சுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் சில பதிவுகள்...
வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி இதுவரை சாகித்யகர்த்தாக்கள் அல்லது இசைக்கலைஞர்களின் நினைவில்
இசைவிழாக்கள் எடுத்துப் பார்த்து இருக்கிறோம். ஆனால், வடக்கு வாசல் இதழ் ஒரு இசை விமர்சகரின் நினைவில் பிரத்யேகமாக ஒரு ஒரு விழாவினை எடுத்து அவருடைய நினைவுகளைப் போற்றிய விதம் முற்றிலும் புதிதாக இருந்தது.
வடக்கு வாசல் இதழின் "சுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம்" என்னும் தலைப்பிட்ட ஒரு மாபெரும் இசைவிழா மற்றும் வடக்கு வாசல் பதிப்பகம் வெளியிட்ட ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா, மிகவும் கோலாகலமாக, மிகவும் சிறப்புடன் தலைநகர் இசை மற்றும் இலக்கிய ரசிகர்களுக்கு ஒரு மழைக்கால விருந்தாக அமைந்தது. இதோ கொட்டித் தீர்த்து விடுவேன் என்று வானம் தினம் மிரட்டும் மாரிக்காலத்தின் மூன்று மாலைகளை மிகவும் ரம்மியமாக மாற்றியது இந்த விழா.
கடந்த சில ஆண்டுகளாக தலைநகரில், பொதுவாக வடக்கு வாசல் ஏற்பாடு செய்யும் விழாக்களுக்கு எதிர்பார்ப்பு கலந்த பெரும் கூட்டம் ஒன்று எப்போதும் இருக்கும், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு, விழாவினைத் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்ற ஏற்பாடு செய்திருந்தது கூட்டத்தினை இன்னும் இரட்டிப்பாக்கியது. அன்று பார்வையாளர்களில் அதிகம் குழந்தைகளும் இளைஞர்களும்தான்.
29 ஜூலை 2011. வெள்ளிக்கிழமை மாலை சரியாக 6.00 மணிக்கு பார்வையாளர்களின் பலத்த கரவொலிகளைப் பின்னணியாகக் கொண்டு புன்னகைத்த வண்ணம் மேடையில் தோன்றினார் டாக்டர் அப்துல் கலாம். அவர் பிரவேசித்ததும் அவை முழுக்க ஒரு மின்சார அலையின் அதிர்வை உணர முடிந்தது. அவரைச் சுற்றிச் சுற்றி எத்தனை குழந்தைகள்... சில நேரங்களில் வயதில் பெரியவர்களே அவருக்கு நேரடியாக வணக்கம் தெரிவிக்கவும் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் குழந்தைகளுடன் அரங்கத்தில் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.
தன்னை எதிர்கொண்டு அழைக்க வந்த வடக்கு வாசல் ஆசிரியரிடம், "இப்போ வந்திருக்கிறது பென்னேஸ்வரனா?
ராகவன் தம்பியா?" என்று கலகலப்புடன் கலாய்த்து விட்டு மேடைக்கு வந்தார். தன் இருக்கையில் அமருவதற்கு முன்பு அன்று அவர் வெளியிடப்போகும் ஐந்து நூல்களில் ஒரு நூலிலின் ஆசிரியரான சனத்குமாரிடம், குழந்தைகளைப் பற்றி நிறைய அக்கறையோட நீங்க எழுதியிருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு... என்றும் தேவந்தி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் எம்.ஏ.சுசீலாவிடம், "உங்க ராமாயணக் கதை ரொம்ப நல்லா வந்திருக்கும்மா.." என்றும் தனியாகச் சொல்லி விட்டு மேடையேறினார், (பின்னர் நூல் வெளியிடும் போதும் அதையே தன்னிடம் சொன்னதாக என்னுடைய ஆசிரியை எம்.ஏ.சுசீலா கூறியது மகிழ்ச்சியாக இருந்தது)
ராஜ்குமார் பாலாவின் கணீரென்ற குரலில் கச்சிதமான அறிமுகத்துடன் விழா துவங்கியது. சுப்புடுவின் பேத்தி பூர்வஜா குமார் ஆனந்த் மற்றும் குமாரி ஜி.சௌம்யா ஆகியோரின் இறைவணக்கப் பாடல்களுடன் நிகழ்ச்சி துவங்கியது.
