காணாமல் போன கடற்கரை...
மும்பைக்கு நாங்கள் நான்காவது தலைமுறை தமிழ்க் குடும்பம். நாங்கள் சிறுவயதில் ஓடி விளையாடிய
கடற்கரையைக் காணவில்லை என்று இப்போது சொன்னால் உங்களுக்கு வடிவேல் தன் கிணறு காணவில்லை என்று ஜோக் அடித்த மாதிரி இருக்கலாம். ஆனா என் கடற்கரை காணாமல் போனது ரொம்பவும் நிசமானது. என் வீட்டு பெரிய ஜன்னலில் இருந்து பார்த்தால் கடற்கரை தெரியும். மாலை நேரத்தில் மட்டுமல்ல, பள்ளிக்கூடத்திற்கு போன நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அந்தக் கடற்கரை தான் எங்கள் விளையாட்டு மைதானம்.
கொளுத்துகின்ற வெயிலிலும் விளையாண்டிருக்கிறேன். பாடப்புத்தகம் எடுத்துப் படித்தாகவோ வீட்டுப் பாடங்கள் எதுவும் செய்ததாகவோ நினைவில் இல்லை. எங்களைக் கண்டு கடற்கரை பயப்படவில்லை.
பெற்றோர் தான் பயந்து தமிழ்நாட்டில் விடுதிகளுடன் கூடிய பள்ளிக்கூடங்களில் எங்களை சேர்த்து விட்டு நிம்மதியாக இருந்தார்கள். நாங்கள் வளர வளர ஒவ்வொன்றாக இந்த மும்பையின் காட்சிகளும் மாறிக்கொண்டே வந்தது.
அந்த மாற்றத்தில் தான் என் கடற்கரையும் காணாமலே போய்விட்டது. இப்போது என் கடற்கரை இருந்த இடத்தில் தான் பாந்திராþசயான் நெடுஞ்சாலை.
அந்தச் சாலையில் காரில் போகும் போதெல்லாம் இப்பொதும் என் செவிகளில் அந்தக் காணாமல் போன கடலலைகளின் சப்தம் கேட்கிறது.
* * * * * * * * * * * * * *
பாந்திரா என்று சொன்னவுடன் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. மும்பையில் அய்யா வரதராசன் கொடி கட்டிப் பறந்த நேரம். அவர் மும்பையில் இருக்கும் வரை சென்ட்ரல் மாதுங்கா ரயிலடிக்கு அருகில் தான் அவருடைய கணபதி விழா பத்து நாட்களும் நடக்கும். தமிழ்நாட்டின் சினிமா பிரபலப் பாடகர்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள். ஒருமுறை அய்யா வரதராசன் போட்ட பந்தல் தீப்பிடித்து எரிந்து விட்டது. விடியவில்லை. வரதராசன் காலகில்லாவுக்கு வருகிறார். காலகில்லா பகுதி சயானுக்கும் தராவிக்கும் நடுவில் இருக்கும் இடம். என் மாமா சண்முகராசன் அவர்களை எழுப்பி கூட அழைத்துக் கொண்டு பாந்திராவில் இருக்கும் சிவசேனா பால்தாக்கரே வீட்டுக்கு கார் விரைகிறது. அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள்? தெரியாது. ஆனால் வரதராசன் கோபமாக இருந்திருக்கிறார். அன்று மாலைக்குள் எரிந்த பந்தல் மீண்டும் எழுந்து நின்றாக வேண்டும் என்று சொல்லி லிவிட்டு வந்துவிட்டார்கள். அன்று மாலை வழக்கம் போல திட்டமிட்டபடி அங்கே பந்தலில் நிகழ்ச்சி நடந்தது. இந்தச் சம்பவம் மணிரத்தினத்தின் நாயகன் அறியாத நாயகன் கதை.
* * * * * * * * * * * * * * *
சிவசேனா பால்தாக்கரே பற்றிய பேச்சு வந்தவுடன் எனக்கு இப்போது சமீபத்தில் நடந்த அவர்கள் வீட்டுத்
திருமணம் தான் நினைவுக்கு வருகிறது. இந்த திருமணம் ஊடகங்களின் வெளிச்சத்திற்கு அதிகமாக வராத ஒரு திருமணம்! ஏனேனில் இது நிக்காஹ் என்ற திருமணம்.
பேத்தி நேகா, தாக்கரேவின் மூத்தமகன், மறைந்த பிந்துமகாதேவின் மகள். பிந்து மகாதேவ், ராஜ்தாக்கரேவின் நண்பரின் மகன், குஜராத்தைச் சார்ந்த இசுலாமியக் குடும்பத்தைச் சார்ந்தவர் தான் மணமகன் மநன். 04 டிசம்பர் 2011 அன்று மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த திருமணத்தில் தாக்கரேக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கலக்கி இருக்கிறார்கள்.
