அரசால் இணையத்தைக் கட்டுப்படுத்த முடியுமா?
நாங்கள் சின்னப் பையன்களாகப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, கழிப்பறைக் காப்பியங்கள் எங்களைக் கிளுகிளுக்க வைக்கும். யாராவது ஒரு பையன் பெயரையும் ஒரு பெண் பெயரையும் இணைத்து குறிஞ்சித் திணையில் பாடப்பட்டிருக்கும். ஆசிரியைகளுக்கு விஷயம் தெரிய வந்ததும், பிரம்பு பழுக்கும். இன்னும் சில பள்ளிகளில் முரட்டுப் பையன்கள், “தமிழ் ஐயா சாமிக்கண்ணு, கணக்கு டீச்சர் விமலாவை...” என்று ஆரம்பித்துக் காவியங்கள் எழுதியிருப்பார்கள்.
எங்கள் தெருவில் மாமாக்கள் அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசும்போது அசிங்கமான வசைச் சொல் இல்லாமல் குறிப்பிட்டதே இல்லை. அதுவும் பெண் அரசியல்வாதிகள் என்றால் சற்று அதிகமாகவே இருக்கும். எமர்ஜென்சி காலத்தில் எப்படி இருந்தது என்று நினைவில்லை. எனக்கு அப்போது வயது மிகக் குறைவு.
கபில் சிபல் அப்படிப்பட்ட பள்ளிகளில் படித்திருந்திருக்க மாட்டார். அவர் மிகவும் நாகரிகமான குடும்பத்திலிருந்து வந்திருக்க வேண்டும். அவர் வசித்த தெருக்களில் இருப்போர் மிக நளினமாகத்தான் பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.
ஃபேஸ்புக், ட்விட்டர், வலைப் பதிவுகள் என்று பார்த்தால், பெரும்பாலான நேரங்களில் அவை கழிப்பறைச் சுவர்கள் போலத்தான் காட்சி அளிக்கின்றன. மக்களின் மன வக்கிரங்களுக்கு அவை ஒரு வடிகால். கழிப்பறைச் சுவரில் தமிழ் ஐயாவையும், கணக்கு டீச்சரையும் இணைத்து எழுதிய மாணவனுக்கு அவர்கள் இருவர் மீதுமோ அல்லது குறைந்தபட்சம் ஏதோ ஒருவர் மீதோ கடும் கோபம் கொண்டு பழிவாங்க அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. கழிப்பறைச் சுவரில் கக்கிவிட்டான்.
இந்திய ஜனநாயகத்தில் மக்களுக்கு அரசியல்வாதிகள்மீது தாங்கவொண்ணாக் கோபம் உள்ளது. விலைவாசி எகிறுவது, வேலைகள் கிடைக்காமல் இருப்பது, வறுமையில் வாடுவது என்று இவன் திண்டாடும்போது ஊழல் அரசியல்வாதிகள் பணத்தில் கொழிக்கிறார்கள்; கொழுக்கிறார்கள். இவன் ஃபேஸ்புக் ‘சுவற்றில்’ அசிங்கமாக எழுதுகிறான். இன்றைய இணையமும் கணினியும் எழுத்தைத் தாண்டி வேறுபல சாத்தியங்களை இவனுக்குத் தருகிறது. பிறப்புறுப்புகளைப் பற்றியும் உறவுகளைப் பற்றியும் விலாவரியாக எழுதுவதோடு, படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் அவனால் முடிகிறது.
சோனியா காந்தியை அசிங்கமாகக் காட்டிய சில தளங்களைப் பார்த்து கோபத்தில் கொதித்திருக்கிறார்
தொலைத் தொடர்பு, ஐடி அமைச்சர் கபில் சிபல். உடனே ஃபேஸ்புக், ட்விட்டர், கூகிள் போன்றோரை அழைத்து, ஏதாவது செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
அவர்கள் பதிலுக்கு, நாங்கள் அமெரிக்க பாணி சுதந்தரத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இல்லையில்லை, நீங்கள் இந்திய மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று இவர் சொல்லியிருக்கிறார்.