இந்த இறைவணக்கத்திலும் ஒரு விசேஷம் உண்டு. சுப்புடுவின் பேத்தி பூர்வஜா தன்னுடைய தாத்தாவின் நினைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகவே பிரத்யேகமாக இத்தாலியில் இருந்து வந்திருக்கிறார் என்று அவருடைய பெற்றோர்கள் சொன்னார்கள். அதே போல, இறைவணக்கம் பாடிய மற்றொரு பெண் சௌம்யா, இந்த ஆண்டுக்கான சுப்புடு விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த இருவருடைய அர்த்தம் பொதிந்த பங்கேற்புடன் நிகழ்வு துவங்கியது.
இந்திய ஆட்சிப்பணி மூத்த அதிகாரியும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஜி.பாலச்சந்திரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். ய.சு.ராஜன், சி.டி.சனத் குமார், சக்தி குழுமத்தின் சங்கர் வானவராயர், தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் இந்த பிரம்மாண்டமான இசைவிழாவுக்கு பொருளுதவி நல்கிய ஹெச்.சி.எல் நிறுவனத்தின் குழுமத் தலைவர் ஜே.வி.ராமமூர்த்தி, அக்க்ஷயா ஹோம்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சி.சுரேஷ்குமார், வாசன் கண் மருத்துவமனையின் பொது மேலாளர் எஸ்.சுதீர் ஆகியோர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடன் மேடையில் அமர்ந்திருந்தனர். சிறப்பு விருந்தினரையும் மற்ற விருந்தினர்களையும் சிறப்பு செய்த பிறகு நிகழ்ச்சியின் தலைவர் ஜி.பாலச்சந்திரன் தலைமை உரையைத் துவங்கினார். பொதுவாகவே இவருடைய உரை தில்லித் தமிழர்கள் இடையே மிகவும் பிரபலமானது. எப்போதும் மிகவும் ஆழமாக, பொருட்செறிவுடன் தன் பேச்சை அமைத்துக் கொள்பவர் ஜி.பாலச்சந்திரன். அன்றும் அவர் தன் உரையில் 2020க்குள் தன்னிறைவு அடைந்த நாடாகவும் ஒரு வல்லரசாகவும் திகழ வேண்டும் என்று நம்முடைய முன்னாள் குடியரசுத் தலைவர் கனவு காணும் அதே வேளையில் ஒரு ஆங்கிலப் பழமொழியில் சொல்வது போல, மக்களின் வரிசையின் கடைக்கோடியில் இருப்பவனுடைய குரல் தெளிவாகவும் உரக்கவும் கேட்கத் துவங்கும் போதுதான் தன்னிறைவு அடைந்த மக்களாட்சியை நோக்கிய முதல் அடியை ஒரு நாடு எடுத்து வைக்கும் என்றார். அப்போதுதான் கலாம் அவர்களின் கனவு முழுமை அடையும் என்றும் கூறினார்.
தமிழிசையின் சிறப்புக்களை எடுத்துரைக்கும் போது, இசைவடிவில் ஒலிக்குறிப்புக்களைத் தன் மொழி சார்ந்த எழுத்துக்களிலேயே வடிவமைத்துக் கொண்ட சிறப்பினைக் கொண்டது தமிழ் மொழியும் அதன் தொன்மையன இசை மரபும் என்று குறிப்பிட்டார்.
