சக்தி மசாலா உருவாகிய சாதனை வரலாறு - சாந்தி துரைசாமி
கார்ல கொஞ்சம் ஏ.சி.யை அதிகமாக்கும்படி என் டிரைவர் கிட்டே சொன்னேன். என் மடியில் உட்கார்ந்திருந்த பேத்தி ஸ்வாதி, தாவிக் குதிச்சு ஏ.சியை அதிகமாக்கித் திருகிவிட்டா. குழந்தை தாவும்போது கொஞ்சம் பயந்துட்டேன். துறுதுறுனு இருக்கிற குழந்தைங்க, தாத்தா பாட்டிங்களுக்கு இந்த பயத்தை அடிக்கடி கொடுப்பாங்க. அவங்க வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம பெரியவங்க தடுமாறிக்கிட்டே இருப்பாங்க. எங்கேயாச்சும் வெளியில போயிட்டு வீட்டுக்குள்ள நுழையும்போது ஓடிவந்து காலைக் கட்டிக்கிற பேத்தியோட வேகத்துக்கு ஈடுகொடுக்க, நான் காரைவிட்டு இறங்கும்போதே தயாராகிடுவேன். அவளோட அன்புல அவ்வளவு ஃபோர்ஸ் இருக்கும்.
பேத்தினு சொல்றது பேருக்குத்தான். என்னை ‘அம்மா’ன்னுதான் கூப்பிடுவா. என் மகளை நான் எப்படிப் பார்த்துக்கிட்டேனோ, அதே மாதிரிதான் இப்ப பேத்தியையும் பாத்துக்கிறேன். அவளும் என்ன வேணும்னாலும் என்னைத்தான் கேட்பா. குழந்தைகளைக் கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா, எல்லாரும் ஒரு விஷயத்தை ஏத்துக்குவாங்க. குழந்தைங்க தெரிஞ்சுக்கணும்னு நிறைய கேள்விகள் கேட்பாங்க. அந்தக் கேள்விகள் மூலமா, நமக்கு எவ்ளோ விஷயங்கள் தெரியலைன்னு மறைமுகமா சொல்லிக்கொடுத்துடுவாங்க. என் நாலு வயசு பேத்திதான் இப்ப எனக்கு டீச்சர். தினம் தினம் புதுப்புது விஷயங்களை, உண்மைகளை எனக்கு சொல்லிக் கொடுத்துக்கிட்டே இருக்கா.
ஈரோடு ரொம்ப சாந்தமான ஊரு. சென்னை மாதிரி பெரிய பரபரப்பு எதுவும் இருக்காது. தூங்கி எழுந்திரிச்சதும் எல்லாரும் பார்க்கிறதுக்கு ஒரு வேலையை வெச்சிருப்பாங்க. அன்னிக்கு அந்த வேலையப் பார்த்துட்டா நிம்மதியா தூக்கம் வந்துடும். என்னைச் சுத்தி இருக்கிறவங்கள்ல, உலகம் தெரியாதவங்க நிறையப் பேர் இருப்பாங்க. உழைக்கத் தெரியாதவங்க யாரும் இல்லை. பத்து ரூபா சம்பாதிச்சாலும், அதுக்கு சமமா ஒரு வேலை பார்க்கலைன்னா அதைப் பாவமா நினைக்கிற மனிதர்களை எங்க ஊர்ல சர்வ சாதாரணமா பார்க்கலாம். இருட்டறதுக்குள்ள வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்துடணும்ங்கிறது ஈரோட்டுல எழுதப்படாத ரூல். சாயந்திரம் ஆறு மணிக்கு மேல மக்கள் பரபரனு இருப்பாங்க. சாலைகளில் நிறைய பேர் தென்படுவாங்க. நலம் விசாரிப்புகள், கேலி கிண்டல் சிரிப்புகள், கடைவீதிக்குப் போய் பொருள் வாங்கிறதுன்னு தெருவுக்குத் தெரு திருவிழாவா இருக்கும். ஈரோட்டுல போக்குவரத்து போலீஸார் ரொம்ப பிஸியா இருக்கிற நேரம் இதுதான்!
பேத்தி ஸ்வாதி கடைவீதிக்குப் போகணும்னு சொன்னா. கார்ல உட்கார்ந்திருக்கும்போது பஸ் ஸ்டாண்ட் ஜங்ஷன்ல ரெட் சிக்னல் விழுந்துச்சு. ‘அது என்ன... இது என்ன?’ன்னு பேத்தி கேள்வி கேட்டுக்கிட்டே வர்றா, எனக்குத் தெரிஞ்ச பதிலா சொல்லிட்டு வந்தேன். பதில் தெரியலைன்னா, ‘தெரிஞ்சுக்கிட்டு சொல்றேன்’னு சொல்லுவேன். ‘ஏன் அந்தப் போலீஸ்காரரு மட்டும் வெள்ளைச் சட்டை போட்டிருக்காரு?’னு ஒரு கேள்வி. பல வருஷமா தினம் அந்த இடத்தைக் கடந்துபோறேன். தமிழ்நாடு முழுசா தொழில் நிமித்தம் சுத்தும்போது நிறைய டிராஃபிக் போலீஸ்காரங்களைப் பார்த்திருப்பேன். ‘காக்கிச் சீருடைக்கும் வெள்ளைச் சீருடைக்கும் என்ன வித்தியாசம்’னு ஒரு கேள்வி மனசுல வந்ததே இல்லை. திடீர்னு பேத்தி கேட்டதும் பதில் தெரியலை. ‘விசாரிச்சு சொல்றேன் கண்ணு’னு சொல்லிட்டேன்.