அடப் போங்கய்யா! இந்திய மக்களின் உணர்ச்சிதானே ஃபேஸ்புக்கை கழிப்பறைச் சுவராக ஆக்கியுள்ளது?
கபில் சிபலும் பிற அரசியல்வாதிகளும் தனி மனித சுதந்தரத்தையும் பேச்சுரிமையையும் புரிந்து கொள்ளவில்லை. அரசியல் மேடைகளில் தரக்குறைவாகப் பேசுதல், சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் தரக்குறைவாகப் பேசுதல் என்பதை அரசியல்வாதிகள் ஒரு கலையாகவே செய்துள்ளனர். சாதாரண மக்களுக்கு இவை சாத்தியமில்லை. பத்திரிகைகளில் நாசூக்காக, அங்கதமாகத்தான் இதனை எழுதமுடியும். அல்லது தென்னமெரிக்க எழுத்தாளர்களைப் போல மேஜிகல் ரியலிச வகையில் எழுத வேண்டும். இல்லாவிட்டால் பத்திரிகையின் கதையை முடித்துவிடுவார்கள் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்போர். மான நஷ்ட வழக்கு போடுவார்கள். அரசு விளம்பரங்கள் தரமாட்டார்கள். இன்கம் டாக்ஸ் ஃபைலைத் தூசு தட்டி எடுப்பார்கள். இல்லையா பின்னே?
சாமானியன் தன் வீட்டில் வெளிப்படையாகச் சொல்லி வந்த வசவுகளைத்தான் இப்போது ஃபேஸ்புக்கில் எழுதுகிறான். எனவே ஃபேஸ்புக் இதனைத் தணிக்கை செய்ய வேண்டும் என்கிறார் கபில் சிபல். ஆனால் இது முடிகிற காரியமா?
இந்தியாவில் ஒரு கோடி பேருக்குமேல் இப்போது இணையத்தில் எழுத வந்து விட்டார்கள். இவர்கள் 15 மொழிகளைப் பயன்படுத்தித் திட்டுகிறார்கள். ஆளுக்கு ஒரு அரசியல்வாதியை கெட்ட வார்த்தையில் தினசரி கைமா செய்தால் அதனை ஃபேஸ்புக்கோ, கூகிளோ தடுத்துவிட முடியுமா என்ன? ஒரேயடியாக ஃபேஸ்புக்கையும் கூகிளையும் இழுத்து மூடுவதுதான் ஒரே வாய்ப்பு. அப்படிச் செய்தால் கபில் சிபலில் பேரப் பிள்ளைகளே அவரை விளக்குமாற்றால் நாலு சாத்து சாத்தி விடுவார்கள். இந்த இளைஞர் சமுதாயம் ஃபேஸ்புக்கா, அரசியல்வாதியா என்றால் எது வேண்டும் என்று மிகவும் தெளிவாக இருக்கிறது.
ஆனாலும் கிழ அரசியல்வாதிகள், முடிந்தவரை விளையாடிப் பார்ப்போமே என்ற தங்கள் பழைய ஆண்டை மனோபாவத்தைத்தான் காட்டுகிறார்கள். நாலு பேர் நம்மைத் திட்டுகிறார்கள் என்றால் நாம் அதற்குத் தகுதியானவர்களாக, நாம் மாறவேண்டுமா என்று பார்ப்பதை விட்டுவிட்டு, சுவரைக் கட்டித் தருபவரை மிரட்டப் போய்விட்டார்கள். இந்தச் சுவர் இல்லாவிட்டால், இன்னொரு சுவர். எந்த அரசியல்வாதியாலும் இதனைத் தடுக்க முடியாது. எனவே இவற்றோடு வாழப் பழகுவது ஒன்றுதான் வழி.