தலைவரின் உரைக்குப் பிறகு சென்னையில் இருந்து இந்த நிகழ்ச்சிக்குக் கலந்து கொள்ள வந்திருந்த கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் காலக்கணக்கில் சுருக்கமாகவும் பொருட்செறிவில் மிகப் பரந்த அளவிலும் உரை ஆற்றினார். பென்னேஸ்வரன் தன்னுடைய குருநாதர் மீது கொண்டிருக்கும் அளப்பரிய பக்தியும் ஈடுபாடும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நேர்த்தியிலேயே வெளிப்படுகிறது. பார்வையாளர்கள் வரிசையில் சுப்புடு வழக்கமாக எப்போதும் அமரும் ஒரு இருக்கையை ஒதுக்கி வைத்து அந்த இருக்கையை பட்டு சால்வையால் அலங்கரித்து அவருடைய பெயரை எழுதி வைத்திருப்பதில் இருந்தே பென்னேஸ்வரன், தன்னுடைய குரு சுப்புடுவின் மீது வைத்திருக்கும் அளப்பரிய பாசத்தை விளக்குகிறது. குடும்பத்தில் மூத்தோரை நினைவு கொள்ளும் சடங்குகளில் தலைவாழை இலையில் அவர்களுக்குத் தனியாகப் படையல்கள்
படைப்பார்கள். சாஸ்திரோர்த்தமாகவும் பித்ருக்களுக்கு செய்யும் கர்மாக்களில் அவர்களுக்குப் பரிமாறுவதான பாவனையில் விஷ்ணு இலை என்று ஒன்றை வைத்து அந்த இலையில் பரிமாறுவார்கள். இன்று தன்னுடைய குருவுக்கு இந்த அவையில் பென்னேஸ்வரன் செய்திருக்கும் அர்ப்பணம் தனித்துவம் கொண்டது. டாக்டர் கலாம் அவர்கள் தன்னுடைய கவிதையில் வடக்கு வாசலை நல்லோர் நுழையும் வாசல் என்றும் ஞானியர் நுழையும் வாசல் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். வடக்கு வாசல் இசை வல்லுனர்களுக்கான வாசல் என்றும் வாசிப்பை நேசிப்பவர்களின் வாசல் என்றும் இதனை மேலும் நீட்டிக்கலாம் என்றார்.
கீழாம்பூர் அவர்களின் உரையைத் தொடர்ந்து வடக்கு வாசல் பதிப்பகத்தின் ஐந்து நூல்கள் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்டன. ய.சு.ராஜன் வடக்கு வாசல் இதழ்களில் கட்டுரைத் தொடராக எழுதிய "சிந்தனைச் சிதறல்கள்", சி.டி.சனத்குமார் எழுதிய கல்விக் கட்டுரைத் தொடர் “விருட்சங்களாகும் சிறுவிதைகள்", வடக்கு வாசல் நேர்காணல்கள், ராகவன் தம்பி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் சனிமூலை மற்றும் எம்.ஏ.சுசீலா அவர்களின் தேவந்தி சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டன. மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்களும், வடக்கு வாசல் வடிவமைப்பாளர் ஆர்.செந்தில் குமார், சுரேஷ் சுப்பிரமணியன், தேவராஜன் விட்டலன், மீனு பிரமோத் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். 
அடுத்து டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசைநிகழ்ச்சி இருந்ததால், வெளியீட்டு விழாவும் விருந்தினர்களை சிறப்பு செய்யும் பகுதிகளும் ஒரு ராணுவ நிகழ்ச்சியைப் போல விறுவிறுப்புடன் தொய்வின்றி படுவேகமாக நடத்தி முடிக்கப்பட்டது.
பொதுவாக நூல் வெளியீட்டு விழாக்களில் வெளியிடப்படும் நூல்களைப் பற்றிய அறிமுக உரை அல்லது மதிப்புரை ஏற்பாடு செய்வார்கள். இந்த விழாவில் அப்படி யாரும் அழைக்கப்படவில்லை. அந்தக் குறையை இந்த நூல்களை வெளியிட்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்களே நிவர்த்தி செய்து விட்டார். தன்னுடைய உரையில் அன்று வெளியிடப்பட்ட ஒவ்வொரு நூலைப் பற்றியும் மிகவும் தெளிவான, சுருக்கமான பார்வையைப் பதிவு செய்திருந்தார். அமரர் சுப்புடு தனக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் தன் உரையில் சேர்த்திருந்தார். அதனை ய.சு.ராஜன் வாசித்தார்.
கலாம் அவர்களின் உரையைத் தொடர்ந்து நன்றி உரையாற்றினார் பென்னேஸ்வரன். (ஒருவேளை ராகவன் தம்பியோ?). வழக்கமான பெயர்ப்பட்டியலை வாசிக்கும் நன்றி உரையாக இல்லாமல் சுப்புடு அவர்கள் தனக்குச் சொன்ன ஒரு கதையை அவையினருக்குச் சொல்லி அந்தக் கதையையே தன்னுடைய நன்றி உரையாக மாற்றினார். (அந்தக் கதை பெட்டியில்).
துவக்க நாளன்று பென்னேஸ்வரன் நன்றியுரையில் சுப்புடு அவரிடம் சொன்னதாகச் சொன்ன கதை.