‘நட்சத்திரம் நிறைய இருக்கே? நிலா ஏன் ஒண்ணுதான் இருக்கு?’ன்னு இன்னொரு கேள்வி. ‘நிறைய நிலா இருந்தா, அதுக்கும் நட்சத்திரத்துக்கும் வித்தியாசம் தெரியாதே?’னு அப்போதைக்குத் தெரிஞ்ச ஒரு பதில் என்னைக் காப்பாத்துச்சு. ‘ஓ, வித்தியாசம் தெரியணும்னுதான் அந்தப் போலீஸ்காரர் வெள்ளைச் சட்டை போட்டிருக்காரா?’ன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னால அவ கேட்ட கேள்விக்கு அவளே பதில் கண்டுபிடிச்சுட்டா. இதுபோலதான் என் பேத்தி எனக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்துக்கிட்டே இருப்பா.
என் கார் கண்ணாடியைத் தட்டி வயசான ஒரு அம்மா கையெடுத்துக் கும்பிட்டுகிட்டே நின்னாங்க. சென்னை சிக்னல்ல சாதரணமா நடக்கிற இந்த விஷயம், ஈரோட்டுக்கு இப்பதான் வர ஆரம்பிச்சுருக்கு. இருபது ரூபாய என் பேத்திகிட்ட கொடுத்து, ‘அந்த அம்மாகிட்டே கொடுத்துடு’ன்னு கார் கண்ணாடியை இறக்கினேன். அவங்க கை நீட்ட, என் பேத்தி அவங்களுக்கு அதைக் கொடுத்தா. நான் கேட்காமலேயே, ‘பசங்க பாத்துக்கலை’னு கண்கலங்க சொன்னாங்க. அதுக்குள்ள சிக்னல் விழுந்துடுச்சு. பணத்தை வாங்கின பிறகு என் பேத்தியைப் பார்த்து பெரிய கும்புடு போட்டாங்க அந்த அம்மா. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. சிக்னல் விழுந்ததும் கார் கிளம்பிடுச்சு. கண்ல இருந்து மறையிற வரைக்கும் ஸ்வாதி அவங்களையே பார்த்துட்டு இருந்தா.
‘நாம கொடுத்த பணத்துல அவங்க என்ன வாங்குவாங்க?’
- சடார்னு திரும்பினவ என்னைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வி இதுதான்.
‘அந்தப் பாட்டி காலைலேருந்து சாப்பிட்டிருக்க மாட்டாங்க. ஸ்வாதி கண்ணு. கொடுத்த காச வெச்சு சாப்பாடு வாங்கி சாப்பிடுவாங்க’னு கொஞ்சம் பெருமையாவே பதில் சொன்னேன். ‘அப்போ நாளைக்கு என்ன பண்ணுவாங்க... நானே வந்து குடுக்கணுமா?’ன்னு சட்டுனு அடுத்த கேள்வியை அவ கேட்டதும் அவமானமா இருந்துச்சு. இப்போதைக்குக் கொடுத்ததை நினைச்சு சந்தோஷப்பட்ட எனக்கு, நாளைய நினைச்சுப் பார்க்கலையேன்னு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு. ஒருவழியா சமாளிச்சு, ‘ஓ, நீயே வந்து நாளைக்கும் அந்தப் பாட்டிக்கு காசு கொடு’ன்னு கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்தேன்.
‘நாளைக்கு மார்னிங்கே வந்து காசு கொடுத்துடலாமா?’ன்னு வந்த அடுத்த கேள்வியில ஆடிப்போயிட்டேன். யாருன்னே தெரியாத ஒருத்தவங்களோட ராத்திரி பசியைப் பத்தி கவலைப்பட ஆரம்பிச்ச குழந்தை, காலை பசியைப் பத்திக் கேட்கிறா. அடுத்து, ‘தினம் வந்து தரலாமா?’ன்னு வரப் போற கேள்விக்கு அப்பவே தயாராகிட்டேன். ‘ஓடி வந்து மேல தாவும்போது குழந்தைகளின் உடல் பலத்துக்கு ஏத்த மாதிரி தயாரானா மட்டும் போதாது, சிந்தனை பலத்துக்கும் சேர்ந்து தயாராகணும்‘னு அந்த வினாடியே புரியவெச்சிட்டா என் பேத்தி. ‘நாளைக்கு நாம வர வேண்டியதில்லை. டிரைவர் அண்ணாகிட்டே காசு கொடுத்து அனுப்பலாம்’னு சொன்னேன்.
Last Updated (Saturday, 09 October 2010 11:33)