ஆனால், கபில் சிபல் போன்ற முரட்டு வக்கீல், சட்டப்படியும் சட்டத்துக்குப் புறம்பாகவும் ஆடிப் பார்த்து விட்டுத்தான் ஓய்வார். ஒரு பக்கம் அமைச்சர் என்ற கெத்தில் கடிதம் எழுதுகிறார். மறுபக்கம், தில்லி சிவில் கோர்ட் ஒன்று இந்தத் தளங்கள் உடனடியாக சில மோசமான பக்கங்களை நீக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
இன்னொரு பக்கம் கூகிளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புகிறது. தெஹல்கா தொடங்கி பல பத்திரிகை ஆபீஸ்களுக்கு நோட்டீஸ் விட்டவர்கள்தானே?
இந்திய ஊடகங்கள் பொதுவாக உடனேயே பயந்து விடுவார்கள். ராம்நாத் கோயங்கா போல ஓரிருவர்தான் எதிர்த்து ஆடியவர்கள். ஆனால் கூகிள் அல்லது ஃபேஸ்புக் அப்படியல்ல. சில நாள்கள் வரை கடிதத்துக்கு மறு கடிதம் போட்டுக் கொண்டிருப்பார்கள். இந்திய அரசின் செயல்கள் எல்லை மீறிப் போனால், இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் சேவை ஒரு மாதத்துக்குக் கிடைக்காது என்று சொல்லி விடுவார்கள். அப்போது பாருங்கள் என்ன நடக்கிறது என்று. அண்ணா ஹசாரே போராட்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல இருக்கும். முதலில் இந்த அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் வீடுகளில் உள்ள இளைய தலைமுறையினர் அர்ச்சனை செய்வார்கள்.
அப்படியானால், இந்த நிறுவனங்கள் எல்லாம் இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாத டிரான்ஸ்நேஷனல் அதிகார பீடங்களா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியல்ல. நியாயமான ஒரு விஷயத்தில் இந்த நிறுவனங்கள் முரண்டு பிடித்தால், இவற்றை அடக்க வேண்டியது இந்திய அரசின் கடமை. ஆனால் இங்கே சத்தியத்தின் பலம் நம் அரசுகளிடம் இல்லை. இந்திய அரசியல்வாதிகளைப் பற்றி அசிங்கமாக எழுதுவது இந்தியர்கள். அதற்கான களத்தை ஏற்படுத்தி, கருவிகளைக் கையில் கொடுத்திருப்பது மட்டும்தான் இந்த நிறுவனங்கள்.
இந்தியர்கள் புதிய குடியாட்சி முறையை உருவாக்கும் தருணம் இது. இதுநாள்வரை வாய்பொத்தி, விரக்தியில் வெம்பிப் போயிருக்கும் மக்கள், குறைந்தபட்சம் கெட்ட பேச்சுகளால் தம் அரசியல்வாதிகளைத் திட்டி தம் எண்ணங்களை வெளிப்படுத்த ஆரம்பித்து உள்ளனர். இதனால் எந்த மாற்றத்தையும் சாதித்து விட முடியாது என்றாலும், இதன் மூலம் குறைந்தபட்சம் தங்கள் மனப்பாரத்தை வெளியேற்றி, மனம் லேசாகுமாறு செய்கிறார்கள். இதன் அடுத்த கட்டமாக அவர்கள் நாகரிகமான மொழியில் தம் கருத்தை வெளிப்படுத்தலாம். அடுத்து, களத்தில் இறங்கிப் போராடலாம். நிஜமான மாற்றத்தை நிரந்தரமாகக் கொண்டு வரலாம்.
ஒருவேளை அந்த சாத்தியம்தான் கபில் சிபலை பயமுறுத்துகிறதோ என்னவோ.
நன்றாக பயமுறுத்தட்டும்.

