கொலையும் செய்யும் குளிர்...
பல ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி மாநகரம் மிகவும் கடுமையான குளிரை சந்திக்கிறது. மிகவும்
அடர்த்தியான பனிமூட்டம் விமானங்களையும் ரயில் வண்டிகளையும் தாமதப்படுத்துகிறது. பயணத்தின் அனுபவத்தைக் கொடூரமாக்கி வருகிறது டெல்லியின் பனிக்காலம். எல்லாவற்றையும் விட வீடற்று தெருக்களில் வசிக்கும் மாந்தர்களின் வாழ்வில் கடும் துயரைக் கூட்டுகிறது இந்தக் குளிர்காலம். தலைநகரில் கூரை இல்லாத் திறந்த வெளியிலும், மரத்தடியிலும், வெறும் கோணிப்பைகளால் மறைக்கப்பட்ட உறைவிடங்களிலும், சிதிலமான குடிசைகளிலும் வசிக்க நேரும் பலரும் குளிரின் கடுமையால் உடல் விரைத்துச் சடலமாகின்றனர்.
இந்தக் குளிர்காலத் தொடக்கத்தில் இருந்து டிசம்பர் மாத இறுதி வரை சுமார் 106 பேர், சாலைகளில் விரைத்து செத்திருக்கிறார்கள் என்று அரசு புள்ளி விபரம் சொல்கிறது. அரசு வெளியிடும் புள்ளி விபரங்கள் பொதுவாக அத்தனை துல்லியமாக இருப்பதில்லை. எனவே, பொதுவான ஒரு சொல்லாடலாக, இந்த ஆண்டின் குளிர்காலத்தில், கடும் குளிரின் காரணமாகப் பலரும் மாண்டிருக்கின்றனர் என்று பொதுமைப்படுத்திச் சொல்லலாம்.
அதிகாரபூர்வமான கணக்கெடுப்பின் அடிப்படையில் டெல்லியில் வீடற்ற ஏழைகளின் எண்ணிக்கை சுமார் 56,000 என்று சொல்லப்படுகின்றது. அதிகாரமற்ற வகையில் பொதுவாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெல்லியின் சாலைகளில் குடியேறி இருக்கிறார்கள் என்று சொன்னால் தவறு இருக்க வாய்ப்பு இருக்காது என்றுதான் தோன்றுகிறது. இவர்கள் அனைவரும் டெல்லியில் பிழைப்பு தேடி வந்தவர்கள்.
தினக்கூலிகளாக, ரிக்ஷா ஓட்டுபவர்களாக, சில்லறை வேலைகளை செய்பவர்களாக டெல்லியின் மக்கள் தொகையில் இணைந்து கரைந்தவர்கள். இவர்கள் டெல்லியின் கொடூரக் குளிரில் விரைத்து மரிக்கும்போது மட்டுமே அரசின் கவனத்துக்கு வருகிறார்கள். துயரம் அளிக்கும் ஏதோ ஒருவகையான கணக்கெடுப்பில் எண்ணிக்கை வழியாக இவர்கள் இணைகிறார்கள்.
இந்த ஆண்டில் ஒருவர் கூட குளிரில் விரைத்து இறக்காமல் இருக்கும் வண்ணம் மாநில அரசுகள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் டெல்லி மற்றும் வட மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. வீடற்ற ஏழைகள் இரவு நேரங்களில் குளிரின் கடுமையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் இரவு நேர மையங்களை மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி அரசு, பெருநகரில் உள்ள அனைத்து இரவு நேர மையங்களையும் சீர்படுத்தி அனைவருக்கும் பயன்படும் வகையில் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றமும் ஆணை பிறப்பித்து உள்ளது.
டெல்லியில் வீடற்றவர்களுக்கான இரவு நேர மையங்கள் இல்லாமல் இல்லை. பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன அல்லது திறக்கப்படாமல் உள்ளன. வசதிக் குறைபாடுகளுடன் உள்ளன.
டெல்லிலியில் உள்ள மொத்தம் 64 இரவு நேர மையங்களில் 21 மையங்கள் மூடப்பட்டன என்று அரசு உச்சநீதிமன்றத்தின் மேலான பார்வைக்கு வைத்தது. எதனால் இந்த மையங்களின் எண்ணிக்கை குறைக்கப் பட்டுள்ளன? ஒருவேளை டெல்லியில் வீடற்ற மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதா? என்ன இது நம்பவே முடியவில்லையே என்று உச்சநீதிமன்றம் ஆதங்கத்தைத் தெரிவித்து உள்ளது. தற்போது (2ஜி ஊழல் வழக்கினைக் கண்காணிப்பது போல) அரசின் இரவு நேர மையங்களை உச்சநீதிமன்றம் தன் கண்காணிப்பில் வைத்துள்ளது.
டெல்லியில் வீடற்ற, வசிக்கக் கூரையற்ற மக்களின் தொகை ஒவ்வொரு ஆண்டும் பல்கிப் பெருகி
வருகிறது. பிஹார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலைநகருக்கு பிழைப்பு தேடி வரும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. வெறும் கனவுகளை மட்டுமே சுமந்து வரும் இவர்கள் வீடற்றவர்கள் எண்ணிக்கையை தலைநகரில் அதிகரிக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில் இவர்களைத் தங்க வைக்க அரசு ஏற்பாடு செய்யும் இரவு நேர மையங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.
