கவிதைகள்
வாசல்
கீழ்வாசல் சேரும் கதிரும்
மேல்வாசல் ஏகும் நிலவும்
தென்வாசல் பொதிகைத் தமிழும்
வட(க்கு)வாசல் வந்து கமழும்
வான்வாசல் சொர்க்கம் என்றே
வைகுந்தன் பின்னர் செல்வார்
தன்வாசல் பூட்டி வைத்தால்
தயைதர்மம் எங்கு வாழும்
பள்ளிக்கு வாசல் உண்டு அதில்
பக்தியால் தொழுகையுண்டு
எல்லோர்க்கும் இறை ஒன்றே எனத்
தெரியாமல் வாழ்தல் தகுமோ
திருச்சபை வாசல் காட்டும்
சிலுவைக்கு மதிப்பு கூட்டும்
பக்திக்கு புகழ் பாடலாமே நற்
பண்புக்கு மறை ஓதலாமே
குருமாரின் வாசலைத் தேடி அவர்
அரும்போதனைப் பண்பாடி
திருந்தாத வாசல்கள் உண்டு மனம்
திறக்காமல் வாழ்வதுவும் வாழ்வோ
தேசத்தின் வாசலாய் வைத்து
வீரத்தை பூசை செய்வார்
நேசத்தின் வாசல் நட்பை
நெறிமாறி தான் மூடலாமோ
சங்கத்தின் வாசலில் சேர்ந்தோம்
மன்றத்தில் ஆக்கம் காண்போம்
எல்லோரும் ஓர்நிறை என்றே
எப்போதும் குறள்ஓதி வாழ்வோம்
கவி.சத்தியமணி
காலத்தின் வாய்க்குள்
முதல் முடிவு எதையும் காட்டாமல்
தொலைதூரத்தில் தெரியும்
உன் கண்களைக் கழற்றி எறி
சிலந்தியின் வாய்க்குள்
உனது விரல்கள்
காணாமல் போகும் காலங்களை
கூடுகளில் இழைத்துக் கொண்டிருக்கும்
விரல்கள் வேண்டாம்
நத்தை நிறுத்திலான உனது பயணம்
எல்லைகளைத் தாண்டுவதில்லை
மலத்தை மிதித்து மிதித்தே
அழுக்கேறிப்போன கால்களால்
நிலையான சுவட்டை
உருவாக்க முடியாததால்
அதை வெட்டி வீசு
அணிந்து கொள்கிறாய்
துரோகங்களையும் அவமானங்களையும்
துணை தேடித் தேடியே
சுய விலாசமிழந்தது
உன் இருப்பு
மாற்றான் முடைந்த பாயில்
உனது படுக்கை
புழுதியெங்கும் பதிந்து கிடக்கின்றன
பழைய சுவடுகள்
இதில் எங்கும் உறங்கவைத்திருக்கிறாய்
உனது பாதங்களை
சத்யன் சிபி
எப்படியாவது...
எப்படியாவது சென்றிட வேண்டும்
எப்படியாவது வென்றிட வேண்டும்
எப்படியாவது செய்திட வேண்டும்
எப்படியாவது கொய்திட வேண்டும்
எப்படியாவது கனன்றிட வேண்டும்
எப்படியாவது புணர்ந்திட வேண்டும்
எப்படியாவது அறிந்திட வேண்டும்
எப்படியாவது அழித்திட வேண்டும் þ என
எப்படியோ எப்படியாவதில்தான்
புதைந்துள்ளன வாழ்க்கை சூட்சுமங்கள்.
தேவராஜ் விட்டலன்
நீங்குதல்
நீரற்ற நதியில்
துடுப்பற்ற படகை
இருளற்ற இரவில்
செலுத்த எத்தனிக்கையில்
ஒளியற்ற விண்மீன்
கண்சிமிட்டிக் கூறியதுþ
பெயரற்று நீ
நீங்கும் போது இது
சாத்தியப்படும்!’’ என்று.
பா.சேதுமாதவன்
அன்பின் வரிகள்
காற்றில் மிதந்து வந்து
மடியில் விழுந்தது
பழுத்த இலையொன்று
காலம் முடிந்து
தானே கனிந்து
விருப்ப ஓய்வு வேண்டி
விருட்சத்தினின்று கழன்று
கொண்ட அதன் நடுவே
நீண்டு ஒன்றும்
குறுக்காகப் பலவும்
ஓடின அழுத்தமாக
அன்பின் வரிகள்
செவிகளால் பார்க்கவும்
கண்களால் கேட்கவும் முடிகிற
அற்புதத்தை நிகழ்த்தி..
ராமலக்ஷ்மி
உருமாறி மழையென்றாய்...
வான்வளி பூமி
இடைவெளியில்
முகிலென உருகொண்டாய்
கருங்குழல் காற்றும்
கரம்பற்றி கடந்தபோது
உருகி நின்றாய்
மழையென தந்தாய்
மனிதமனமும் அதுபோல் உருகிடவே
இதைக் கொண்டு இங்கு வந்தாய்
மேவலர் மிரளும் இடியும்
வான்கீற்று மொழியும்
இசைபாடுதோ நீ
அசைந்தாடவோ...