பத்ரி சேஷாத்ரி
அரசால் இணையத்தைக் கட்டுப்படுத்த முடியுமா?
பத்ரி சேஷாத்ரி
நாங்கள் சின்னப் பையன்களாகப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, கழிப்பறைக் காப்பியங்கள் எங்களைக் கிளுகிளுக்க வைக்கும். யாராவது ஒரு பையன் பெயரையும் ஒரு பெண் பெயரையும் இணைத்து குறிஞ்சித் திணையில் பாடப்பட்டிருக்கும். ஆசிரியைகளுக்கு விஷயம் தெரிய வந்ததும், பிரம்பு பழுக்கும். இன்னும் சில பள்ளிகளில் முரட்டுப் பையன்கள், “தமிழ் ஐயா சாமிக்கண்ணு, கணக்கு டீச்சர் விமலாவை...” என்று ஆரம்பித்துக் காவியங்கள் எழுதியிருப்பார்கள்.
எங்கள் தெருவில் மாமாக்கள் அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசும்போது அசிங்கமான வசைச் சொல் இல்லாமல் குறிப்பிட்டதே இல்லை. அதுவும் பெண் அரசியல்வாதிகள் என்றால் சற்று அதிகமாகவே இருக்கும். எமர்ஜென்சி காலத்தில் எப்படி இருந்தது என்று நினைவில்லை. எனக்கு அப்போது வயது மிகக் குறைவு.
கபில் சிபல் அப்படிப்பட்ட பள்ளிகளில் படித்திருந்திருக்க மாட்டார். அவர் மிகவும் நாகரிகமான குடும்பத்திலிருந்து வந்திருக்க வேண்டும். அவர் வசித்த தெருக்களில் இருப்போர் மிக நளினமாகத்தான் பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.
ஃபேஸ்புக், ட்விட்டர், வலைப் பதிவுகள் என்று பார்த்தால், பெரும்பாலான நேரங்களில் அவை கழிப்பறைச் சுவர்கள் போலத்தான் காட்சி அளிக்கின்றன. மக்களின் மன வக்கிரங்களுக்கு அவை ஒரு வடிகால். கழிப்பறைச் சுவரில் தமிழ் ஐயாவையும், கணக்கு டீச்சரையும் இணைத்து எழுதிய மாணவனுக்கு அவர்கள் இருவர் மீதுமோ அல்லது குறைந்தபட்சம் ஏதோ ஒருவர் மீதோ கடும் கோபம் கொண்டு பழிவாங்க அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. கழிப்பறைச் சுவரில் கக்கிவிட்டான்.
இந்திய ஜனநாயகத்தில் மக்களுக்கு அரசியல்வாதிகள்மீது தாங்கவொண்ணாக் கோபம் உள்ளது. விலைவாசி எகிறுவது, வேலைகள் கிடைக்காமல் இருப்பது, வறுமையில் வாடுவது என்று இவன் திண்டாடும்போது ஊழல் அரசியல்வாதிகள் பணத்தில் கொழிக்கிறார்கள்; கொழுக்கிறார்கள். இவன் ஃபேஸ்புக் ‘சுவற்றில்’ அசிங்கமாக எழுதுகிறான். இன்றைய இணையமும் கணினியும் எழுத்தைத் தாண்டி வேறுபல சாத்தியங்களை இவனுக்குத் தருகிறது. பிறப்புறுப்புகளைப் பற்றியும் உறவுகளைப் பற்றியும் விலாவரியாக எழுதுவதோடு, படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் அவனால் முடிகிறது.
சோனியா காந்தியை அசிங்கமாகக் காட்டிய சில தளங்களைப் பார்த்து கோபத்தில் கொதித்திருக்கிறார் தொலைத் தொடர்பு, ஐடி அமைச்சர் கபில் சிபல். உடனே ஃபேஸ்புக், ட்விட்டர், கூகிள் போன்றோரை அழைத்து, ஏதாவது செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
அவர்கள் பதிலுக்கு, நாங்கள் அமெரிக்க பாணி சுதந்தரத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இல்லையில்லை, நீங்கள் இந்திய மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று இவர் சொல்லியிருக்கிறார்.
