எங்களைப் பற்றி
எங்களைப் பற்றி
வடக்கு வாசல்
11 செப்டம்பர் 2005 அன்று டெல்லியில் விஞ்ஞானி ய.சு.ராஜன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், கவிஞர் வைரமுத்து, ரிலையன்ஸ் வி.பாலசுப்பிரமணியன் ஆகியோரால் வடக்கு வாசல் முதல் இதழ் வெளியிடப்பட்டது
பல ஆண்டுகளாக நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருவது என்னவென்றால், வடக்கு வாசல் குறித்து எதையாவது பிரகடனப் படுத்தவோ, அல்லது இப்படியெல்லாம் செய்வோம் என்று சொல்லிக் கொள்ளவோ எப்போதும் ஒன்றும் இல்லை. எளிமை – தெளிவு – உறுதி என்னும் பாதைகளை, நோக்கங்களில் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறோம். பாவனைகள் ஏதுமற்று தெளிவும் எளிமையும் கொண்ட படைப்புக்களுக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டு வருகிறோம்.
தனிப்பட்ட வகையில் எனக்குப் பலவகைகளிலும் ஆதர்சமாக இருந்தவர் மறைந்த தோழர் கோமல் சுவாமிநாதன். அவர் வெற்றிகரமாக நடத்தி வந்த சுபமங்களா வகுத்துத் தந்த பாதையில் அனைத்துத் தரப்பினருக்கும் தளங்கள் அமைத்துக் கொடுத்து புதிய திறமைகளை அடையாளம் கண்டு முன்வைப்பதில் எங்கள் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கிறோம்.
வடக்கு வாசல் என்னும் பெயருக்கு நான் என்றும் கடமைப் பட்டு இருப்பது அமரர் கல்கி அவர்களுக்கும் திருமதி சீதா ரவி அவர்களுக்கும். சிவகாமியின் சபதம் புதினத்தின் இரண்டாவது அத்தியாயம் வடக்கு வாசல். கல்கி வார இதழில் வடக்கில் நடப்பவை குறித்து நான் எழுதிவந்த பகுதிக்கு வடக்கு வாசல் என்ற பொருத்தமான பெயரைச் சூட்டி வெளியிட்டு வந்தார் கல்கி ஆசிரியர் திருமதி சீதா ரவி. நானே ஒரு பத்திரிகை துவங்க முடிவு செய்தபோது இந்தப் பெயர் மிகவும் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது. வடக்கு வாசல் என்னும் இந்தப் பெயருக்கு எப்போதும் நான் நன்றிக் கடன்பட்டு இருப்பது கல்கி வார இதழுக்கும் திருமதி சீதா ரவி அவர்களுக்கும்.
அச்சு இதழாக மலரும் வடக்கு வாசல் இதழை மாதம் ஒருமுறை வலைத்தளத்திலும் ஏற்றலாம் என நாங்கள் தீர்மானித்த போது அந்த இணையதளத்தைத் திறந்து வைத்து எங்களுக்குத் தனிச்சிறப்பும் பெருமையும் அளித்தவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். அவருடைய திருக்கரத்தால் மலர்ந்த வடக்கு வாசல் இணைய இதழ் இப்போது யமுனை என்கிற இணைய வார இதழையும் சுமந்து உங்களுக்காக வலையில் விரிகின்றது. உங்கள் அன்பும் ஆதரவும் ஊக்கப்படுத்தலும் என்றும் எங்களை மேம்படுத்த வேண்டும். எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
எங்களின் கடந்து போன இந்த ஐந்தாண்டுப் பயணத்தில் பல மேடு பள்ளங்களைக் கடந்து வந்திருக்கிறோம். எங்களுக்குக் கிட்டிய மேன்மைகள் அனைத்தையும் எங்கள் அன்பான வாசகர்கள், படைப்பாளிகள், ஆதரவாளர்கள் நண்பர்களுக்கு நெகிழ்வுடன் சமர்ப்பிக்கிறோம்.
வடக்கு வாசல் முதல் இதழில் நான் எழுதிய தலையங்க வாசகத்தை இப்போது மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அறிவுஜீவிகள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இதில் ஒன்றும் இல்லை என்று புறந்தள்ள முயற்சிக்காதீர்கள். பாமர வாசகர்கள் என்று தங்களைத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் இதன் படைப்பாளிகளை நெருங்கத் துவங்குங்கள்.
உங்களுக்காக வடக்கு வாசல் என்றும் திறந்திருக்கும்.
மிக்க அன்புடன்
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
ஆசிரியர்





