யஹாங் ஸப் சோர் ஹை
இது பொதுவாக அரசியல் சார்பு இல்லாத, நடைமுறை அரசியல் செயல்பாடுகளுடன் அதிகம் தொடர்பு இல்லாத சொல்லப்போனால் எதிலும் பங்கேற்காத பொறுப்பற்ற சோம்பேறித் தனமாக ஆட்கள் டெல்லியின் டீக்கடைகளிலும் சிற்றுண்டி விடுதிகளிலும் சவரக்கடைகளிலும் காத்திருக்கும்போது பேசும் அரசியல் பேச்சில் அடிக்கடி சொல்லும் வார்த்தை. இங்கே எல்லோரும் திருடர்கள் என்னும் ஒரு வார்த்தை உதிர்ப்போடு தங்களின் அரசியல் அறிவைக் காட்டிக் கொண்ட திருப்தியில் இருக்கும் ஆட்கள் இவர்கள்.
இந்தியாவின் தலைநகரமாகவே இருந்தாலும் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்....
டெல்லியின் மொத்த ஜனத்தொகையில் ஏறத்தாழ 84.8 சதவிகிதம் படிப்பறிவில்லாதவர்கள் என்று சொன்னால் என்னை நம்ப மாட்டீர்கள். இன்னும் 15.2 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள் என்றால் துண்டு போட்டு தாண்டச் சொல்வீர்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (முறையாகப் பதிவானவை) 3.6 சதவிகிதம்.
எக்கச்சக்கமாகப் பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள். நிறையப் பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள். அரசியல் வழியாகப் பணம் சேர்த்த பணக்காரர்கள். லஞ்சம் வழியாகத் திருட்டு முழியுடன் பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள், என்று பல்வேறு ரூபங்களில் பணக்காரர்கள் டெல்லியில் திரிந்தாலும் அதற்கு சரிசமமாக பிளாட்பாரங்களில் மட்டுமே வசிக்கும் படு ஏழைகளும் இருக்கவே செய்கிறார்கள்.
அதைவிட காமெடி என்னவென்றால் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய பெரிய கட்சிகளின் தயவில் இந்தியர்களே அல்லாத, இந்தியக் குடிமக்கள் ஆவதற்குக் கூடத் தகுதி இல்லாத பங்களாதேஷிகள் மற்றும் நேபாளிகள் பலரும் மேளதாளத்துடன் வாக்காளர் அடையாள அட்டையுடன் டெல்லியின் பல மையமான பகுதிகளில் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் என்பதால் இவர்கள் எல்லாம் காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் வாக்காளர்கள் என்று பாரதிய ஜனதா கட்சி அடிக்கடி குற்றம் சாட்டும். காங்கிரஸ் தலைவர்களும் ஒருமாதிரி திருட்டு முழியுடன் இதுபற்றி எதையாவது பேசி ஊடகங்களில் சமாளிப்பார்கள்.
இடையில் தடுக்கி விழுந்தால் அமைச்சகங்களும் அரசு அலுவலகங்களும் குவிந்திருப்பதால் எங்களைப் போன்ற நடுத்தர வர்க்கமும் கும்பல் கும்பலாக இருக்கிறோம். அரசு ஊழியர்களில் அதிகபட்சம் தேர்தல் பணிகளுக்குப் போவதால் இவர்களின் வாக்குகள் எந்த வாக்குச் சாவடியிலும் அதிகம் பதிவாவது இல்லை. அஞ்சல் வழி வாக்கு என்றெல்லாம் இருக்கிறது. நானும் இருபத்து ஐந்து ஆண்டுகள் அரசாங்கத்தில் குப்பை கொட்டி இருக்கிறேன். பல தேர்தல்களில் பணியாற்றியிருக்கிறேன். வாக்களிக்கிறாயா நாயே என்று யாரும் கேட்டதில்லை. இந்த நாய்க்கும் தேடியலைந்து அல்லது சண்டை போட்டு அஞ்சல் வழி வாக்களிக்க வேண்டும் என்று என்றும் தோன்றியது இல்லை. அதே போல அஞ்சல் வழியாக எனக்குத் தெரிந்து எந்த அதிகாரியும் வாக்களித்து நான் பார்த்தது இல்லை. எனவே பல அரசு ஊழியர்களின் வாக்குக்கள் கள்ள வாக்காக உருமாற்றம் பெறுவதற்கு பலத்த வாய்ப்புக்கள் உள்ளன. இது என்னுடைய அனுமானம்தான். இதற்கான ஆதாரம் வேண்டும் என்று கேட்டால் என்னால் முடியாது.
