இன்னாத கூறல்
எத்தனை தடவை சொன்னாலும் அவளுக்கு அறிவே கெடயாது! நானும் பாக்றேன். இந்தப் பாத்திரம்
எல்லாம் எவ்வளவு நேரமா வழிலேயே கெடக்குது? வருஷம் பத்து ஆனாலும் இதெல்லாம் இங்கயே தான் இருக்கும் முன்ன செய்யற வேலை எது, பின்ன செய்ற காரியம் எதுன்னு தினமும் இவளுக்கு மூணு தடவை கிளாஸ் எடுக்கணும்.... பல்லைக் கடித்து, தலையை ஆட்டினான் அகோபிலம்.
“அடடா, இது என்ன பெரிய விஷயம் மாப்பிளே? வாசல்ல கறிகா வண்டி வந்து துழைப்படி எறங்கிப் போனா விருபாட்டு, நானே எடுத்து எடுத்து வெச்சுட்றேன் என்று கறுப்புக் கண்ணாடி அணிந்த முகத்துடன் குனிந்தாள் சித்தி காத்யாயனி.
“நீங்க சும்மா இருங்க சித்தி, கண் ஆபரேஷன் ஆயி ரெண்டு நாள் கூட ஆகல. நீங்க குனிஞ்சு நிமிந்து இதெல்லாம் செய்யப்படாது. நானே எடுத்து வெச்சிருவேன். ஆனா இவ எப்பத் தான் இதெல்லாம் தெரிஞ்சுக்கறது? எனக்கு இந்த நோட்டு நிறைய விட்டல நாமம் எழுதற வேலை இருக்கு. அந்த வேலை கெட்டுட போறதேனு தான் கோவம் வரது...’’
“வாஸ்தவம் உங்களுக்கும், இவளுக்கும் கல்யாணம் ஆகி முப்பது வருஷம் ஆச்சு. உங்க பொண்ணுக்கே இப்ப கல்யாண வயசு. இவ இன்னும் உங்க கிட்ட டோஸ் வாங்கறவளா தானே இருக்கா? திருந்த மாட்டேங்றாளே!’’ சித்தி இப்படி அகோபிலத்தை ஆதரிப்பது போல பேசினாலும், முப்பது வருடம் ஆகியும் உன் பெண்டாட்டியை இப்படிப் பிடுங்கி எடுக்கிறாயேடா பாவி என்கிற அர்த்தம் தொனிப்பது அகோபிலத்திற்கும் புரிந்தது.
இருந்தாலும், நான் எதுக்கு ùஸôல்றேன்னா... என்றான் அகோபிலம்.
“என்னவாம் சித்தி? வழக்கம் போல என் மேல புகார் பட்டியலா?’’ என்றாள் விருபாட்சி வாங்கி வந்த உருளை, வெங்காயம், முள்ளங்கியை கட்டில் மீது வைத்து.
“அடீ, மொதல்ல தேய்ச்ச இந்தப் பாத்திரங்களை வழிலேந்து எடு. சமையல் அறைக்குக் கொண்டு போ. கையோட அந்தந்த வேலய செய்...’’
என்றாள் சித்தி. “இதானா!’’ என்றாள் விரூ. “ஏய், இங்க வா. ஒனக்கு மூளை இருக்கா, இல்லியா? இன்னிக்கு பிரதோஷம். வெங்காயம், உருளை சித்தி சாப்டுவாளா? வெண்டை வாங்கறத்துக்கு என்ன? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?’’
“எனக்கு ஏதும் காய் வேணும்கறதே இல்ல மாப்ளே. அப்படி சுசி ருசியா சமைச்சு சாப்பிட்ட காலம் போயாச்சு. ரெண்டு அப்பளம் சுட்டாப் போதும்.’’
“இப்படித் தான் நீங்க அவளுக்குப் பரிஞ்சுப் பேசியே அவளைக் கெடுக்கிறீங்க. உங்கக்காவும் இப்படியே தான். அவளுக்கு எப்பத் தான் புத்தி வரும்கறேன்?’’
“சரி மாப்பிளே, நீங்க ஆச்சு, உங்க சம்சாரம் ஆச்சு, ஆசை தீரத் திட்டுங்கோ, நாகுறுக்க வர்ல. அவளும் ரிடையர் ஆயிட்டா. இன்னும் என்ன அவளுக்குப் புத்தி சொல்ல வேண்டி இருக்கு? அவ என்ன பித்தா, பைத்தியமா? புடவையைக் கிழிச்சிண்டு நிக்றாளாங்ற ஆதங்கத்துல சொன்னேன்.’’
