கலைமகள் மே 2009 இதழில் என்னுடைய நேர்காணல் (கேள்வி பதில் என்று கூட வைத்துக் கொள்ளலாம்) வெளியிட்டிருக்கிறார் கீழாம்பூர். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. மின்னஞ்சலில் அவர் அனுப்பி வைத்த கேள்விகளுக்கு ரொம்ப நாட்களாக அல்வா கொடுத்து இறுதியில் அவசரக் கோலமாக அள்ளித் தெளித்து அனுப்பி வைத்த என்னுடைய பதில்கள் இவை.ரொம்பவும் அநியாயமான தலைப்பு ஒன்று கொடுத்திருக்கிறார் கீழாம்பூர். அது வேண்டாம். வெறும் கேள்வி பதில்கள் மட்டும் இங்கே.
எழுத்து என்பது தவம் என்று எண்ணுகிறீர்களா?
உண்மையாகவே அப்படி எல்லாம் நினைப்பது இல்லை–என்னுடைய எழுத்துக்களைப் பொறுத்தவரை. ஆனால் நான் மிகவும் மதிக்கும் படைப்பாளிகளின் பட்டியலில் மிகவும் முக்கியமான இடங்களைப் பிடித்த தி.ஜானகிராமன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பூமணி, பிரபஞ்சன் ஆகியோரின் எழுத்துக்களைப் படிக்கும் போது எழுத்து உண்மையாகவே ஒரு தவமாகத்தான் இருக்க வேண்டும் என்னும் மரியாதை எப்போதும் எனக்கு உண்டு. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருடைய படைப்புத் திறனையும் அவர்கள் எழுதுகின்ற வேகத்தையும் பார்க்கும்போது அளப்பரிய ஆச்சயம் கொள்வது உண்டு. லேசாகப் பொறாமை கொள்வதும் உண்டு. என்னைப் போன்ற சோம்பேறிகள் எழுத்தைத் தவம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தால் என்றாவது ஒருநாள் வகையாக மாட்டிக்கொண்டு மரியாதையைத் தொலைத்துக் கொள்ள வேண்டி வரும் என்பதால் எழுத்தை தவம் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளக் கூச்சமாகவும் அச்சமாகவும் இருக்கிறது.
எப்பொழுது எழுத ஆரம்பித்தீர்கள்?
வகையோ முறையோ படுத்தாத எழுத்துக்கள் என்னுடையவை. ஒரு சிறிய கூடையில் அள்ளக்கூடிய அளவில் மட்டும் குப்பைகளை மட்டுமே எழுதி இருக்கிறேன். அவற்றை எழுத்து என்று நீங்கள் என்றாவது ஏற்றுக்கொண்டால் ஆச்சரியப்படுபவர்கள் வரிசையில் முதல் ஆளாக நானே இருப்பேன். என்னுடைய நாடகங்களுக்காக சில காட்சிகளையும் பல நேரங்களில் வசனங்களையும் எழுதத் துவங்கினேன். மிகச்சில சிறுகதைகளை எழுதி இருக்கிறேன். சனிமூலை கட்டுரைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஸஞ்ஜயன் என்கிற பெயல் சில அரசியல் கட்டுரைகள் மற்றும் வியாஸன் என்கிற பெயரில் சில நூல் மதிப்புரைகளையும் எழுதி வருகிறேன். இதுவரை கவிதைகள் எதையும் எழுதாமல் கவிதைகளின் மேல் எனக்கு உள்ள மரியாதையைக் காப்பாற்றி வருகிறேன். தமிழுக்கு நான் செய்யும் மிகப்பெரிய தொண்டாக இதை நான் நினைக்கிறேன். என்னுடைய நாற்பது வயதுக்கு மேல்தான் எழுதத் துவங்கினேன்.
வடக்கு வாசல் இதழ் துவங்க என்ன காரணம்?
விதிப் பயன் என்று சொல்லட்டுமா? தில்லியில் இருந்து பல வருடங்களாக இதழ்கள் எதுவும் வரவில்லை. வந்த ஓரண்டு இதழ்களும் மிகக் குறுகிய காலகட்டத்தில் நின்று போனது. தில்லியில் இருந்து ஏதாவது ஒரு இதழ் வரவேண்டும் என்று ரொம்ப நாட்கள் ஆசைப்பட்டேன். அதுவும் கோமல் ஆசிரியராக இருந்த சுபமங்களா போன்ற ஒரு இதழ் தலைநகரில் இருந்து வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். யாரை நடத்தச் சொல்லிக் கேட்பது? நான் சொல்லி யார் நடத்துவார்கள்? எனவே நானே துவங்கினேன். விருப்ப ஓய்வு எடுத்ததனால் கிடைத்த பணத்தைக் கொண்டு செலவு செய்தேன். ஜார்ஜ் மாத்யூ போன்ற ஒரு நல்ல அச்சக உரிமையாளர் கிடைத்ததால் அவர் தாராளமாக அனுமதிக்கும் கடன்களை வைத்துக் காலம் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்.
