
பின்னிரவின் இறுதி நாழிகையில்
நிலவு தெரிந்தது!
ஒற்றைத் தீர்மானத்துடன்
பிசாசைக்
கட்டியணைக்க முற்பட்டபோது
சூரியன் சன்னலுக்குள் நுழைந்தான்!
பூ.அ.இரவீந்திரன்
ஸ்நேக மௌனங்கள்
புன்னகைப் பூவின் வாசமும்
சந்தோச ஒலியின் இசையும்
ஆர்ப்பரித்த நந்தவன
வீடுகளில் நம் ஸ்நேகங்கள்
லயித்து வசித்திருந்தன.
ஒத்துப் போயிராத
காலங்களென புதிதாய்
நந்தவனத்தில் முளைத்த
களைச்செடிகள் உனக்கான
மௌனங்களைப்
பூக்கத் தொடங்கின.
மெüனங்களைச் சுமக்கும்
நம் நந்தவன வீடுகள்
ஆழ்ந்த துக்கத்தை
வளர்த்த இடைவெளியை
ஸ்நேக மரணத்தை
துப்பிய வண்ணம்
மதிய மயானமாய்
நந்தவனத்தை எச்சில்களில்
நிறைக்கிறது.
உன் மௌன மயானங்களின்
ஒரு அறையில் நீ பிணமாகவும்
நான் சிதைமூட்டுபவனாகவும்
வேறொரு அறையில்
நான் பிணமாகவும்
நீ சிதை மூட்டுபவனாகவும்
மிச்சப்பட்டு நிற்கிறோம்.
எரித்துக் கொண்டிருக்கிறது
மொத்த நந்தவனத்தையும்þ
உன்னையும் என்னையும்
துரத்தும் நம் மெüனங்கள்.
சோமா
பழக்க தோஷம்
இலைகள் சருகுகளாய்
உதிர்ந்த போதும்
இன்று உறுதியாய்
வந்து சேர்வேன் என
நம்பின மரக் கிளைகள்
வேகத்தை எனக்காகக்
குறைத்துக் கொள்ள
எத்தனித்தது காற்று.
வருகைக்கு இதமாய்
புதிய வீட்டினைச்
சுத்தம் செய்தது சாரல்
இந்த முறை
கலந்தே தீர்வேன் என்கிற
முடிவில் காதலி
வலசை போதலாய்
வரும் நான்
நீரற்ற வெற்று வெளியில்
என்னை
எதிர் பார்ப்பவர்களுக்காய்
ஏமாற்றம் தராமல்
வந்து போகிறேன்.
சாபங்கள் சகலருக்கும்
மூதாதையர்கள் நியமங்கள்
மீறாமல்
வெட்டப் புழுதியில்
பசுமைக் கனாக் காண்கிறேன்.
பழக்க தோஷம்
வராமல் இருக்க முடியவில்லை.
ஸ்ரீகாந்த் ராணி
சொல்ரூபம்
கவிதையின் உருவாக்கத்திற்காக
காத்திருந்த கணத்தில்
அரூபியாய் போனது உடல்
உயிரின் மிச்சம் பரந்தவெளியில்
அலைந்து திரிந்து
காற்றில் கலந்து ஒலிநிலையில்
மிதந்துக் கொண்டிருக்கிறது
ஒரு சொல்லைச் சுமந்துவர
ஒüõந்துக் கொண்டிருக்கும்
அச்சொல்லைப் பற்றிக் கொண்டு
பறந்து வருவேன் அரூவம் அகற்றி
கனத்த சுமையை உடலிலேற்றி
ஆனந்த கூத்தாடுவேன்
சொல்ரூபத்தை
கண்டடைந்த திருப்தியோடு.
வண்ணைசிவா
அ காலம்
பேரோலத்துடன்
வீழ்ந்து கொண்டிருக்கிறது அருவி
ஆழ்ந்து நீண்ட இருட்சாலையில்
தனிமைக்குள் முடங்கிப் பயணிக்கிறாய்
தாழப்பறந்து கொண்டிருந்த
உன் தனிமையை இருத்தி தணிவித்து
சலிப்பற்றுக் குழைந்து
கனியச் செய்கிறது கள்ளம்
ஆற்றாமையின் கேவல்கள்
அப்பியிருக்கின்ற உன் முகத்தில்
கறைகளற்ற முத்தச் சுவடுகள்
இறுக்கத்தின் கிறக்கத்தில்
உருக்கொள்கிறது பிரியானந்தம்
குரூரமறியாது நீ தேடிப்பறித்த
பூக்களின் வாசத்தை
காற்றையனுப்பி உறிஞ்சி
களவாடிச் சென்று கொண்டிருக்கிறது
காலம்.
பொன்.வாசுதேவன்
| Other articles: |
|---|
|