காமன்வெல்த் போன்ற அரசு வைபோகங்களைக் காரணம் காட்டி, சென்ற ஆண்டு, வீடற்ற ஏழை மக்கள் பெருமளவில் தலைநகரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். காமன்வெல்த் களேபரங்கள் அமர்க்களப்பட்ட நேரத்தில் பல இரவு நேர மையங்கள் தகர்க்கப்பட்டன. இரவோடு இரவாக தெருக்களில் தங்கியிருந்தோர் விரட்டியடிக்கப்பட்டனர்.
பிழைப்பு தேடி வெளிமாநிலங்களில் இருந்து டெல்லியின் தெருக்களில் குடியேறும் அபாக்கியவான்களுக்கு வீடற்றுப் போவது மட்டும் பிரச்சினை இல்லை. கூரையற்றுப் போவது மட்டும் அவர்களின் துயரம் இல்லை. அடிப்படை சுகாதார வசதிகள் அவர்களுக்குக் கிட்டுவதில்லை. உணவு அவர்களுக்கு ஒரு பிரச்னை. சமைப்பது அவர்களுக்குப் பெரும் பிரச்னை. சாலைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் ஒரு பெரும் பிரச்சினை.
வீடற்றவர்களின் துயரங்கள் கணக்கில் அடங்காதவை. நோய்களுக்கு அதிசுலபமாக இரையாகிறார்கள் இவர்கள். அடிப்படை சுகாதார வசதிகள் இவர்களை எப்போதும் எட்டுவது இல்லை. தெருவில் வசிக்கும் பெண்கள் அனுபவிக்கும் துயரங்கள் எண்ணற்றவை. இவர்களுக்கான இரவு நேர மையங்கள் எண்ணிக்கை குறைவதால் இரவு நேரங்களில் பலசமயம் பாலியல் வன்முறைக்கு இரையாகிறார்கள். குழந்தைகளுடன் உள்ள பெண்கள் பலருக்கு அநேகமாக கூலி வேலை கிடைப்பது இல்லை. எனவே பொருளாதார ரீதியிலும் இவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே டெல்லியில் வீடற்ற குடும்பங்களை சார்ந்த பெண்கள் தாங்கள் பணிபுரியும் வீடுகளை சார்ந்தோ அல்லது ரயில் நிலையம் அல்லது வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில்தான் ஓரளவு பாதுகாப்பாகத் தங்க முடிகின்றது.
தெருக்களில் வசிக்கும் வீடற்ற ஏழைச் சிறுமிகள் பலரும் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தப் படுகிறார்கள். சிறுவர்களின் குழந்தைப் பருவம் சூறையாடப்படுகின்றது. இவர்களில் பலர் குப்பைகளைப் பொறுக்குதல், சில்லறைப் பணிகள் செய்தல், முச்சந்திகளில் பிச்சை எடுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கல்வியும் சுகாதாரமும் இந்தச் சிறுவர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயமாகிப் போகிறது.
சமீபத்தில் மிகவும் மனத்துயரம் தரும் புள்ளி விபரம் ஒன்றை நாளேட்டில் படிக்க நேர்ந்தது. தெருவில் வசிக்கும் வீடற்ற சுமார் 50000 சிறுவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஃப்ளூயிட் டைல்யூட்டர், பூட் பாலிஷ் போன்ற வஸ்துக்களை நுகர்ந்து போதையில் கரைவது, கடும் குளிரை எதிர்கொள்வதற்கு பீடி புகைத்தல், இருமல் மருந்துகளை பாவித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
டெல்லியின் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இந்த விஷயத்தில் தொடர்ச்சியாக அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றனர். குளிர்காலங்களில் இரவு நேர மையங்களை ஏற்பாடு செய்வது மட்டும் அல்லாமல் ஆண்டு முழுதும் 24 மணி நேரமும் இவை போன்ற முகாம்களை தலைநகரில் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்து இருக்கிறார்கள். வீடற்ற மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் மையங்களை அமைக்கும் வகையில் ஒரு ஆய்வுக்குழுவினை நியமிக்க டெல்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்தக் குழுவினர் வீடற்றவர்களின் பிரச்னைகளைப் பரிவுடன் ஆராய்ந்து அவர்களையும் இந்த மாநகரத்தின் வளர்ச்சிக்குத் தங்களின் பங்களிப்பினை நல்குவதற்கு ஏற்ற வகையில் செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கான அடிப்படை சுகாதாரம், அடிப்படை உரிமைகள் காக்கப்பட்டு மிகவும் முக்கியமாக வீடற்ற குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி வசதிகள் அமைத்துத் தரும் வண்ணம் அந்த செயல்திட்டங்கள் இருந்தால் வரும் ஆண்டுகளில் இதுபோன்ற வேதனையான கட்டுரைகளை எழுதுவதற்குத் தேவை இருக்காது.
ஸஞ்ஜயன்
| Other articles: |
|---|
|