“சித்தி, நீ கொஞ்சம் பேசாம இரேன்.” அவர் எதையோ பேசிட்டுப் போகட்டும். காதுல வாங்காத என்றாள் விருபா காஸ் அடுப்பில் இன்னொரு முறை காபி போட பாலை ஏற்றியபடி.
“ஹ்ம்! என் தலை எழுத்து. ஜாதகத்தை மாற்றி எழுதி இவளை என் தலைலக் கட்டிட்டீங்க. நான் காஷாயம் கட்டி எந்த நிமிஷமும் இந்தக் குடும்பத்தை உதறிட்டுப் போயிடுவேன், எப்போ, எப்போன்னு நேரம் பாத்திருக்கேங்கறத இவ உணரல....’’
“அடடா, விடுங்க மாப்பிள்ள. நீங்க விட்டல நாமா எழுதற வேலையை ஆரம்பிங்க. இவகிடக்கா. உங்க நல்ல மனசுக்கு ஒரு குறைவும் வராது.’’
அகோபிலம் சென்னையில் சம்பளக்காரன். இவன் ஊதியத்தை ஐந்து மடங்காக உயர்த்திச் சொன்னார் ஜாதகம் வாங்கிக் கொடுத்த புண்ணியவான். விருபாட்சிக்கு சிதம்பரம் அருகே ஒரு கிளை நூலகத்தில் உத்தியோகம். யாரோ பெரியவர்கள் முன்பின் யோசனையின்றி முன் நின்று, எவராவது அரசியல்வாதியைப் பிடித்து இருவருக்கும் சென்னைக்கு மாற்றல் வாங்கி விடலாம் என்று அசட்டு தைரியம் கொடுத்து டும்டும் கொட்ட வைத்து விட்டார்கள்.
ஆரம்ப முதலே துர்வாசரும், விஸ்வாமித்திரமும் ஓர் உருவில் வந்த மாதிரி எதற்கு எடுத்தாலும் கோபப்படுகிறவனாக இருந்தான் அகோபிலம். கோபம் தான் அவன் சொத்து. எவராலும் விருபாட்சிக்கு சென்னைக்கு மாற்றல் வாங்கித் தர முடியவில்லை. அகோபிலம் அடிக்கடி ஓடி ஓடி சென்னையில் இருந்து சிதம்பரம் வர நேர்ந்தது.
மைத்துனப் பயல்கள் கையால் ஆகாதவன்கள், ஃபிராடு பயல்கள் என்று கத்தினான் அகோபிலம்.
பதினைந்து வருட முடிவில் ஒரு வழியாக விருபாட்சிக்கு சென்னைக்கு மாற்றல் ஆயிற்று. அவளின் ஜென்ம நட்சத்திரம் பூராடம் ஜாதகத்தை எங்கே தூக்கிச் சென்றாலும் ஐயோ என்றார்கள். அதனாலேயே அவளின் திருமணம் முப்பத்தி மூன்று வயதில் தான். விருபாட்சிக்கே பூராடம் மீது எரிச்சல், ஒரு சோதிடரை அழைத்து ரோகிணி என்று எழுதி அதற்கேற்ப ஜாதகம் தயாரித்துக் கொண்டாள், தன் வயதிலும் இரண்டைக் குறைத்து.
குழந்தை மீனாட்சியும் பிறந்து ஓர் ஆண்டு ஆயிற்று. வீட்டு நடுக் கூடத்தில் குழந்தையின் முதல் ஆயுஷ் ஹோமத் தீ ஜோராக எரிகிறது. ரோஹிணீ நக்ஷ்த்ரம்...’’ என்கிறார் புரோகிதர். “ஓய் சாஸ்திரி நிறுத்தும்! எங்க பொண்ணு பூராடம் ஐயா! என்று ஓர் ஆட்சேபக் குரல் எழுகிறது யார்? விருபாட்சியின் ஓர் அச்சு பிச்சு தாய்மாமன் தான். “மாமா உஸ், உஸ்! என்று அதட்டுகிறார்கள். அது எப்படி பூராடத்தை ரோகிணிம்பான் அந்த சாஸ்திரி? மாமா விடுவதாக இல்லை. ஐயோ மாமா, சும்மா இரேன் விஷயம் இப்படி...’’ என்று யாரோ காதைக் கடிக்கிறார்கள். “இருக்கட்டுமே? அதான் கல்யாணமும் ஆயி, குழந்தைப் பிறந்து ஒரு வருஷம் ஆச்சே? மாப்பிள்ளை டைவர்ஸ் பண்ணிடுவானோ? பூராடம்னே சொல்லும் சாஸ்திரிகளே! இன்னும் உச்சஸ்தாயியில் பேசுகிறார் மாமா.