நாடக அனுபவங்களை யார் மூலம் கற்றுக் கொண்டீர்கள்?
தலைநகரில் நாடக விழாக்களில் நான் பார்த்த நாடகங்களும், எங்கள் ஊரில் நான் பல மாதங்கள் பல இரவுகளைத் தொலைத்து கிராமங்களில் அலைந்து திரிந்து நான் பார்த்த பல தெருக்கூத்துக்களின் வீயமும் என்னை நாடக இயக்கத்தின் பக்கம் தலைகாட்டத் தைரியம் கொடுத்தன. என்னுடன் நாடகத்தில் பணி செய்த நடிகர்களே என்னுடைய பயிற்சிக்களங்கள். நாடகங்களில் நான் இழைத்த தவறுகளே எனக்குக் கற்றுக் கொடுத்த குருபீடம்.
பித்துக்குளி முருகதாஸ் கச்சேரி செய்த போது மூன்று மணிநேரம் மிருதங்கம் – தபேலா இவைகளை வாசித்து அசத்தினீர்களாம். இசை மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
வடக்கு வாசல் ஏற்பாட்டில் நடந்த பக்தி இசை விழாவில் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் நான் மிருதங்கம் வாசிக்க வில்லை. தபேலா வாசித்தேன். அசத்தவில்லை. பித்துக்குளியும் மாதங்கி அம்மாவும் எத்தனை இடங்களில் முகம் சுளித்தார்கள் என்று பக்கத்தில் உட்கார்ந்து வாசித்த எனக்குத்தான் தெரியும். கிருஷ்ணகிரியில் இளமை நாட்களில் இசைக்குழுக்களில் தபேலா, பேங்கோஸ், டிரிபிள் காங்கோ போன்ற வாத்தியங்களை வாசித்து இருக்கிறேன். அந்த வாசனையில் பல ஆண்டுகள் கழித்து அன்று தபேலா வாசிக்கத் துணிந்தேன். அதுவும் எனக்குத் தெரியும் என்பதால் அல்ல. பித்துக்குளி போன்ற இசை இமயங்களுடன் உட்கார்ந்து இருக்கும் ஒரு பாக்கியத்துக்காக தபேலாவுடன் உட்கார்ந்தேன்.
வடக்கு வாசல் மூலம் இலக்கியம் செய்து கொண்டே டெல்லி கலாட்டா டாட்காம் ஆரம்பிக்கப்போகிறீர்களா?
ஆமாம். மிக விரைவில் அதாவது மே மாத முதல் வாரத்தில் டெல்லி கலாட்டா டாட்காம் என்னும் இணையதளம் துவங்கப்போகிறேன். டெல்லி கலாட்டா என்பது இப்போதைய தேர்தல் நேர வசதிக்காக வைக்கப்பட்ட பெயர் அல்ல. தற்போதைய அரசியல் நிலவரத்தை மனதில் கொண்டு வைக்கப்பட்ட பெயரும் அல்ல. எதிர்காலத்தில் ஏதாவது கலாட்டா செய்வோம் என்று பிரகடனப்படுத்துவதற்காகத் துவக்கப்படும் தளமும் அல்ல.
இந்தப் புவி மண்டலத்தில் டெல்லி என்று தோன்றியதோ அன்றே கலாட்டாவும் தோன்றிவிட்டது என்பது வரலாறு. டெல்லி என்ற பெயரில் ஒரு நகரம் தோன்றிய கணத்தில் இருந்தே படையெடுப்புக்கள், ஆட்சி மாற்றங்கள், ஆட்சிக்லைப்புக்கள், தலைமுறை மாற்றங்கள், தலைமை மாற்றங்கள், வஞ்சகங்கள், துரோகங்கள், தியாகங்கள் என எல்லாம் மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கடுக்காகத் தங்களை அரங்கேற்றிக் கொண்டு காலத்தின் தீராப்பக்கங்களில் சரித்திரங்களாகச் செதுக்கி வந்திருக்கின்றன.