சிவசேனாவும் மராத்திய நவநிர்மான் சேனாவும் அருகருகே கூடிக்கலந்து நிற்கும் காட்சி ஒருபக்கம் இந்த நிக்காஹின் இன்னொரு ஹைலைட்.
தாக்கரேவின் பேத்தியைத் திருமணம் செய்திருக்கும் மணமகன் திருமணத்திற்கு முன் இந்துவாக மதமாறி விட்டார் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் குடும்பத்தினர் அச் செய்தியை மறுத்து இருக்கிறார்கள்.
இந்த நிக்காஹ் திருமணத்தில் க்ளீன் போல்டாகி இருப்பது யார் என்று போகப் போகத்தான் தெரியும். கோழி முட்டை இடுவதையும் மழை பொழிந்தால் குளம் நிரம்புவதையும் கூட சுடச்சுட செய்தியாக்கும் ஊடகங்கள்... இந்தச் செய்தியை இதுவரை பெரிய செய்தியாக்கவில்லை! இந்த நிக்காஹை செய்தியாக்கி விடக்கூடாது என்ற நிர்ப்பந்தம் என்பது கூட காரணமாக இருக்கலாம்!
* * * * * * * * * * * * * * *
மும்பையில் இருக்கும் ரியல் எஸ்டேட் மவுசுக்கு நடுவில் ஒரு பெரிய மாளிகை சும்மா சாத்திக் கிடப்பதை நினைத்தால் நம்பத்தான் முடியவில்லை. எல்லாம் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் வந்த பிரச்சனை என்றால் நம்புவீர்களா? சவுத் கோர்ட் என்பது தான் அந்தப் மாளிகையின் நிஜப் பெயர். 1936ல் ரூபாய் 2 இலட்சம் செலவில்லே 2.5 ஏக்கர் பரப்பளவில் இத்தாலியின் கொத்தனார்களையும் பளிங்குக் கற்களையும் வரவழைத்துக் கட்டியதாம்.
இன்று சாலை பார்த்த அந்தப் பங்களாவின் மதிப்பு குறைத்துப் பார்த்தாலும் 60 மில்லியன் டாலர் இருக்கும் என்கிறார்கள்! இதைக் கட்டும் போது தனிப்பட்ட அக்கறை எடுத்துக் மேற்கத்திய பாணியில் கட்டினாராம் ஜின்னா.
அப்போது அவர் பாகிஸ்தானுக்கு தந்தையாவோம் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாரோ! என்னவோ...
இங்கிருந்து பாகிஸ்தானுக்குப் பெயர்ந்தவர்களின் சொத்துப் பத்துகளை எல்லாம் “எனிமிஸ் ப்ராப்பர்ட்டி என்று அறிவித்து விட்டார்களாம். ஆனால் இந்தப் பிராப்பர்ட்டியை மட்டும் அப்படி அறிவிக்காமல் நேரு கொஞ்சம் மென்மையாக இருந்ததாக சொல்கிறார்கள். அதோடு 1955ல் நேரு இந்தப் பங்களாவை அப்படியே பாகிஸ்தானுக்கு பரிசாக அறிவிக்கலாம் என்று அமைச்சரவையில் சொல்லப்போக விட்டேனா பார் என்று எல்லோரும் நேருவுக்கு எதிராக கூச்சல் போட்டதால் அது அப்படியே கிடக்கின்றதாம்.
ஜின்னா ஐரோப்பிய நாடுகள் எதற்காவது தூதரகமாக வைக்கலாம் என்று சொன்னாராம். அப்படியும் நடக்கவில்லை. இப்போது அதன் ஒரு பகுதியில் மட்டும் கலாச்சார மையம் செயல்படுகிறது. மற்றபடி... சும்மா சும்மா சும்மா கிடக்குது அந்தப் பங்களா.
* * * * * * * * * * * * * * *
கடந்த ஞாயிறன்று மாலை எழுத்தாளர் மன்றத்தின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் நினைவுச் சொற்பொழிவு என்று என்னைப் பேசச் சொல்லியிருந்தார்கள்.
சரி என்று ஒத்துக் கொண்டு பேசிவிட்டு வந்தேன். 20 டிசம்பர் 2011 அன்று காலை தினத்தந்தியில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.
செய்தியில்: புதியமாதவி, விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் என்று அச்சிட்டு இருந்தார்கள். மற்ற பத்திரிகைகளில் எப்படி வந்திருக்கிறதோ..! தெரியாது. இதற்காகவெல்லாம் நாங்கள் பத்திரிகையாளர்களுடன் சண்டை போடுவதில்லை.
தினசரிகளில் நகைச்சுவை வரக்கூடாது என்று யார் சொன்னது?!!!

புதியமாதவி
| Other articles: |
|---|
|