அடப் போங்கய்யா! இந்திய மக்களின் உணர்ச்சிதானே ஃபேஸ்புக்கை கழிப்பறைச் சுவராக ஆக்கியுள்ளது?
கபில் சிபலும் பிற அரசியல்வாதிகளும் தனி மனித சுதந்தரத்தையும் பேச்சுரிமையையும் புரிந்து கொள்ளவில்லை. அரசியல் மேடைகளில் தரக்குறைவாகப் பேசுதல், சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் தரக்குறைவாகப் பேசுதல் என்பதை அரசியல்வாதிகள் ஒரு கலையாகவே செய்துள்ளனர். சாதாரண மக்களுக்கு இவை சாத்தியமில்லை. பத்திரிகைகளில் நாசூக்காக, அங்கதமாகத்தான் இதனை எழுதமுடியும். அல்லது தென்னமெரிக்க எழுத்தாளர்களைப் போல மேஜிகல் ரியலிச வகையில் எழுத வேண்டும். இல்லாவிட்டால் பத்திரிகையின் கதையை முடித்துவிடுவார்கள் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்போர். மான நஷ்ட வழக்கு போடுவார்கள். அரசு விளம்பரங்கள் தரமாட்டார்கள். இன்கம் டாக்ஸ் ஃபைலைத் தூசு தட்டி எடுப்பார்கள். இல்லையா பின்னே?
சாமானியன் தன் வீட்டில் வெளிப்படையாகச் சொல்லி வந்த வசவுகளைத்தான் இப்போது ஃபேஸ்புக்கில் எழுதுகிறான். எனவே ஃபேஸ்புக் இதனைத் தணிக்கை செய்ய வேண்டும் என்கிறார் கபில் சிபல். ஆனால் இது முடிகிற காரியமா?
இந்தியாவில் ஒரு கோடி பேருக்குமேல் இப்போது இணையத்தில் எழுத வந்து விட்டார்கள். இவர்கள் 15 மொழிகளைப் பயன்படுத்தித் திட்டுகிறார்கள். ஆளுக்கு ஒரு அரசியல்வாதியை கெட்ட வார்த்தையில் தினசரி கைமா செய்தால் அதனை ஃபேஸ்புக்கோ, கூகிளோ தடுத்துவிட முடியுமா என்ன? ஒரேயடியாக ஃபேஸ்புக்கையும் கூகிளையும் இழுத்து மூடுவதுதான் ஒரே வாய்ப்பு. அப்படிச் செய்தால் கபில் சிபலில் பேரப் பிள்ளைகளே அவரை விளக்குமாற்றால் நாலு சாத்து சாத்தி விடுவார்கள். இந்த இளைஞர் சமுதாயம் ஃபேஸ்புக்கா, அரசியல்வாதியா என்றால் எது வேண்டும் என்று மிகவும் தெளிவாக இருக்கிறது.
ஆனாலும் கிழ அரசியல்வாதிகள், முடிந்தவரை விளையாடிப் பார்ப்போமே என்ற தங்கள் பழைய ஆண்டை மனோபாவத்தைத்தான் காட்டுகிறார்கள். நாலு பேர் நம்மைத் திட்டுகிறார்கள் என்றால் நாம் அதற்குத் தகுதியானவர்களாக, நாம் மாறவேண்டுமா என்று பார்ப்பதை விட்டுவிட்டு, சுவரைக் கட்டித் தருபவரை மிரட்டப் போய்விட்டார்கள். இந்தச் சுவர் இல்லாவிட்டால், இன்னொரு சுவர். எந்த அரசியல்வாதியாலும் இதனைத் தடுக்க முடியாது. எனவே இவற்றோடு வாழப் பழகுவது ஒன்றுதான் வழி.
