தலையங்கம்
தற்போது தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை பெரிதும் பதட்டத்தில் வைத்திருக்கும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசியல்வாதிகளும், அங்குள்ள மைனாரிட்டி அரசும் அழிச்சாட்டியம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் வெளியிடும் அறிக்கைகள் பொய்மையின் உச்சட்ட வெளிப்பாடாகத் திகழ்கிறது. நிறுவப்பட்ட வரலாற்றின் சுவடுகளை அழிக்கும் காரியத்தை அவர்கள் செய்து வருகிறார்கள். தங்களின் அரசியல் லாபத்துக்காகத்தான் இதனை செய்கிறார்கள் என்பது மிகவும் வெட்ட வெளிச்சமாகிறது.
அதே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளும், அரசியல்வாதிகளாகத் துடிக்கும் சினிமாத் துறையினரும் பொறுப்பற்ற வகையில் மக்களைத் தூண்டிவிடும் அபாய விளையாட்டை விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய விஷயத்தை நேரடி மக்கள் போராட்டமாக மாற்ற விழையும் இவர்களின் முயற்சி இருபக்கங்களிலும் வெறுப்பையும் பகைமைûயும்தான் மேலும் வளர்த்து வருகிறது.
கேரள மாநிலத்தின் அரசியல்வாதிகளின் தூண்டுதல்களினால் எதற்கும் தொடர்பில்லாத அப்பாவி ஏழைத் தமிழர்கள் மலைப்பாதை வழியாக உயிருக்குப் பயந்து தமிழகத்துக்குத் திரும்பி வருவது கவலை அளிப்பதாக இருக்கிறது. அதே போல, தமிழகத்திலும் இப்பிரச்னைக்கு எவ்வகையிலும் தொடர்பு இல்லாத வணிக நிறுவனங்கள் தாக்கப்படுவதும் ஜனநாயகத்துக்கும் தேசியக் கொள்கைகளுக்கும் சாதகமான விஷயங்களாகத் தோன்றவில்லை.
காவிரி விஷயத்தில் நாம் மிகப் பெரிய விலைகொடுத்துப் பாடங்களைக் கற்றிருக்கிறோம். அந்தப் பிரச்னையிலும் அதிகம் இழப்புக்கு உள்ளானவர்கள் தமிழர்களே. அதற்கு கன்னடக்காரர்களின் வெறி ஒரு பக்கம் இருக்க அந்த வெறித்தீயில் எண்ணெய் விட்டது போல நடந்து கொண்ட நம்முடைய அரசியல் கட்சிகளும் சினிமாத் துறையினரும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றனர்.
இப்போது ஏறத்தாழ அதே சாயலிலில் காட்சிகள் அரங்கேறத் துவங்கியுள்ளன. இந்த விஷயத்தில் தங்களுக்கு உள்ள அக்கறையை உடனடியாக, மற்றவர்களுக்கு முன்பே காட்டிக் கொள்ள வேண்டும் என்ற பதட்டத்தில் நம்முடைய தலைவர்கள் எந்த வகையிலும் பொறுப்பில்லாத அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். இங்கு வெளியிடப்படும் அறிக்கைகளைப் படித்து கேரளத்தில் உள்ள தீய சக்திகள் அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட எவ்வகையான அரசியல் சார்புகளும் இல்லாத அப்பாவி மலையாளிகளைத் தூண்டி விடுகின்றனர்.
நம்முடைய பொறுப்பற்ற ஊடகங்களும் இந்தப் பாதகத்தில் பங்கேற்கின்றன. ஒரு தமிழ் செய்தி ஊடகத்தில் தமிழகத்தின் எல்லைப்பகுதியில் உள்ள சில இளைஞர்களின் பேட்டியை ஒளிபரப்பு செய்தார்கள். அந்தப் பேட்டியில் வந்த இளைஞர்கள், “நாங்கள் எல்லை கடந்து சென்று போரிடுவோம். காவல்துறை மட்டும் சற்று ஒதுங்கி இருக்கட்டும். முன்பு கையை விட்டுப்போன தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளை நாங்கள் தமிழகத்துக்கு மீட்டு வருகிறோம்’’ என்ற பேட்டியை ஒளிபரப்புகிறார்கள். இது அபத்தமான விஷயம் என்று பேட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்துக்குத் தெரியாதா? தங்கள் கட்சி சார்ந்த காட்சி ஊடகங்களில் சில சில்லரைத் தலைவர்களும் இதுபோன்ற வன்முறையைத் தூண்டி வரும் பேச்சுக்களால் உசுப்பேற்றுகிறார்கள்.
இது முதுகில் கயிற்றைக் கட்டிக் கொண்டு எதிரிகளைப் பந்தாடும் அஜிக்ஸô ஜலக்ஸô வேலை கிடையாது.
இருபுறமும் எல்லைப் புறங்களில் உள்ள அப்பாவி மக்களின் வாழ்வுப் பிரச்னை. தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக வன்முறையை மனங்களில் திணிப்பது மிகவும் ஆபத்தான வேலையாகும்.
தற்போதைக்கு இது மைய அரசுக்கு முன்பு முளைத்திருக்கும் மிகப்பெரிய சவாலாகும். இதை மிகவும் சாதுரியமாகக் கையாள வேண்டும். இருபுறங்களிலும் உள்ள சுயநல சக்திகளின் பொறுப்பற்ற செயல்பாடுகளால், மிகப்பெரிய அளவிலான இழப்புகளை இருமாநிலளும் சந்திக்க நேரிடும்.
எப்பொழுது எல்லாம் உத்திர பிரதேசத்தில் தேர்தல் வருமோ அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினர் மீது கரை காணாக் காதல் வரும். என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பார்கள். இப்போது தேர்தல் வரப்போகிறது. பிற்படுத்தப் பட்டோருக்கான 27 சதவிகிதத்தில் 4.5 சதவிகிதம் தனியாக வெட்டி எடுத்து சிறுபான்மையினருக்குத் தருவதற்கு முடிவு எடுத்து இருக்கிறார்கள்.
இதனால் தங்களுக்கான ஒதுக்கீட்டில் கை வைத்து விட்டதாக பிற்படுத்தப்பட்டவர்கள் கோபம் கொள்வதற்கான வாய்ப்பும், மிகவும் குறைந்த அளவே ஒதுக்கீடு கிட்டியதென்று சிறுபான்மையினர் பெருமளவு கோபம் கொள்வதற்கும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் விளையாட்டுக்கள் அவர்களுக்கு மட்டுமே புரியும் தேவலீலைகளாக இருக்கின்றன. பல நேரங்களில் இந்த தேவலீலைகள் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக திரும்பிக் கொள்கிறது.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அயோத்தியாவில் பூட்டிக் கிடந்த கதவைத் திறந்து ஷிலான்யாஸ் எனப்படும் செங்கல் பூஜையை அனுமதித்து விட்டு மற்றொருபுறம் இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். செங்கல் பூஜை அனுமதியால் இந்துக்களின் ஓட்டுக்கள் கிடைக்கும். அதே நேரத்தில் கோவில் கட்ட அனுமதி மறுப்பால் முஸ்லிம்கள் ஓட்டுக்களும் கிடைக்கும் என்று கணக்குப் போட்டு இறுதியில் இரண்டு தரப்பினரின் ஓட்டுக்களும் கிடைக்காமல் போனது போல...
அன்புடன்
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்