போதாதா? ஏற்கெனவே அகோபிலம் எதற்காவது குதிப்பவன். இப்படி ஒரு விஷயம் கிடைத்தால் விடுவானா? காலத்திற்கும் புலம்பித் தள்ள அவனுக்குப் பிடி கொடுத்தது போல ஆயிற்று. காலப் போக்கில் அகோபிலத்தின் கம்பெனியை மூடி விட்டார்கள். இவனும், சக ஊழியர்களும் பணம் கேட்டு முதலாளி மீது கேஸ் போட்டு இருக்கிறார்கள். குடும்ப வண்டி ஓடுவது விருபாவின் சம்பளத்தில் மட்டுமே.
ஆனாலும் அகோபிலத்தின் அதிகாரக் கொடி தான் பறக்கும். விரூவுக்கு மாமியார், நாத்தனார் எல்லாம் அகோபிலம் தான். “ஏய், இங்க ஏன் குப்பையைப் பெருக்கல? அங்க ஏன் எண்ணெய் சிந்திக்கெடக்கு? அயர்ன் பண்ணி வந்த துணிகளை பீரோல அடுக்க மாட்டியா?’’
டெல்லி சித்தி காத்யாயனிக்கு கண் ஆபரேஷன் செய்த டாக்டரின் கிளினிக் அகோபிலம் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. அவள் ஒரு வாரமாக இங்கே தங்கல். விரூவின் மாமியார் திதி வந்தால் மகளுக்கு உதவ அவளின் அம்மா விருத்தாம்பிகா திருவான்மியூரில் இருந்து மந்தைவெளி வந்து இரண்டு நாட்கள் இருப்பாள். அகோபிலம் படுத்தும் பாடு எந்த விருந்தாளியாலும் சகிக்க முடியாதது.
“என்னடி எப்படி நொய், நொய்ங்றான்? எடுத்ததுக்கு எல்லாம் சாமியாராப் போயிடுவேங்றானே, போய்யா சரிதான், நீ இல்லாம என்னால வழ முடியும்னு சொல்லிலிட்றீ!’’
“ஐயோ, பேசாம இரு. இது ஒரு மாதிரி ஊரையும், வீட்டையும் விட்டு ஓடினாலும் ஓடிடும். எனக்கு இருக்கிறது ஒரு பெண் குழந்தை. நாளைக்கு அவளுக்கு கல்யாணம், காட்சின்னா பிள்ளை வீட்டுக்காரனுக்கு என்ன பதில் சொல்ல? அதான் பல்லைக் கடிச்சுப் பொறுமையா இருக்கேன். மனுஷா சுபாவத்த மாத்த முடியுமா?” என்பாள் விருபா.
நா ஒண்ணும் பைத்தியக்காரண் இல்லே என்று சொல்லிக் கொண்டு எப்போதும் மனைவியை வறுத்து எடுக்கும் அகோபிலம் அடிப்படையில் நல்லவன்.
யாராவது உறவினர் அல்லது தெரிந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தெரிந்தால் உடனே கிளம்பி விடுவான். இரண்டு சாத்துக்குடி வாங்கிப் போய், பத்து நிமிடம் ஆறுதலாக ஏதோ பேசி திரும்பி வந்துவிடும் ரகம் அல்ல அவன். நாள் பத்து ஆனாலும் ஆஸ்பத்திரி வார்டையும், நோயாளியையும் விட்டு அகலமாட்டான். அவ்வப்போது நர்சுகள் சொல்லும் மருந்தை பார்மசியில் வாங்கி வந்தும், எக்ஸ்ரே, ஸ்கேனுக்குப் பணம் செலுத்தியும், எதிர் கடையில் இருந்து இட்லி, காபி வாங்கி வந்து கொடுத்தும் நோயாளி டிஸ்சார்ஜ் ஆகும் வரை கூடவே இருப்பான். பணம், காசு எல்லாம் நோயாளியின் உறவினர்கள் கொடுப்பது தான். அகோபிலம் ஓடி ஆடிப் பாடுபடுவதோடு சரி. ஆனால் கணக்கு வழக்குகள் சரிவரப் பேணி, மீதிப் பணத்தை நேர்மையாக ஒப்படைப்பான். டாக்டர்கள் ரெüண்ட்ஸ் வரும்போது அவர்கள் சொல்வதை கூர்ந்து கவனிப்பான். நோயாளி சார்பாக டாக்டர்களிடம் கேள்விகள் கேட்பான்.