ஆனால், கபில் சிபல் போன்ற முரட்டு வக்கீல், சட்டப்படியும் சட்டத்துக்குப் புறம்பாகவும் ஆடிப் பார்த்து விட்டுத்தான் ஓய்வார். ஒரு பக்கம் அமைச்சர் என்ற கெத்தில் கடிதம் எழுதுகிறார். மறுபக்கம், தில்லி சிவில் கோர்ட் ஒன்று இந்தத் தளங்கள் உடனடியாக சில மோசமான பக்கங்களை நீக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
இன்னொரு பக்கம் கூகிளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புகிறது. தெஹல்கா தொடங்கி பல பத்திரிகை ஆபீஸ்களுக்கு நோட்டீஸ் விட்டவர்கள்தானே?
இந்திய ஊடகங்கள் பொதுவாக உடனேயே பயந்து விடுவார்கள். ராம்நாத் கோயங்கா போல ஓரிருவர்தான் எதிர்த்து ஆடியவர்கள். ஆனால் கூகிள் அல்லது ஃபேஸ்புக் அப்படியல்ல. சில நாள்கள் வரை கடிதத்துக்கு மறு கடிதம் போட்டுக் கொண்டிருப்பார்கள். இந்திய அரசின் செயல்கள் எல்லை மீறிப் போனால், இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் சேவை ஒரு மாதத்துக்குக் கிடைக்காது என்று சொல்லி விடுவார்கள். அப்போது பாருங்கள் என்ன நடக்கிறது என்று. அண்ணா ஹசாரே போராட்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல இருக்கும். முதலில் இந்த அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் வீடுகளில் உள்ள இளைய தலைமுறையினர் அர்ச்சனை செய்வார்கள்.
அப்படியானால், இந்த நிறுவனங்கள் எல்லாம் இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாத டிரான்ஸ்நேஷனல் அதிகார பீடங்களா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியல்ல. நியாயமான ஒரு விஷயத்தில் இந்த நிறுவனங்கள் முரண்டு பிடித்தால், இவற்றை அடக்க வேண்டியது இந்திய அரசின் கடமை. ஆனால் இங்கே சத்தியத்தின் பலம் நம் அரசுகளிடம் இல்லை. இந்திய அரசியல்வாதிகளைப் பற்றி அசிங்கமாக எழுதுவது இந்தியர்கள். அதற்கான களத்தை ஏற்படுத்தி, கருவிகளைக் கையில் கொடுத்திருப்பது மட்டும்தான் இந்த நிறுவனங்கள்.
இந்தியர்கள் புதிய குடியாட்சி முறையை உருவாக்கும் தருணம் இது. இதுநாள்வரை வாய்பொத்தி, விரக்தியில் வெம்பிப் போயிருக்கும் மக்கள், குறைந்தபட்சம் கெட்ட பேச்சுகளால் தம் அரசியல்வாதிகளைத் திட்டி தம் எண்ணங்களை வெளிப்படுத்த ஆரம்பித்து உள்ளனர். இதனால் எந்த மாற்றத்தையும் சாதித்து விட முடியாது என்றாலும், இதன் மூலம் குறைந்தபட்சம் தங்கள் மனப்பாரத்தை வெளியேற்றி, மனம் லேசாகுமாறு செய்கிறார்கள். இதன் அடுத்த கட்டமாக அவர்கள் நாகரிகமான மொழியில் தம் கருத்தை வெளிப்படுத்தலாம். அடுத்து, களத்தில் இறங்கிப் போராடலாம். நிஜமான மாற்றத்தை நிரந்தரமாகக் கொண்டு வரலாம்.
ஒருவேளை அந்த சாத்தியம்தான் கபில் சிபலை பயமுறுத்துகிறதோ என்னவோ.
நன்றாக பயமுறுத்தட்டும்.
| Other articles: |
|---|
|