ஒரு மனிதர் ஆல் இந்தியா ரேடியோ வாசலில் கரோல்பாக் செல்வதற்காக 84ம் எண் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்தார். (இப்போது இந்த எண் கொண்ட பேருந்து இல்லை) ஒரு மணி நேரமாகியும் பேருந்து வந்த பாடில்லை. எதற்கு வெட்டியாக சும்மா நிற்க வேண்டும், விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தையாவது சொல்லலாம் என்று ஆரம்பித்தார். ஒரு ஆயிரம் முடிந்தது. பேருந்து வரவில்லை. இரண்டாவது ஆயிரத்தை முடித்தார். மூன்றும் முடிந்தது. பேருந்து வந்த பாடில்லை. நான்காவது முறையாக சொல்லத் துவங்கியபோது மேலே விஷ்ணுவுக்குக் கால் அமுக்கிக் கொண்டிருந்த லக்ஷ்மிக்கு அபாரக் கோபம் வந்தது.
நீயெல்லாம் ஒரு சாமியா? கீழே ஒருத்தன் ஆயிரக்கணக்குலே உன் பேரைச் சொல்லிக்கிட்டு இருக்கான். ஒரு கவலையும் இல்லாம படுத்து காலைக் காமிச்சிக்கிட்டு இருக்கே. போய் அவனுக்கு என்னதான் வேணும்னு கேட்டு ஏதாவது வரத்தைக் குடுத்துட்டு வா என்று விரட்டி அடித்தாள்.
மஹாவிஷ்ணுவும் அவசரமாக கருடனைக் கிளப்பி ஆல் இந்தியா ரேடியோ வாசலில் பிரசன்னமானார், “பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம்". உனக்கு என்ன வரம் வேண்டும் என்று லக்ஷ்மி கேட்கச் சொன்னாள், என்றார். அந்த மனிதர் கேட்டாராம்.
அந்த 84ம் நம்பர் பஸ் எப்போ வரும்?
இந்த மேடையில் எனக்கு வரமளிக்க இத்தனை நாராயணர்கள் இருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு உறுதுணையாக ஸ்பான்ஸர்கள் இருக்கிறார்கள். பக்கபலமாக வாசகர்களும் ரசிகர்களும் இருக்கிறீர்கள். என் முன்னே எத்தனை நாராயணர்கள் எனக்கு வரமளிக்க... ஆனால் உங்களிடம் என்ன கேட்பது என்று எனக்கு உண்மையாகவே தெரியவில்லை. உங்களிடம் எதையாவது கேட்பதை விட உங்கள் அனைவரையும் பல ஆயிரம் நாமங்கள் சொல்லி வந்தனம் செய்து என்னால் முடிந்த ஒன்றை உங்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
அது என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியாக மட்டுமே இருக்க முடியும்.
அனைவருக்கும் நன்றி. அனைத்துக்கும் நன்றி.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம் மற்றும் குழுவினர் வழங்கிய தமிழிசை தொடர்ந்தது.
வாரீர், தமிழ்த்தேன் பருக வாரீர் என அனைவரையும் அழைத்த சீர்காழி, டாக்டர் கலாம் எழுதிய “வளமான நாடாக்குவோம்’’ பாடல் பலத்த கரவொலியைப் பெற்றது. தினமணியில் வெளிவந்த கலாம் அவர்களின் இன்னொரு கவிதையான “என் இல்லத்தின் இனிய மரம்’’ என்னும் பாடலுடன் தொடர்ந்தது அனைவரின் சிந்தையைக் கவர்ந்தது-. தேவன் கோயில் மணியோசை, நீயல்லால் தெய்வமில்லை, மாயவித்தை செய்குறானே, சின்னஞ்சிறு பெண்போலே, சங்கே முழங்கு, உள்ளத்தில் நல்ல உள்ளம் போன்ற பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்தன.
வயலினில் சித்தூர் விஜயராகவன், மிருதங்கத்தில்-கும்பகோணம் பத்மநாபன், வழுவூர் ரவி - கஞ்சிரா, மலைக்கோட்டை ஆர்எம். தீனதயாளன்-மோர்சிங் என மிக அருமையான பக்கவாத்திய பலத்துடன் அன்றைய இசை நிகழ்ச்சி அமர்க்களப்பட்டது.