வன்வடு புவியிலே
மண்படு கையானதென்னவோ
ஐம்புலனும் அடக்காத அவயத்தில்
உன்புலம் சுருக்கி குளமானாயோ?
வீழ்ச்சியுறு நீர்வீழ்ச்சியாய்
எழுச்சியுற நீரோடையாய்
பாறையெட்டும் தட்டுப்பட்டு
ஆடையானாய் பூமித்தாயவளுக்கே.
நீண்டதொரு வாழ்விலக்கணம்
நிலமதிலே வேண்டுமென்றா
ஆறென்ற பெயருமுற்றாய்!...
உட்பொருள் உணர்த்தவே
ஆழ்கடல் ஆனாயோ?
எப்புறமும் பாரென்று புகட்டவோ
எல்லையில்லாமல் விரிந்தாயோ
கடலென நின்றாயோ!
மதிகெட்ட மாந்தரும்
கதியற்று நிற்கையிலே கூட
விதிகெட்டு போகமல்
நிலைபெற்று நின்றிடவே
நல்வழி சொல்ல வந்தாயோ!
இறுதியும் அறுதியாய் உண்டென
இருமாப்பு கொண்டோ கேளீர்
நீராவியாய் உருமாறி
வந்த இடம் சேர்ந்ததென்ன
வகையாய் வாழ்க்கையை சொன்னதென்ன?
சேங்கை சுதன்
மவுனயுத்தம்
மின்சாரமற்றுப் போன
காலைப் பொழுதுகளில்
அழைப்பு மணிகள் அமைதி காக்க
மரக்கதவுகள் அப்பணி செய்யும்.
சன்னலோர தாமிரபரணி
ரசிப்புகள் கூட
நடத்துநரின் சீட்டு நச்சரிப்பில்
கடந்து சாகும்.
பாட்டியின் அரை நூற்றாண்டு
உடல் தளத்தில்
டேபிள் டாப்புகள் ஓடித் தொலைக்கும்.
தாய்ப்பாலுக்கு அழும்
சம்பந்தக் குழந்தைகளுக்குச்
செரிலாக்குகள் செய்து தரப்படும்
சுப்புக் கோனார் ஐயாவின்
நுரைத்துப் பொங்கும்
செம்புப் பால்களை
தூக்கி எறியப்படும்
பால் பாக்கெட்டுகள்
பதிலீடு செய்யும்.
நர்சரிக் குழந்தைகளின்
பாடத்திட்டத்தில்
முதியோர் இல்லங்களின்
முகவரிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
என்ன செய்ய
மண்டையோட்டை உடைத்தாலும்
மறுபேச்சு பேசாதிருத்தலைத் தவிர...
சவுந்தர மகாதேவன்
இன்னும் சிறிது தொலைவில்
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்புகிறேன்
அந்தி சாய்ந்து
நிற்பதை, நடப்பதையெல்லாம்
கவ்வியிருந்தது இருள்.
காற்றில் புழுதியின் கனம் சேர்த்து
கோடைமழை வலுத்தது
அதிகம் காற்று, கொஞ்சம் வெக்கை
ஓரிரு மழைத்துளிகள்
நாசி தொட்ட மண்வாசம்
சட்டென மின்னத் தொடங்கிய
விளக்குகளின் சாலை
கடக்கும் வாகன, ஜனத்திரள்
கவசம் தலையில்லாது
விரித்துவிட்ட கூந்தல் அலைய
வாகனம் நானே இயக்கும் சுதந்திரம்
யாவும் தந்த பரவசத்தில்
இப்படி நினைக்கத் தோன்றியது
சற்றே பயணிக்கும்படி
இன்னும் சிறிதுத் தொலைவில்
என் வீடு இருந்திருக்கலாமென!’’
சுமதி இராமசுப்ரமணியம்
வார்த்தைகள் அற்ற வாழ்க்கை
வெளிப்படாத வார்த்தைகளில்
புதைந்தே கிடக்கிறது உன் நேசம்.
வெளிப்படுத்த மறுக்கிறது
உன் ஆண்மைþ
எப்போதும் எவரிடமும்!
உணர்வுகளை வெளியே கொட்டாமல்
புதைத்து வைப்பதுதான்
ஆண்மை என எப்போதோ
உனக்கு சொல்லப் பட்டிருக்கிறது
பலமாய் நம்புகிறாய் அதை!
எனக்கோ-
வார்த்தைகள் இல்லாவிடிலும்
சைகைகளாவது தேவையாய் இருக்கிறது
சிறுபிள்ளைத் தனம் என
சுலபமாய் நிராகரிக்கப் படுகிறது
என் குறிக்கோள்!
வெளிப்படாத உணர்வுக்கும்
இல்லாத உணர்வுக்கும் வேறுபாடு என்ன?
வார்த்தைகள் அற்ற வெளியில்
பயணிக்கிறாய் நீ
உணர்வற்ற சடலமாக!!
எஸ்.திரிவேணி
Last Updated (Wednesday, 20 July 2011 05:46)
| Other articles: |
|---|
|