இந்த ஊரில் நாளை நடக்கப் போகும் தேர்தலில் நிற்கப்போகும் மொத்த வேட்பாளர்கள் 160. 1.1 கோடி வாக்காளர்கள் நாளை இவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகிறார்கள்.
இந்த முறை தேர்தல் ஆணையம் செய்த Delimitation என்று சொல்லக்கூடிய தொகுதி மறுசீரமைப்புச் சிக்கல்கள் - குளறுபடிகள். இங்கே மொத்தம் 7 பாராளுமன்றத் தொகுதிகள்.
2004 தேர்தலில் காங்கிரஸ் ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. தெற்கு டெல்லி மட்டுமே பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்தது. ஒரு காலத்தில் டெல்லியை பாஜகவின் கோட்டை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கோட்டை கடந்த 11 ஆண்டுகளாக காங்கிரஸ் வசம் உள்ளது. இந்தத் தேர்தலிலும் போட்டி என்பது இந்த கட்சிகளுக்கு மட்டும்தான். மற்ற சிறு கட்சிகள் எல்லாம் ஏதோ தமாஷ் காட்டுகிறார்கள் என்கிற அளவில்தான் டெல்லி சேட்டுகள் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயிப்பது கஷ்டம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தேர்தலுக்கு ஒட்டி நடந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் கொஞ்சம் சிரமம் கொடுக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஷீலா தீக்ஷித் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கினாலும் சாதனைகளாலும் அந்தத் தேர்தலில் பின்னிப் பெடல் எடுத்துவிட்டார்.
தொடர்ந்து மூன்று பதவிக்காலங்கள் முதலமைச்சர் ஆன பெண்மணி என்கிற பெருமையும் தொடர்ந்து 11 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து வரும் இந்தியப்பெண்மணி என்னும் பெருமையும் பெறுகிறார் ஷீலாஜி.
கடந்த பல ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் இருந்தபோதும் உருப்படியாகத் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ளாமல் வெறுமனே உட்கார்ந்து உப்புமா தயிர்வடை சாப்பிட்டு விட்டு தேர்தல் நேரங்களில் மட்டும் உதார் விட்டு வரும் பிஜேபியைக் கொஞ்சம் காமெடியாகப் பார்க்கவும் ஆரம்பித்து விட்டார்கள் டெல்லி சேட்டுக்கள். ஆனாலும் வாடும் பயிருக்கு அங்கங்கே சற்று நீர் பாய்ச்சுகிறார்கள் அதன் தலைவர்கள். எப்போதாவது எதையாவது தூக்கத்தில் எழுந்து பேசுவது போல பேசிவிட்டுப்போகிறார்கள் சில வயசான தாத்தாக்கள். பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகளாகத் தாங்கள் மட்டுமே தலைவர்களாக இருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி வாழும் இந்தப் பெரிசுகள் எப்போதாவது எதையாவது வலுவில்லாத விஷயங்களாகக் கிளப்பி விடும். அப்புறம் தங்களுக்குள் வெளியில் தெரியாமல் சண்டை போட்டுக் கொள்ளும். அற்புதமான வாய்ப்புக்கள் பல வகைகளில் அமைந்தும் கட்சியை வளர விடாமல் செய்த பெருமை தேசிய அளவில் பாஜகவுக்கு மட்டுமே உண்டு.
எல்லா மாநிலங்களிலும் தராதரமின்றித் தொடரும் கோஷ்டி அரசியல் டெல்லியிலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பல ஆண்டுகளாகக் கொடிகட்டிப் பறந்து வருகிறது. ஷீலா கோஷ்டி, கபில் சிப்பல் கோஷ்டி, ஆனந்த் கோஷ்டி எனத் தனியாகக் களம் அமைத்து உட்கட்சி அரசியல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் பொழுது நல்ல படியாகப் போய்க் கொண்டிருந்தது. காங்கிரசுக்கும் பாவம் இப்போது கெட்ட நேரம். சில நாட்களளாக ஓய்ந்திருந்த சீக்கியர்கள் பிரச்னை மீண்டும் தலைதூக்கியது. தேர்தல் நேரத்தில் சொல்லி வைத்தது போல ஜெகதீஷ் டைட்லர் மற்றும் ஸஜ்ஜன் குமார் ஆகியோரை 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக் கலவரங்கள் தொடர்பான குற்றங்களில் இருந்து சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது டெல்லி சீக்கியர்கள் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கான எதிர்வினையாக ப.சிதம்பரத்தின் செய்தியாளர் கூட்டத்தில் ஒரு சீக்கியர் அவருடைய காலணியை செத்துப் போன எலியைத் தூக்கிப் போடுவது போலத் தூக்கிப் போட வைத்தது.