உறவினர், தெரிந்தவர் வீட்டில் சாவு என்றால் அவர்கள் தகவல் தெரிவிக்கக் காத்திருக்க மாட்டான். காற்று வாக்கில் சேதி தெரிந்தாலும் புறப்பட்டு விடுவான். பதினாறு நாட்களும் துக்க வீட்டில்தான் இருப்பான். தன் பசி, தாகம் பொருட்படுத்த மாட்டான். அங்கே ஆல் இன் ஆல் இவன் தான். எந்தெந்த நாளில் சாஸ்திரி எதை எதைச் செய்யணும் என்பதை விவாதிப்பான். கருட புராணத்தில் இதை இப்படித் தான் நடத்துணும்னு சொல்லி இருக்கு, நீங்க சொல்றது தப்பு சாஸ்திரிகளே என்று குரலை உயர்த்துவான். யார் யாருக்கு எவ்வளவு பணம் குடுத்திருக்கு, பாக்கிப் பட்டுவாடா என்ன என்பதெல்லாம் குறித்து வைப்பான். சாவு விஷயங்களில் அகோபிலம் நிபுணன். திருமணங்களைத் தவற விட்டாலும் இது போன்ற நேர்வுகளுக்கு அவன் தவறாமல் ஆஜர். அவன் தலையைக் கண்டு விட்டால், அப்பாடா, அகோ வந்துட்டான், எல்லாம் அவன் பாத்துப்பான்”என்று நிம்மதி வரும்.
அகோவைப் பொறுத்தவரை எல்லாம் ஃப்ரீ சர்வீஸ் தான். எதற்காகவும் அவன் எவரிடமும் பணம் வாங்குவதில்லை. வேலை முடிந்ததோ, போய்க் கொண்டே இருப்பான். “வா, இந்தக் கடையில் சிற்றுணவு சாப்பிடு. விலை உயர்ந்த குளிர்பானம் பருகு....’’ போன்ற உபசரிப்புகளை ஒரு தலை அசைப்பில் நிராகரித்து நடந்து விடுவான். செய்யும் உதவிக்கு நன்றியை எதிர்பார்ப்பவன் அவன் இல்லை.
யாராவது முதியோர் நிற்கவோ, நடக்கவோ சிரமப்பட்டால் விரைந்து அவர்களின் கைப்பிடித்து உதவுவான். வயதில் பெரியவர்களை கவனிக்காமல் அலட்சியப்படுத்தும் வாரிசுகளுக்கு உறைக்கட்டும் என்று “நாளைக்கு நம்ம நிலைமை என்னாவோ? ஆண்டவன் என்ன நினைச்சிருக்கானோ?’’ என்பான்.
அகோபிலம்þவிரு தம்பதிகளுக்கு ஒரே மகள் மீனாட்சி. சென்னையில் ஒரு கம்பெனியில் மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பள வேலை. நான் கல்யாணம் பண்ணிண்டு, என் அம்மாவையும் என்னோட கூட்டிண்டு போயிருவேன். இந்த ஆசாமி (அகோபிலம்) ராமச்சந்திரானு தெருல நிக்கட்டும் என்பாள்.
மாலை வேலைகளில் ராமகிருஷ்ண மடம் சென்று தியானம், தீபாராதனை, வழிபாடுகளில் கலந்து இரவு ஒன்பது மணிக்கு வீடு திரும்புவான் அகோ. இவளும் ஏன் என்னை மாதிரி ஆன்மீகத்துல ஈடுபட மாட்டேங்கறா? கொடுத்து வெக்காத ஜென்மம்!
இந்த உலகில் அகோவின் ஒரே எதிரி அவன் மனைவி விருபா தான். எல்லாரும் சமர்த்து சாமர்த்தியமா இருக்கற போது இவ மட்டும் ஏன் இப்படி இருக்கா?
“ஏய் மழைத் தூத்தல் போட்றத கவனிக்காம டி.வில மெய்மறந்து கெடக்றியாக்கும்? மொட்டை மாடில காயப்போட்ட துணிகளை எடுக்க மாட்டியா? ஆண்டவன் ஒனக்கு அறிவைக் குடுக்கவே மறந்துட்டான்....’’ படி ஏறி வரும்போதே அகோபிலம் சத்தம் போட ஆரம்பித்து விட்டான்!
கண்ணன் மகேஷ்
| Other articles: |
|---|
|