30 ஜூலை 2011 (சனிக்கிழமை) அன்று மாலை சக்தி அமைச்சகத்தின் செயலர் பி.உமா ஷங்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இவர் கர்நாடக சங்கீத சபாவின் துணைத்தலைவர். சுப்புடு உயிருடன் இருந்தவரை டெல்லியில் கர்நாடக சங்கீதம் பயிற்றுவிப்பதற்கும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்துவதற்கும் ஒரு மையம் வேண்டும் என்கிற விஷயத்தை வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவருடைய கனவை நனவாக்கும் வகையில் அதன் தலைவர் ராமசுப்பன் அவர்களும் உமா ஷங்கர் அவர்களும் ஒரு நல்ல கட்டிடத்தை
கர்நாடக சங்கீத சபாவுக்காக எழுப்பும் முயற்சியில் ஏறத்தாழ எண்பது சதவிகிதம் நிறைவேற்றி விட்டனர். இந்தப் பெருமை முழுக்க இவர்களையே சேரவேண்டும் என்றார் பென்னேஸ்வரன். வடக்கு வாசல் இதழ் வழியாக சிலருக்கு பிரதமர் அலுவலகத்தின் மருத்துவ உதவிகள் பெற்றுத் தருவதற்கு எப்போதும் பேருதவியாக இருந்து வரும் மாநிலங்களவை உறுப்பினர் அம்பேத் ராஜன், தமிழிசையிலும் கர்நாடக இசையிலும் பேரார்வம் கொண்ட உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் ஸ்கந்தன் அவர்கள், தலைநகர் தமிழர்களுக்குப் பலவகைகளிலும் உதவிகள் நல்கி வரும் ஐபிஎஸ் அதிகாரி ஜெகதீசன் கண்ணன் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.
இந்த இசைவிழாவின் இன்னாரு சிறப்பு அம்சமாக சுப்புடு குடும்பத்தினர் அமைத்துள்ள விஷ்வரூபா அறக்கட்டளை சார்பாக தலைநகரின் இளைய இசைக் கலைஞர்கள் செல்வி ஜி.சௌம்யா (குரலிசை) மற்றும் செல்வன் தி.ஸ்ரீராம் (கருவி இசை) ஆகியோருக்கு இந்த ஆண்டின் சுப்புடு விருது வழங்கப்பட்டது. ஸ்ரீராம் வெளியூரில் படித்துக் கொண்டிருப்பதால் அவருடைய தந்தை திரு.தியாகராஜன் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து நித்யஸ்ரீ மஹாதேவன் இசைநிகழ்ச்சி தொடர்ந்தது. ரீதிகௌளையில் அமைந்த பாபநாசம் சிவனின்
தத்வமறிய தரமா என்ற கீர்த்தனையுடன் படு அமர்க்களமாகத் துவங்கிய கச்சேரி, அமரர் டி.கே.பட்டம்மாள் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடலான தியாகய்யரின் மரியாதகாரய்யா, சியாமா சாஸ்திரியின் பாஹிமாம் ஸ்ரீராஜராஜேஸ்வரி, தீஷிதரின் ஸ்ரீகாந்தி மதீம் என வலம் வந்து, பாரதி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என அமர்க்களப் படுத்தினார். எம்.ஏ.கிருஷ்ணசாமி-வயலின், சேர்த்தலை அனந்த கிருஷ்ணன்-மிருதங்கம் மற்றும் ஹச்.சிவராமகிருஷ்ணன் - கடம், என ஒரு அற்புதமான பக்கவாத்தியக் குழு நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கியது. மணி இரவு 9.30க்கு மேல் கடந்தும் ரசிகர்கள் யாரும் கலையாமல் ஏதோ மகுடிக்குக் கட்டுப்பட்டது போல சங்கீத அலைகளில் மிதந்து கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு டெல்லியின் இசையரங்கில் காணக்கிடைத்த காட்சி இது என்று சொல்ல வேண்டும்.