பல ஆண்டுகள் வீட்டுக்குள் இருந்த சீக்கியர்கள் வீதிகளுக்கு வந்து போராடத் துவங்கினார்கள் அதனால் காங்கிரஸ் கட்சி ஜெகதீஷ் டைட்லர் மற்றும் ஸஜ்ஜன் குமார் இருவரையும் வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டியதாயிற்று. ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் மேல் சீக்கியர்கள் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலகத்தில் குழந்தைகளாக இருந்த குட்டி சர்தார்கள் எல்லோரும் இப்போது வாக்களிக்கும் வயசுக்கு வந்து விட்டார்கள். அவர்கள் இந்த நூற்றாண்டில் இந்தியப் பாகிஸ்தான் பிரிவின் போது நிகழ்ந்த ஒரு வன்முறைக்கு ஏறத்தாழ இணையான வன்முறையைப் பார்த்தவர்கள். இவர்கள் பலரின் முன்பே அவர்கள் வீட்டுப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்ப்பட்டார்கள். பல சீக்கிய ஆண்கள்கொல்லப்பட்டார்கள். வீடுகள் சூறையாடப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. பல சீக்கியக் குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன. இவற்றுக்கெல்லாம் பல காங்கிரஸ் தலைவர்களைப் பல்லாண்டுகளாகக் குற்றம் சாட்டி வருகிறது சீக்கிய இனம். இந்த வன்முறையைக் கண்கூடாகப் பார்த்த குழந்தைகள் இப்போது வாக்களிக்கிறார்கள். அவர்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகம். எனவே எதிர்க்கட்சியாக உருப்படியாக எதுவும் செய்யாமல் உப்புமா தயிர்வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் தவிர்க்க முடியாத வகையில் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த வாக்குகள் போகும் என்கிறார்கள் தலைநகரின் பல மூத்த பத்திரிகையாளர்கள்.
எனவே காங்கிரஸ் கட்சிக்குக் கொஞ்சம் சோதனைதான். ஆனால் சட்டசபைத் தேர்தலில் நிகழ்ந்தது போன்ற ஆச்சரியத்துக்கும் நாம் தயாராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் டெல்லியைப் பொறுத்தவரை ஷீலா தீக்ஷித் செய்து வரும் பணியின் தாக்கங்களும் வாக்காளர்கள் மனதில் இல்லாமல் இல்லை.
இந்தக் கட்டுரையை முடிப்பதற்கு முன்னால் ஒன்றைச் சொல்லி நிறைவு படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
டெல்லியில் தேர்தல் நடக்கும் சுவட்டையே பார்க்க முடியாது. இங்கே தெருவுக்குத் தெரு மஹா கண்றாவியான போஸ்டர்கள் கிடையாது. இரட்டை வண்ணங்களில் மூன்று வர்ணங்களில் சுவர்களில் தீட்டப்பட்ட விளம்பரங்கள் கிடையாது. தலைவர்களின் பந்தா துளியும் கிடையாது. வேட்பாளர்களின் பந்தா கிடையாது. அவர்களின் தொண்டரடிப் பொடி ஆழ்வார்களின் கலாட்டா சிறிதும் கிடையாது.
ஏதோ ஒரு விவேக் படத்தில் காண்பிக்கிறது போல ஆகாய விமானத்தில் வரும் முதல்வரைப் பாதுகாக்க சாலையில் போக்குவரத்தை நிறுத்தும் அரசாங்க அராஜகம் கிடையாது. ஒலிபெருக்கி அராஜகம் கிடையாது. பொதுக்கூட்ட அராஜகம் கிடையாது. எனவே, சாலைகளை அடைப்பது கிடையாது.
காலில் விழுந்து எழுகின்ற நபும்சகத் தனங்கள் கிடையாது.
நம்ம ஊரில் திமுக மற்றும் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சார்ந்த தொலைக்காட்சிகளைப் பார்க்கும்போது கிட்டும் ஒவ்வாமை உணர்வு இந்த ஊர் தொலைக்காட்சி ஊடகங்களில் கிடையாது.
இவை எல்லாவற்றையும் விட இங்கே விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற அரசியல் விநோதங்கள் கிடையாது.
இவை எவையும் இல்லாமல் நாளை நாங்கள் எங்கள் விரல்களில் மை வைத்துக் கொள்ளப்போகிறோம்.
06 மே 2009
உங்கள் கருத்துக்களை raghavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். |