இன்றும் பல விசித்திர நாடகங்கள் அரங்கேறும் மேடையாக, அங்கதங்கள் நிறைந்த காட்சிகள் மாறி மாறித் தோன்றும் ஆட்டக்களமாக தில்லி விளங்குகிறது. இப்படிக் கலாட்டாக்கள் பூத்துக்குலுங்கும் புதிக்களபூமியை நோக்கித்தான் நம் அனைவரின் வீரம், மானம், மரபு, காவடி தூக்குதல், பிச்சைப் பாத்திரங்களை ஏந்துதல் என எல்லாமே டெல்லியில்தான் என்று ஆகிவிட்டது.
எனவே, டெல்லியில் அவ்வப்போது நடக்கும் கலாட்டாக்கள், நல்லவை, கெட்டவை, அறம், கொடை, துரோகங்கள், நவரசம் ததும்பும் நாடகங்கள் என எல்லாவற்றைப் பற்றியும் கொஞ்சம் பேசுகின்ற, விவாதிக்கின்ற, பதிவு செய்கின்ற களமாக இணையத்தில் உலவச்செய்யலாம் என்னும் எண்ணத்தில் விளைகிறது இந்த டெல்லி கலாட்டா டாட்காம் இணைய இதழ்.
இவரைப் பேட்டி எடுக்க முடியவில்லையே என்று யாரையாவது எண்ணி வருத்தப்பட்டது உண்டா?
நான் இதுவரை நேர்காணல் செய்தவர்கள் எல்லாம் அதிக அளவில் வெளியே தெரியப் படாதவர்களாக இருந்தாலும் தாங்கள் எடுத்துக்கொண்ட பணிகளில் தங்களை முழுக்க அர்ப்பணித்தவர்கள். இவர்களைப் போல வாழவேண்டும் என்று பலருக்கும் ஒரு முன்மாதியாகத் திகழக்கூடியவர்கள். பிரபலமானவர்கள் யாரையும் நான் பேட்டிக்கு அணுகியது கிடையாது. தலைநகருக்கும் தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கும் வரும் பிரபலங்களிடம் இருந்து பெருமளவில் ஒதுங்கி இருப்பவன் நான். தமிழகத்தின் நடிகர்கள் அல்லது அரசியல் பெரும் பிரமுகர்கள் வரும்போது அவர்களை நேரில் சந்திப்பது என்பது பல நேரங்களில் தன்மானத்தை அடகு வைத்துச் செய்யக் கூடிய காயமாக அமைந்து விடுகிறது. எனவே எந்த நரி வலம் இடமாகப் போனாலும் கவலைப்படுவது இல்லை. எனவே நீங்கள் சொல்வது போன்ற குறை எதுவும் எனக்குக் கிடையாது. ஆனால் மிக நல்ல படைப்பாளிகளும் நல்ல கலைஞர்களும் தலைநகருக்கு வரும்போதும் துரதிருஷ்டவசமாக காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டு வருகிறார்கள். எனவே பலரை நேர்காணல் செய்ய வேண்டும் என்று நினைத்தும் முடியமால் போனது உண்டு. அதை நினைத்து எப்போதும் எனக்கு வருத்தம் உண்டு.
சின்ன வயசு கிருஷ்ணகிரி நாட்களை கொஞ்சம் அசைபோடுங்களேன்..
அசை எதற்குப் போடவேண்டும்? முழுதாக ஒரு புதினம் எழுதும் திட்டம் ஒன்று இருக்கிறது. இப்போதைக்கு எதையாவது அசைபோட்டு சில சுவாரசியமான பழைய கதைகளை எழுதினால் இப்போது செய்வது போல அடிக்கடி ஊருக்குப் போய்விட்டு வரமுடியாது. டின் கட்டி விடுவார்கள். ஒன்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தக் காலத்தில் இளம் வயது சேட்டைகளால் நிறைய பெற்றோர்களின் வயிற்றெச்சலைக் கொட்டிக் கொண்டதால் அவர்களுடைய சாபம்தான் இப்போது அழகிய சொர்க்கமான கிருஷ்ணகிரியை விட்டு விட்டு வந்து வேற்று மண்ணில் சோற்றுக்கு உழைக்கவேண்டிப்போனது என்று நினைப்பது உண்டு.
பேட்டி- ஹரிதன்
09 மே 2009
உங்கள் கருத்துக்களை raghavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். |