விழாவின் இறுதி நாள் 31 ஜூலை 2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மைய வணிகத்துறையின் இணை இயக்குநர் விஜய் ராஜ்மோகன் மற்றும் தேசிய நாடகப் பள்ளியின் ஒலி இயக்குநர் எஸ்.மனோகரன் ஆகியோர் சிறப்பிக்கப் பட்டனர். விழாவின் மூன்று நாட்களிலும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜி.பாலச்சந்திரன் விருந்தினர்களை
சிறப்பு செய்தது மட்டுமல்லாது இசை நிகழ்ச்சிகளில் இறுதி வரை கலந்து கொண்டது இன்னாரு சிறப்பாகும். இறுதி நாள் என்பதால் தன்னுடைய நன்றியுரையை எழுதிக் கொண்டு வாசித்தார் பென்னேஸ்வரன். அவருடைய நெகிழ்ச்சியான நன்றியுரையைத் தொடர்ந்து அமரர் சுப்புடு அவர்களின் மாப்பிள்ளை, உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், சுப்புடு குடும்பத்தினர் சார்பில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பென்னேஸ்வரனை சிறப்பு செய்தார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கிருஷ்ண குமார் அமரர் சுப்புடு அவர்களை இதைவிட யாரும் சிறப்பு செய்து விட முடியாது என்றும் வடக்கு வாசல் இதழுக்கும் பென்னேஸ்வரனுக்கும் சுப்புடு அவர்களின் ஆசிகள் எப்போதும் இருக்கும் என்றும் நெகிழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை மௌனராகம் முரளி குழுவினரின் தமிழ்த் திரையில் காந்தர்வக் குரல்கள் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தியாகராஜ பாகவதர், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பிஸ்ரீனிவாஸ், ஏ.எம்.ராஜா, சி.எஸ்.ஜெயராமன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மதுரை சோமு, பாலமுரளி கிருஷ்ணா, பி.சுசீலா, எம்.எல்.வசந்தகுமாரி, ஜிக்கி ஆகியோரின் காலத்தால் அழியாத பாடல்களை அனந்து, முரளி, பாண்டியன், ருஃபியான், அர்ச்சனா ஆகியோர் மிகவும் அருமையாகப் பாடினார்கள். பக்கத்துணையாக நின்ற
வாத்தியக்குழு பழங்காலக் கருவிகளையும் இன்றைய எலக்ட்ரானிக் வாத்தியங்களில் பிய்த்து உதறினார்கள். அனந்து பாடிய ஒவ்வாரு பாடலும் பலத்த கரகோ‘த்தைப் பெற்றது. தியாகராஜ பாகவதர், மதுரை சோமு போன்ற உச்சஸ்தாயியில் சஞ்சாரிக்கும் பாடல்களையும் மிக அநாயாசமாகப் பாடி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார் அனந்து.
இந்த இசைநிகழ்ச்சியின் சிறப்புக்கு இன்னொரு சான்றாக, பார்வையாளர்களில் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு மேடையேறி, இத்தனை அற்புதமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் வடக்கு வாசலுக்கு அனைவரும் ஒருநிமிடம் எழுந்து நின்று கரவொலிகளால் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டியதற்கு இணங்க ஏறத்தாழ ஆயிரம் பேர் கூடி இருந்த திருவள்ளுவர் கலையரங்கமே அதிரும் வண்ணம் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அதனை ஆமோதித்தார்கள்.
இந்த இசைவிழாவில் பாராட்டத்தக்க அம்சங்களாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை - தனியொரு மனிதராக, வடக்கு வாசல் அலுவலகத்தின் ஊழியர்கள் துணை மட்டுமே கொண்டு இந்த விழாவை மிகவும் சீராகத் திட்டமிட்டு ஏற்பாடு செய்தது, மூன்று நாட்களும் மேடையில் கட்டுப்பாட்டுடனும் சீராகவும் நிகழ்வுகளை நடத்தியது, அமரர் சுப்புடுவுக்கு தனியிருக்கை ஒதுக்கியது, ஸ்பான்ஸர்களின் பெயர்களை இருக்கைகளில் எழுதி ஒட்டிவைத்து அதிகக் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொண்டது, கலைஞர்கள் தங்களின் வடக்கு வாசல் ஊழியர்கள், டெல்லி தமிழ்ச் சங்க ஊழியர்கள், இந்த விழாவுக்காக உழைத்த அனைத்து ஊழியர்களையும் மேடையில் அழைத்து சிறப்பு செய்தது என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்த வடக்கு வாசல் இதழும் அதன் ஆசிரியர் பென்னேஸ்வரன் தலைநகர் தமிழர்கள் அனைவரின் பாராட்டுதல்களுக்கு உரியவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று சொல்லலாம்.


மீனா வெங்கி
| Other articles: |
|---|
|





